கிளிநொச்சி நகரசபையும் தலை தூக்கும் காணிப் பிரச்சினைகளும்

–         கருணாகரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சிப் பிரதேச சபையும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையும்  நகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்ல, மொனராகலைப் பிரதேச சபையும் நகரசபையாக்கப்பட்டிருக்கிறது. கூடவே வவுனியா, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், கேகாலை, களுத்துறை போன்ற நகரசபைகள், மாநகர சபைகளாகின்றன.

இது மகிழ்ச்சியான சேதியே. ஆனால், இந்த மகிழ்ச்சிக்குப் பின்னே சில துயரமான நிலையும் உண்டு. அதிலொன்று இந்தப் புதிய நகரசபைகளின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களின் வாழும் மக்களுடைய காணி உரித்துத் தொடர்பான விசயம்.

நகரசபைகளாக்கப்படும்போது இந்தப் பிரதேசங்களில் உள்ள காணிகளுக்கு இதுவரையில் உறுதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளாத மக்கள் பாதிப்படையவுள்ளனர். இவர்கள் ஏற்கனவே அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு குறித்த காணிகளில் குடியிருந்து வருகின்றனர் .

உதாரணத்துக்கு தற்போது அனுமதி கிடைத்துள்ள கிளிநொச்சி நகரசபை எல்லைக்குள் வருகின்ற பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு காணி அனுமதி பத்திரமே அவர்களது காணிக்குரிய ஆவணமாக உண்டு. அதுவும் பலருக்கு இல்லை. ஆனால், இவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். பயிர்களை நட்டுள்ளனர். வீடுகளைக் கட்டியுள்ளனர். தொழில் முயற்சிகளை இந்தக் காணிகளில் ஆரம்பித்துள்ளனர். காடாகக் கிடந்த இந்தக் காணிகளை இன்று நகராக மாற்றிப் பெறுமதி சேர்த்துள்ளனர். இதேவேளை இந்த காணிகளுக்கு முறைப்படியான உறுதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவ்வப்போது நடக்கும் காணிக்கச்சேரிகளில் தங்கள் குடும்ப விவரம், காணி விவரம் போன்றவற்றைப் பதிவு செய்தே வந்திருக்கின்றனர். இருந்தபோதும் இவர்களுக்குரிய உறுதிப்பத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை.

இதைக்குறித்து மக்கள் தொடர்ச்சியாகவே கேள்வி எழுப்பி விசாரித்து வந்துள்ளனர். அப்பொழுதெல்லாம் பிரதேச செயலகத்திலுள்ள காணிப் பிரிவினரால் மக்களுக்குச் சொல்லப்பட்ட பதில், தாம் உரிய விவரங்களை மாகாணக் காணி ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுப்பியபோதும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே அவர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதாக இருந்தது.

மாகாணக் காணி ஆணையாளர் திணைக்களத்தைக் கேட்டால், தாம் உரிய விவரங்களை காணிகள் ஆணையாளர் பணிமனைக்கு அனுப்பி விட்டோம். ஆகவே அங்கிருந்தே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்தப் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்பதாக இருந்தது.

இதேவேளை சில விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களில் தேங்கிக் கிடப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ இந்தத் தாமதங்கள், இழுபறிகள், பொறுப்பற்ற தனங்கள் போன்ற காரணங்களால் இப்பொழுது பாதிப்பின் வளையத்துக்குள் சிக்குண்டிருப்பது மக்களே. அதிலும் எளிய – வறிய நிலையில் உள்ள மக்களே.

ஏனென்றால், நகரசபைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டால் இவ்வாறு காணி அனுமதி பத்திரத்தை மட்டும் வைத்திருக்கும் மக்களின் காணி அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுவிடும். பதிலாக அவர்களது குறித்த காணிகள் லீசிங் முறையில் அதாவது நீண்ட காலக் குத்தகை என்ற அடிப்படையில் வழங்கப்படும். இதுவே சட்டமாகும்.

உதாரணமாக கிளிநொச்சி நகரின் சுற்றுப்புறத்திலுள்ள  திருநகர், தொண்டமான் நகர், பொன்னகர் போன்ற கிராமங்களில் உள்ள அரை ஏக்கர் காணியின் குத்தகை மதிப்பீடு 30 இலட்சம் எனச் சொல்லப்படுகிறது. ஒரு கூலித் தொழிலாளி இதனை எவ்வாறு செலுத்தி தனது காணியை தக்க வைத்துக்கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார் ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வன். அவர் கூறுவது முற்றிலும் சரியே.

ஏனென்றால் இவ்வாறான பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களில் ஒரு தொகுதியினர் அரசாங்கத்தின் மூலம் வெவ்வேறு காலகட்டங்களில் உத்தியோக பூர்வமாகக் குடியேற்றப்பட்டவர்கள். அவர்களுக்குப் பெரிய சிக்கல்களில்லை. உரிய முறையில் அதற்குரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

அடுத்த தொகுதியினர் தென்பகுதியிலிருந்தும் மத்திய மலைநாட்டிலிருந்தும் வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்து குடியேறியோர். இவர்களுக்கு உரிய முறையில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவோ உரிய ஆவணங்கள் கொடுக்கப்படவோ இல்லை. பல கிராமங்களில் தாமாகவே காடுகளை வெட்டிக் குடியேறியோர். ஆனால் பின்னர் இந்தக் குடியிருப்புகள் அங்கீகரிக்கப்பட்டு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. இருந்தும் உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. அதற்கான பதிவுகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் முழு அளவில் பாதிக்கப்படவுள்ளனர்.

இதைப்போல இன்னொரு தொகுதியினர் உள்ளனர். இவர்கள் யுத்தத்தின் காரணமாக பிற மாவட்டங்களிலிருந்தும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே உள்ளுரில் இடம்பெயர்ந்து குடியேறியோர். இவர்களுக்கும் அனுமதிப்பத்திரம் மட்டுமே உண்டு. உறுதிப்பத்திரங்கள் இல்லை.

உறுதிப்பத்திரங்களை வழங்குவதில் சுணக்கம் அல்லது காலதாமதம் ஏற்படுவதற்குக் காரணம், யுத்த நிலைமை என்று ஒரு ஓய்வு பெற்ற காணி அதிகாரி கூறுகிறார். இந்தக் காரணத்தையும் நாம் மறுக்க முடியாது.

அப்படியென்றால் இப்பொழுது இந்த மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரத்தை உறுதியாக்கும் நடவடிக்கைகள் ஒரு விசேட ஏற்பாட்டின் மூலம் துரிதமாக்கப்பட வேண்டும். இதற்கான அமைச்சரவை அல்லது பாராளுமன்றத் தீர்மானத்தை குறித்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்வது அவசியம். அத்துடன் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவினரும் இதைக்குறித்து கூடுதல் கவனத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிப்படைவர். எதையுமே செய்ய முடியாமல் திணறுவர்.

இதேவேளை கிளிநொச்சி நகரில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குரிய காணியை தனியார் ஒருவருக்கு வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பரிந்துரை செய்திருக்கும் விடயம் மிகுந்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. உண்மையில் இந்த விடயத்தில் ஆளுநரின் தீர்மானம் முற்றிலும் தவறானது. குறித்த காணியானது கடந்த காலத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் களஞ்சியமாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. அதாவது யுத்த காலம் வரையில். அப்பொழுது பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம், ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம் போன்றவற்றுக்கான எரிபொருள் புகையிரதத்தின் மூலம் எடுத்து வரப்பட்டு இந்தக் களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்தப்படும். புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இதன் அமைவிடம் இருப்பது இதற்கு வசதியாகவும் இருந்தது. அத்துடன் மறு பக்கத்தில் ஏ9 பிரதான வீதியும் இருக்கிறது.

யுத்தத்தின் போது களஞ்சியம் பாதிக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் இல்லாது போனது. யுத்தம் முடிந்து மீள் குடியேற்றம் நடந்த போது இந்தக் காணியை (களஞ்சியத்துக்குரித்தான சொத்தினை) அரசியல் செல்வாக்குடன் தனியார் ஒருவர் ஆக்கிரமித்துக் கொண்டு, அதில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைத்தார். இதற்கு மக்கள் அப்பொழுது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இருந்தும் அரசியற் செல்வாக்கின் காரணமாக அது பெரிய அளவில் எடுபடவில்லை.

கிளிநொச்சி நகரத்தின் கேந்திரப் பகுதியில் – கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில்) அமைந்துள்ள இந்தக் காணியை விடுவிக்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கேட்டு வருகிறது. இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட காணி பயன்பாட்டுக் குழுக்கூட்டத்திலும் பேசப்பட்டு 2020.09.17 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் 2022.01.13 இல் இது பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனாலும் இவையெல்லாவற்றையும் மீறியே வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா செயற்பட முயற்சிக்கிறார். இது ஆளுநரின் தவறான செயற்பாடாகும்.

ஏற்கனவே முன்னாள் ஆளுநர் றெஜினோல்ட் கூரே நகரின் மையத்திலிருந்த (நீதி மன்றத்தைச் சுற்றிருந்த) 20 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியை தாரை வார்த்து விட்டார்.

யுத்த காலத்தில் அத்துமீறி குறித்த காணிகளை அபகரித்திருந்தவர்களுக்கு அந்தக் காணியை எந்தக் கேள்வியும் முன் யோசனையும் இல்லாமல் வழங்கினார் கூரே. இதை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினர், அரசியற் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுஅமைப்புகள், காணிப் பயன்பாட்டுக்குழு எவையும் கண்டு கொள்ளாதிருந்தன. உண்மையில் நகர அபிவிருத்திக்கு மிகமிகமிக அவசியமான காணிகள் இவை.

குறித்த காணிகளில் இருந்தோருக்கு மாற்றுக் காணிகளை வழங்கியிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை கூரே. இதற்கான வழிகாட்டலைச் செய்யவில்லை பாராளுமன்ற உறுப்பினர்களும் மண்ணின் மைந்தர்களும்.

அதைப்போலவே இப்பொழுத பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்க வேண்டிய காணிகளை தாரை வார்க்க முற்படுகிறார் ஜீவன்  தியாகராஜா. இதற்கு எதிராக மக்கள் திரள வேண்டும். இது மக்களின் காலம். கொழும்பு காலிமுகத்திடலில்தான் மக்கள் போரா முடியும் என்றில்லை. கிளிநொச்சியிலும் போராடலாம்.

ஆகவே, இந்தக் காணியை மீட்கும் நடவடிக்கையை பொது மக்களும் மக்கள் அமைப்புகளும் ஏனைய அரசியற் தலைமைகளும் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பா. உ சிறிதனும் இந்த விடயத்தில்  கூடுதல் கவனம் கொள்வது அவசியமாகும்.

இந்தக் காணி விடயத்தில் மட்டுமல்ல, கிளிநொச்சி நகரின் சுற்றுப் புறத்தில் குறிப்பாக கிளிநொச்சி பழைய கச்சேரியின் சுற்றுப்புறச் சூழலில் உள்ள காணிகளையும் காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அந்தக் காணிகளை தாரை வார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நில அளவைத்திணைக்களத்துக்கு அளவை செய்யுமாறு பிரதேச செயலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணியும் போனால்  கிளிநொச்சி நகரத்தில் பொதுப்பயன்பாட்டுக்கான காணியே இல்லை. ஆக இராணுவத்தினரின் வசமுள்ள காணியே மிஞ்சியுள்ளது. அதாவது மிஞ்சியுள்ளது என்பதே இப்பொழுது ஆறுதல். அங்கே படைத்தரப்பு இல்லை என்றால் அவற்றையும் ஆளுநர்களும் அரச அதிகாரிகளும் யார் யாருக்கெல்லாமோ தாரை வார்த்திருப்பார்கள்.

ஆகவே இதில் – இந்தக் காணி மீட்ப நடவடிக்கையில் அரசியல் வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகளின்றி அனைவரும் பொது நோக்கோடு – “எதிர்காலக் கிளிநொச்சி” என்ற சிந்தனையோடு செயற்படுவது அவசியமாகும். குறிப்பாக காணிப் பயன்பாட்டு திட்டமிடற் குழுவை முதலில் பலப்படுத்த வேண்டும். அதோடு அதன் வழிகாட்டலில் உரிய நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்வது அவசியம். புதிய ஜனாதிபதியின் கவனத்திற்கும் இவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அப்பால் மக்கள் களத்தில் இறங்குவது அவசியம்.

காணி அபகரிப்பு என்பது படையினரால் மேற்கொள்ளப்படுவதை விட இந்த மாதிரியானவர்களால் அபகரிக்கப்படுவதே அதிகம். இதுதான் மிகப் பயங்கரமானது. சத்தம் சந்தடியின்றி நடக்கின்ற பெரும் கொள்ளை. படையினர் அபகரிக்கின்ற காணி இன்னொரு சூழலில் ஒரு அரசியல் தீர்மானத்தின்படி பொது மக்கள் பயன்பாட்டுக்கு எப்போதாவது வரும். இவை வரவே வராது. போனால் போனதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்