
எமது அரசாங்கத்தில் ஒருசில குறைபாடுகள் காணப்பட்டது என்பதை பகிரங்கமாக
ஏற்றுக்கொள்வதற்கு வெட்கப்படவில்லை.அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில்
தற்போது விமர்சனங்களுக்கும்,சேறு பூசல்களுக்கும்
உள்ளாகியுள்ளோம்.ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய அரசியல்
மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என முன்னாள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஒன்றிணைந்து எழுவோம என்ற தொனிப்பொருளின் கீழ் நாவலபிடி நகரில்
இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டு
கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மக்கள் கூட்டங்களில் மகிழ்வுடன் கலந்து கொள்கிறோம்.எமது அரசாங்கத்தை
ஆட்சிக்கு கொண்டு வர நாவலபிடி பிரதேச மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை
மறக்கவில்லை.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிப்பெற செய்ய மக்கள்
தயாராகவுள்ளார்கள்.அதுவே எமது பலம் எனத் தெரிவித்த அவர்
ஊடகங்கள் நாட்டுக்காக செயற்பட வேண்டும்.எம்மை விமர்சிப்பதை ஒரு தரப்பினர்
பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.நாம் வீழும் போது ஒரு தரப்பினர் எம்மை கண்டு
நகைப்பார்கள்,வெற்றி பெறும் போது வரவேற்பார்கள் இதுவே அரசியல் நிலைமையாக
உள்ளது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெரமுன அரசியல் ரீதியில் மீண்டும்
வெற்றி பெறும் என்றார்.