கிளிநொச்சி ம.வி. உட்பட 15 பாடசாலைகளுக்கு ஜப்பான் நிறுவனம் கிரிக்கெட் உபகரணங்கள் அன்பளிப்பு

இலங்கையில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் இயங்கும் பாடசாலைகளுக்கு ஜப்பானில் இயங்கும் நிப்பொன் டொனேஷன் பவுண்டேஷனினால் ஒரு தொகுதி கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

வர்த்தக கிரிக்கெட் சங்க கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபத்தில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி உட்பட 15 பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்த வைபத்தில் நிப்பொன்  டொனேஷன்  பவுண்டேஷன் ஸ்தாபகர் யுமா முரனுஷி கலந்துகொண்டு கிரிக்கெட் உபகரணங்களை உரிய பாடசாலைகளுக்கு வழங்கினார்.

அங்கு பேசிய யுமா முரனுஷி, ‘எமது ஸ்தாபனம் பொதுவாக அமைதிக்கான செயற்பாடுகளிலேயே கூடுதலான பங்களிப்பு வழங்கிவருகிறது. இலங்கையில் கடந்த சில வருடங்களாக அமைதி நிலவி வருவதால் பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்து வரும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினோம். 

ஜப்பானில் பெயர் பெற்ற தொழில்நுட்ப நிபுணர் கலாநிதி ருவன் பெரேராவின் வேண்டுகோளுக்கு அமைய பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்க தீர்மானித்தோம்’ என்றார்.

கலம்போ இன்டர்நெஷனல் ஹொட்டேல்ஸ் பிறைவேட் லிமிட்டெட் அதிபரான கலாநிதி ருவன் பெரேராவின் அழைப்பை ஏற்று இந்த வருடம் முதல் தடவையாக இலங்கைக்கு வருகை தந்த முரனுஷி, தேசிய வைத்தியசாலைக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான அவசர மருத்துவ தேவைகளை வழங்கியிருந்தார்.

வர்த்தக கிரிக்கெட் சங்கத் தலைவர் நலின் விக்ரமசிங்க, இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன, இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் அணித் தலைவர் தசுன் ஷானக்க, இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத் தலைவர் திலக் வத்துஹேவா, பாடசாலை அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள், அணித் தலைவர்கள் ஆகியோரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்