கிளிநொச்சி கலைஞர்களின் ‘மண்குளித்து’ நாடகம் 2020ம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக தெரிவு- 13 தேசிய விருதுகள்

கிளிநொச்சி கலைஞர்களின் ‘மண்குளித்து’ நாடகம் 2020ம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக முதல் இடத்தைப் பெற்றதுடன், 8 பிரிவுகளில் 13 தேசிய விருதுகளை வென்றது.

இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச நாடக குழு இணைந்து 2020ம் ஆண்டின் 48வது அரச நாடக விழா கடந்த பெப்ரவரி மாதம் நடத்தியிருந்தது.

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட ‘மண்குளித்து’ என்ற நாடகம் கடந்த 26.02.2020 அன்று எல்பிஸ்டன் திரையரங்கில் போட்டிக்காக அரங்கேறியது.

குறித்த போட்டி நிகழ்வு மூன்று சுற்றுக்களாக இடம்பெற்றது. குறித்த நாடக போட்டிக்காக இவ்வருடம் 32 குறுநாடக பிரதிகளுடன் 20 நெடுநாடக பிரதிகளும் போட்டிக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தன.

இவற்றில் 5 குறுநாடகங்களுடன் 2 நெடுநாடகங்களும் இறுதி சுற்றுக்கு தெரிவாகியிருந்தது. இறுதி சுற்றின் போட்டி முடிவுகள் அறிவிக்கும் நிகழ்வு 11.09.2020 அன்று மாலை 6 மணிக்கு கொழுப்பு தாமரைத்தடாகம் கலையரங்கில் பிரமாண்டாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி கலைஞர்களால் அரங்கேற்றப்பட்ட அருணாசலம் சத்தியானந்தன் மற்றும் பிரதீப்ராசா ஆகியோரின் நெறியாள்கையில் உருவான ‘மண்குளித்து’ நாடகம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக முதல் இடத்தை பெற்றுக்கொண்டது. 8 பிரிவுகளில் 13 தேசிய விருதுகளையும் குறித்த குழு பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.

சிறந்த தயாரிப்பு, இயக்கம், நாடக நயனம், ஒளியமைப்பு, இசை, நடிப்பு, அரங்க முகாமைத்துவம், சிறந்த நாடக எழுத்துருவாக்கம் ஆகியவற்றுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த நாடகமானது கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி 50க்கு மேற்பட்ட கலைஞர்களுடன் போட்டியிட்டிருந்தது. 48 வருட தேசிய நாடக விழா மரபில், கிளிநொச்சி மாவட்டம் முதல் தடவையாக பங்குபற்றியிருந்தது என்பதுடன், போட்டியிட்ட முதல் தடவையிலேயே பல தேசிய விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாக உள்ளது.

குறுநாடக பிரிவில் இதே குழுவைச் சேர்ந்த சிறிகாந்தவின் நெறியாள்கையில் உருவான ‘அங்கீகாரம்’ நாடகம் ஆண்டின் சிறந்த தயாரிப்பாக முதலாமிடம் பெற்றதுடன், சிறந்த இயக்குனர், தயாரிப்பு, மேடையமைப்பு, பிரதி, நடிப்பு, ஒளியமைப்பு பிரிவுகளில் விருதுகளையும் வென்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய விருதுகளை மாவட்டத்திற்கு பெற்று கொடுத்த கலைஞர்களை கௌரவிக்கம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்