கிளிநொச்சியில் பொது மக்கள் கட்டுப்பாடுகளை மீறக் கூடாது – சுகாதார துறையினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை இருநூறைக் கடந்து வந்த நிலையில்  கடந்த சில நாட்களாக  தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 க்குள்
காணப்படுகிறது. எனவே, இந்த எண்ணிக்கை குறைவினை  மாத்திரம் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது எனக் கருதி பொது மக்கள் தங்களின் சுய கட்டுப்பாடுகளை மீறி நடக்க கூடாது என சுகாதார தரப்பினர் கோரியுள்ளனர்.


நோய்த் தொற்று முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரும்வரை பொது மக்கள் அனைவரும் சுகாதார பாதுகாப்பு, கட்டுப்பாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

சாதக பெறுபேற்று வீதம் (Test Positivity Rate or TPR)

ஒரு நாளில் குறித்த பிரதேசத்தில் எத்தனை தொற்றாளர்கள்
கண்டுபிடிக்கப்பட்டனர் என்ற எண்ணிக்கையினை மட்டும் கருத்தில் கொண்டு அப்பிரதேசத்தில் கொரோனா தொற்றானது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா என
தீர்மானிக்க முடியாது.கொரோனா தொற்றானது ஒரு பிரதேசத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதைக் குறிப்பதற்கான நியமங்கள் உலக சுகாதார நிறுவனத்தினால் 2020 இல்
பிரசுரிக்கப்பட்டன.  அவ்வாறு பிரசுரிக்கப்பட்ட நியமங்களின் அடிப்படையில் ஒரு பிரதேசத்தில் சாதக பெறுபேற்று வீதமானது 5 வீதத்திலும் குறைவானதாக
இருந்தால் அது அந்தப் பிரதேசத்தில் தொற்றானது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதைக் குறிக்கும் ஒரு குறிகாட்டியாக கொள்ளப்படுகிறது.இந்த சாதகப் பெறுபேற்று வீதத்தினை பெறுவதற்கான சூத்திரம் மிக இலகுவானது. கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களது எண்ணிக்கையினை, செய்யப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கையினால் பிரித்து வரும் விடையினை, 100 இனால் பெருக்க வேண்டும். உதாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று 100
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 10 முடிவுகள் சாதகமாக வந்திருந்தால் (அதாவது 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தால்)
இதற்குரிய சாதகப் பெறுபேற்று வீதம் இவ்வாறு அமையும்: (10/100) x 100 =10% , அதாவது சாதகப் பெறுபேற்று வீதம் 10 ஆகும்.

இந்த சாதகப் பெறுபேற்று வீதம் தினமும் கணிக்கப்பட முடியும் எனினும் உலக சுகாதார நிறுவனம் வாராந்தம் கணிப்பதையே பரிந்துரைத்துள்ளது. அதனால்
பொதுவாக ஒரு வாரத்தில் மொத்தமாகச் செய்யப்பட்ட பரிசோதனைகள் மற்றும் அப்பரிசோதனைகளில் சாதகமாக வந்த முடிவுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை கொண்டு வாராந்தம் சாதகப் பெறுபேற்று வீதம் கணிக்கப்படுகிறது.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தின் கடந்த வாரத்திற்கான தரவுகள் மற்றும் சாதகப் பெறுபேற்று வீதம் ஆகியன பின்வருமாறு அமைந்துள்ளன.

01.09.2021 இலிருந்து 07.09.2021 வரை செய்யப்பட்ட மொத்த பரிசோதனைகள் (பீசிஆர் மற்றும் துரித அன்ரிஜன்) 2163

01.09.2021 இலிருந்து 07.09.2021 வரை சாதகமான பெறுபேறுகள்/இனம் காணப்பட்;ட தொற்றாளர்களின்  மொத்த எண்ணிக்கை 894 சாதகப் பெறுபேற்று வீதம் 41.3


26.06.2021 அன்று செய்யப்பட்ட மொத்தப் பரிசோதனைகள் 591
26.06.2021அன்று பெறப்பட்ட சாதகமான பெறுபேறுகள்/இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் 267 சாதகப் பெறுபேற்று வீதம் 45.2

06.09.2021 அன்று செய்யப்பட்ட மொத்தப் பரிசோதனைகள் 492
06.09.2021அன்று பெறப்பட்ட சாதகமான பெறுபேறுகள்/இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் 153 சாதகப் பெறுபேற்று வீதம் 31.1


07.09.2021 அன்று செய்யப்பட்ட மொத்தப் பரிசோதனைகள் 343
07.09.2021அன்று பெறப்பட்ட சாதகமான பெறுபேறுகள்/இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்; 104 சாதகப் பெறுபேற்று வீதம் 30.3

100 பரிசோதனைகள் செய்யப்பட்டால் அதில் 33 பரிசோதனை முடிவுகள் சாதகமாக வரும் நிலையே தற்போதும் உள்ளது.

ஒரு பிரதேசத்தில் சாதக பெறுபேற்று வீதமானது 5 வீதத்திலும் குறைவானதாக இருந்தால் அது அந்தப் பிரதேசத்தில் தொற்றானது கட்டுப்பாட்டிற்குள்
இருப்பதைக் குறிக்கும் ஒரு குறிகாட்டியாக கொள்ளப்படுகிறது.

நோயால் இறக்கும் வீதம் (Case Fatality Rate)

கொரனா பரவலின் இன்னொரு குறிகாட்டியாக நோயால் இறக்கும் வீதம் அமைந்துள்ளது. அதாவது இனங்காணப்படும் தொற்றாளர்களது மொத்த எண்ணிக்கையால் அவர்கள் மத்தியில் ஏற்படும் இழப்புகளின் எண்ணிக்கையினைப் பிரித்து வரும்
விடையினை, 100 இனால் பெருக்குவதன் மூலம் இந்த நோயால் இறக்கும் வீதம் கண்டறியப்படுகிறது.

இதற்கு அமைய கடந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் 0.3% ஆக இருந்த நோயால் இறக்கும் வீதம் இம்மாதத்தின் முதல் வாரத்தில் 1.3% ஆக அதிகரித்துள்ளது. அதாவது இனங்காணப்படும் 100 தொற்றாளர்களில் ஒருவர் மரணிக்கிறார்.

எனவே கிளிநொச்சியில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவதை
மட்டும் வைத்து கிளிநொச்சியில் கொரானா கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக மக்கள் தவறாகப் புரிந்து கொண்டு சுயகட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத்
தளர்த்தக் கூடாது.

எமது அன்பிற்குரியவர்களது உயிர்களை காப்பாற்றுவதற்காக நாம் அவசியம்
இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிதல், கை கழுவுதல், நபர்களுக்கு இடையில் ஒரு மீற்றர்
இடைவெளியினைப் பேணுதல் ஆகிய முற்பாதுகாப்பு நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். எனவும்  சுகாதார தரப்பினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்