கிளிநொச்சி வளாகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்த டக்ளஸ்; பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

நேற்று (18) காலை திறப்பு விழா நடைபெற்றது. 

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா , பீடாதிபதிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , கல்வி அமைச்சின் செயலாளர் M.N.ரணசிங்க, மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கல்வி அமைச்சர் திறப்பு விழாவுக்கு வருகை தராத நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டடத்தை திறந்து வைத்தார். 

இதனையடுத்து, கட்டட திறப்பு விழா நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கிளிநொச்சி பல்கலைக்கழக வீதியிலிருந்து பேரணியாக சென்ற மாணவர்கள், நிகழ்வு நடைபெறும் தொழில்நுட்ப வளாகத்திற்குள் நுழைய முயற்சித்த போது, நுழைவாயிலிலிருந்த பாதுகாவலர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. 

இதனையடுத்து, தொழில்நுட்ப வளாகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

பீடத்தின் செயற்பாடுகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல் திறந்து வைக்கப்படுவதாகவும், கல்வி செயற்பாடுகளுடன் தொடர்புடைய எவரேனும் கட்டடத்தை திறந்தால் தமக்கு பிரச்சினை இல்லை எனவும் அரசியல்வாதி ஒருவரை திறக்க வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர். 

கல்வி அமைச்சின் செயலாளர்  மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ஆகியோர் நிகழ்வை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேற முயற்சித்த போதிலும் மாணவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. 

கல்வி அமைச்சின் செயலாளரிடம் மாணவர்கள் தமது மகஜரை கையளித்தனர். 

இதனிடையே, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. 

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாவட்ட அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். 

இதனையடுத்து, திறப்பு விழாவில் கலந்துகொள்ளாமைக்கான காரணம் தொடர்பில் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

தாமதமாக வருகை தந்ததாகவும் வட மாகாண அமைச்சர் ஒருவர் இருக்கும் நிலையில், தாம் திறந்து வைக்க வேண்டியதில்லை எனவும் அவர் பதிலளித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்