குருதிப் பரிசோதனைக்கான கட்டணம் அடங்கிய வர்த்தமானி வௌியீடு!

டெங்கு நோய் தொடர்பான பரிசோதனை மற்றும் இரத்த மாதிரியிலுள்ள கலங்களின் எண்ணிக்கை பரிசோதனை ஆகியவற்றுக்கு அதிக கட்டணங்களை அறவிடும் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

டெங்கு குருதிப் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் தொடர்பிலான விசேட வர்த்தமானி நேற்று (29) வௌியிடப்பட்டது.

இதனடிப்படையில், FBC பரிசோதனை எனப்படும் பூரண குருதி கல எண்ணிக்கை பரிசோதனை கட்டணமாக 400 ரூபா அறவிடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பரிசோதனைக்கு 1,200 ரூபா அதிகபட்ச கட்டணமாக அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கான குருதிப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிடப்படுவதாக பொது மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க கூறியுள்ளார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள பரிசோதனை கூடங்களில் சோதனைகளை மேற்கொண்டதன் பின்னர் புதிய கட்டணம் தொடர்பான வர்த்தமானியை வௌியிட தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டணத்திற்கு அதிகமாக கட்டணம் அறவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகமாக கட்டணங்களை அறவிடும் நிலையங்கள் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்