குடியுரிமை பறிக்கப்படும் என நினைப்பவர்களுக்கு விளக்கம் தர தயார்: நிர்மலா சீதாராமன்

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது செல்லாது எனவும் அவ்வாறு சொல்வது சட்டத்திற்குப் புறம்பானது எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் சென்னை சிட்டிஸன் மற்றும் நியூ இந்தியா ஆகிய மன்றங்கள் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் குடியுரிமை சட்டம் தொடர்பாக பேசிய நிர்மலா சீதாராமன், ’’அசாமில் நடைபெறும் தேசிய குடிமக்கள் பதிவேடு நீதிமன்ற உத்தரவால் நடைபெறுகிறது. அந்த நடைமுறை பிற மாநிலங்களுக்கு பொருந்தாது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம் .யாருடைய குடியுரிமை அந்தஸ்தையும் பறிக்கும் சட்டம் இல்லை.’’என்று தெரிவித்தார்.

”யாருடைய குடியுரிமை பறிக்கப்படும் எனக் கூறுகிறார்களோ, அவர்களிடம் விளக்கம் தர தயாராக இருக்கிறோம்,” எனவும் அவர் கூறினார்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்து அகதி முகாமில் இருப்பவர்களின் நிலை வேதனை மிகுந்தது என்று கூறிய அவர், ”இந்தியாவில் குடிமக்களாக உள்ள யாருடைய குடியுரிமை அந்தஸ்தும் பறிக்கப்படாது. பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக இருக்கும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் 1995ல் இருந்து நடைமுறையில் இருக்கிறது,” என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்துள்ளது குறித்து பேசிய அவர், ”சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது செல்லாது. அவ்வாறு சொல்வது சட்டத்திற்குப் புறம்பானது. அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தால் எந்த பாதிப்பும் இல்லை,” என்றார்.

குடியுரிமை சட்டம் தொடர்பாக தவறான கருத்துக்களைப் பேசி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடாது என்றார்.

முகநூலில் நாம்