கிளிநொச்சியில் சிஸ்டத்தை (System) குழப்புகின்றவர்களால் சிஸ்டம் தோல்வி – மு. தமிழ்ச்செல்வன்

‘கிளிநொச்சி மாவட்டம் எரிபொருள் விநியோகத்தில் இதுவரை ஒருசிஸ்டத்திற்குள்
வரவில்லை இதனால் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுவருகின்றார்கள்‘  என
ஒரு குறிப்பிட்ட தரப்பினர்தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்து
வருகின்றார்கள்.மாவட்டத்தில் எரிபொருள் பங்கீடு மற்றும் விவசாயிகளுக்கான
உர விநியோகம்உள்ளிட்ட விடயங்களில் ஒரு பொறிமுறையை ஏற்படுத்தி
நடைமுறைப்படுத்தவில்லைஎன்பது மேற்படி தரப்பினரது குற்றச்சாட்டாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் எரிபொருள் பங்கீட்டிற்கான
அட்டையினை  பெற்றுக்கொள்ளுமாறு மாவட்டச் செயலகம் பிரதேச செயலகங்கள்
வழியாக அனைத்து கிராம அலுவலர்கள் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக
அறிவித்தல்களை வழங்கியிருந்தது.  திணைக்களங்களில் கடமையாற்றுகின்றவர்கள்
தங்கள் தங்கள் திணைக்களங்கள் ஊடாக பெயர் விபரங்கள் உள்ளிட்ட விபரங்களை
அனுப்பி தங்களுக்குரிய அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவித்தல்
வழங்கப்பட்டிருந்தது.

இந்த அறிவித்தல்களை பின்பற்றி பல திணைக்களங்கள் தங்கள் திணைக்களங்களில்
பணியாற்றும் உத்தியோத்தர்களுக்கு அட்டைகளை பெற்றுக்கொடுத்துள்ளனர். சில
கோட்டக் கல்வி அலுவலகங்களும் தங்களின் ஆசிரியர்களின் விபரங்களை அனுப்பி
அவர்களுக்கான அட்டைகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.  அவ்வாறே பொது மக்களும்
கிராம அலுவலர்களிடம் அவர்கள் கோரிய ஆவணங்களை சமர்பித்து தங்களுக்குரிய
அட்டைகளை பெற்றுள்ளனர். ஒரு சில கிராம அலுவலர்கள் வினைத்திறன் இன்றி
காணப்படுகின்றனர் என்பது உண்மையாயினும் அவர்கள் தொடர்பில் பொது மக்கள்
மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து சம்மந்தப்பட்ட
கிராம அலுவலர்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

 சிஸ்டத்தை இவ்வாறு ஒழுங்குப்படுத்தி அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கு
மாவட்டத்தின் அதிகாரிகள் பணியாற்றி வருகின்ற போது இந்த சிஸ்டத்திற்குள்
தங்களை உள்வாங்கிகொள்ள அக்கறை காட்டாத அல்லது சிஸ்டத்திற்குள்  தங்களை
உட்படுத்திக்கொண்டால் தங்களின் சட்டவிரோத செயற்பாடுகளை தொடர்ச்சியாக
மேற்கொள்ள முடியாது  போய்விடும் என கருதுகின்றவர்கள் அல்லது எல்லாமே
தாங்கள் இருக்கிற இடத்தில்  இலகுவாக கிடைக்க வேண்டும் என்ற மனநிலையில்
இருக்கின்றவர்கள் சிஸ்டத்தை குழப்புகின்ற பணிகளை கச்சிதமாக
மேற்கொண்டுவருகின்றனர். இதற்காக  அவர்கள் மாவட்ட மேலதிகாரிகளின் மீது
கண்மூடித்தனமாக குற்றச் சாட்டுகளை முன் வைக்கின்றனர்.இந்த நெருக்கடியான
காலத்தில்  மக்களுக்காக தங்களின் அதிகார வரம்புக்குட்பட்டு
மேற்கொள்ளவேண்டிய பணிகளை பல அதிகாரிகள் மேற்கொண்டே வருகின்றார்கள். ஆனால்
அவர்கள் அரசியல்வாதிகள் போன்று  தாஙகள் செய்த செய்யாக பணிகளை
விளம்பரபடுத்திக்கொள்வதில்லை.

மூன்றில் இரண்டு பகுதியினர் சிஸ்டத்தை பின்பற்றுகின்ற போது ஏன் ஒரு
பகுதியினரால் மட்டும் அதனை பின்பற்ற முடியாது?  எரிபொருள் நிரப்பு
நிலையங்களுக்கு முன் பலர் அட்டைகளுடன் தங்களின் வாகனத்தின் இறுதி
இலக்கத்திற்கு அமைவாக வரிசையில் நின்றகின்ற போது ஏன் அட்டைகள் இன்றி ஒரு
தரப்பு குழப்பத்தை விளைவிக்க வேண்டும்? சிஸ்டம் இதுதான் என இரண்டு
மாதங்களாக ஊடகங்கள்  மற்றும் சமூக ஊடகங்கள்  கிராம அலுவலர்கள் உள்ளிட்ட
அதிகாரிகள் மூலம் அவிறித்தல் வழங்கப்பட்ட பின்னரும் ஏன் அதனை அவர்கள்
கடைபிடிக்கவில்லை?

இக் கேள்விகள் ஒருபுறமிருக்க கடந்த வியாழக் கிழமை வாகனங்களின் இறுதி
இலக்கங்களான 3,4,5 ஆகிய இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள்
விநியோகம் மேற்கொள்ளப்பட்ட போது முதல் நாள் என்பதனால் அட்டைகள் கவனத்தில்
கொள்ளப்படவில்லை.இதனால் கிளிநொச்சியில் பலர் ஒரு எரிபொருள் நிரப்பு
நிலையத்தில் எரிபொருளை பெற்றுவிட்டு அப்படியே சென்று அடுத்த எரிபொருள்
நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றனர் அல்லது அப்படியே மீண்டும்
வரிசையின் பின்னால் வந்து நின்றமையும்  பலர் அவதானித்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி ஒரு சிலர் தங்களுடைய  வாகன இலக்கத் தகட்டை  கழற்றி
பிரிதொரு வாகனத்திற்கு மாற்றியமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் ஏனைய மாவட்டங்களை விட கிளிநொச்சியில் எந்த பொறிமுறையை
உருவாக்கினாலும் அல்லது எந்த சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தினாலும் அதனை
குழப்புவதற்கு என்றே ஒரு தரப்பு காணப்படுகிறது. இந்த தரப்பு எல்லா
மட்டங்களிலும் உண்டு. இதற்குள் சில  அதிகாரிகள் அரசியல்வாதிகளும்
அடங்குகின்றனர். இந்த தரப்புக்கள்  அதிகார மற்றும்  அரசியல்
செல்வாக்குகள் அல்லது ரவுடித்தனம் கொண்ட தரப்பாகவும் காணப்படுகிறது.
சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றவர்களும் இந்த தரப்பினரின் பக்கமே
நிற்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக எந்த
சிஸ்டத்தை உருவாக்கினாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் அது தோல்வி
காண்கிறது.

 எனவே இவ்வறான செயற்பாடுகள் சட்டத்தை மதித்து சிஸ்டத்திற்குள் தங்களை
உட்படுத்திக்கொண்டு நடப்பவர்களை பெரிதும் பாதிக்கிறது. இதன் காரணமாகதான்
மாவட்ட நிர்வாகம் எரிபொருள் அட்டைகளை கட்டாயமாக்கியது. ஆனால் நேற்றும்
அட்டைகளை பெற்றுக்கொள்ளாத சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்
நின்று குழப்பங்களை விளைத்து தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள
முயற்சித்துள்ளனர். இதனால் உரிய தரப்பினரால் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்த
முடியாது நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிலர்  தங்களுக்கும் மாபியாக்களுக்கும்
இடைய உள்ள வியாபாரம் காரணமாக சிஸ்டத்தை நடைமுறைப்படுத்துவதிற்கு எதிராக
செயற்படுகின்றனர். இதற்காக  அவர்கள்  தாங்கள்  பொது மக்களிடமிருந்து
தப்பித்துகொள்வதற்கு மாவட்டத்தின் உயர் அரச அதிகாரியை விரல் நீட்டி
காட்டிவிட்டு தப்பிக்கொள்கின்றகின்றனர். வேலியும் பயிரை பாதுகாப்பதற்கு
பதிலாக மாடுகளை பாதுகாப்பதில் அக்கறையாக இருக்கிறது. அனைவரும் இணைந்து
கூட்டுப்பொறுப்பாக செய்ய வேண்டிய விடயங்களில் ஒருவரை மாத்திரம் விரல்
நீட்டி குற்றம் சுமத்திவிட்டு  பலரும் பொறுப்பிலிருந்து நழுவிச்
செல்கின்றனர்.

மாபியாக்களை கட்டுப்படுத்தும் வகையில் காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி
வரையும்  எரிபொருள் வழங்க வேண்டும் என்ற தீர்மானம் மாவட்ட மட்டத்தில்
கூட்டுத் தீர்மானமாக எடுக்கப்பட்ட பின்னரும் அதனை நடைமுறைப்படுத்த சில
எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சேர்ந்தவர்கள் மாபியாக்களுடன் இணைந்து
தடையாக இருந்து வருகின்றனர். இவர்களின் செயற்பாடுகளே பொது மக்களையும்
பாதிக்கிறது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் கிளிநொச்சியின் அனைத்து எரிபொருள்
நிரப்பு நிலையங்களும் மாபியாக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதனை எவரும்
மறுக்க முடியாது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாம் என்பது
போல நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை  இவர்கள் தங்களுக்கு சாதகமாக
பயன்படுத்திக்கொண்டனர். ‘எரிகிற வீட்டில் பிடுங்குகிற கொள்ளி இலாபம்’
என்ற
கதையாய் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற தரப்பும் சட்டவிரோதிகளுடன் நின்றார்கள்.

எந்த இட த்திலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற போது அங்கு  அதற்கு
எதிராக குரல் கொடுகின்றவர்கள் யார் என கூர்ந்து அவதானித்தால் இது நன்கு
புலப்படும் . அவர்கள் எந்த விடயத்தையும் சட்டப்படி செய்ய
விரும்பாதவர்களாக அல்லது சட்டத்திற்கு புறம்பாகவே வாழ்கின்றவர்களாக
இருப்பர்.இதுவே கிளிநொச்சியின் எரிபொருள் விநியோகித்தில் தொடர்ந்தும்
குழப்பங்கள் நிலவிவர காரணமாக அமைந்துள்ளது.

இதனை தவிர கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான  இந்திய கடன்
வசதியால் பெறப்பட்ட யூரியா உரம் போதியளவில் கிடைக்காமை தொடர்பில்
எழுந்தமானமாக பல்வேறு விமர்சனங்களும்    குற்றச்சாட்டுக்களும் மாவட்ட
செயலகத்தை குறிவைத்தே முன்வைக்கப்பட்டன . உண்மையிலேயே உரிய அளவில் உரம்
கிடைக்காமைக்கு மாவட்டத்தின் கமக்கார அமைப்புக்களே காரணம் என்பது
அனைவருக்கும் தெரியும். அடுத்தது  சம்மந்தப்பட்ட துறைசார்ந்த திணைக்களம்.
ஆனால் இவற்றின் உண்மைத்தன்மையினை அறியாது அல்லது அறிந்தும் அறியாததுபோல
மாவட்டத்தின் உயர் அரச அதிகாரியைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி
விமர்சிக்கும் நிலைமை அதிகரித்துச் செல்கிறது.

எப்பொழுதும் சட்டவிரோதமாக செயற்படுகின்றவர்கள் சட்டத்திற்குள் உட்பட்டு
நடக்கவோ வாழவோ முன்வரமாட்டார்கள். அவர்கள் சட்டத்தின் படியான
சி்ஸ்டத்திற்குள் தங்களை உட்புகுத்த மாட்டார்கள் எப்பொழுதும் தங்களுக்கு
என ஒரு சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தவே  முயற்சிப்பார்கள் அதற்காக
குழப்பங்கள்,  ரவுடித்தனங்கள் ஏன் வன்முறைகள் வரையும் கூட செல்வார்கள்.

இவர்கள்தான் தாங்கள் நீதிமான்கள் போன்று முன்னின்று மக்களைத் தூண்டி
குழப்பத்தை உருவாக்குவார்கள். சிஸ்டத்திற்குள் சென்றால் தங்களுடைய
கறுப்புச் சந்தை வியாபாரம் இல்லாமல் போய்விடும் என்பதுவே அதற்கான காரணம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அப்பட்டமாக ‘பத்துவீதப்  பகல்கொள்ளையர் அரசாண்ட’
 காலப்பகுதியில் ஆரப்பாட்டமோ போராட்டமோ செய்யும்படி மக்களை இவர்கள்
கோரினார்களா?. அல்லது அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தார்களா?? இதுவே
இந்த ‘ரெடிமேற் மக்கள் காவலர்கள்’ யார் என்பதை வெளிப்படுத்த போதுமானது.

மேலும் இவ்வாறான நெருக்கடி நிலைமைகள் ஏற்படுகின்ற போது மக்கள்
பிரதிநிதிகளும் தங்களின் பொறுப்புக்களை ஏற்று நடவடிக்கைகளில் இறங்க
வேண்டும். ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகாரத்தில் இருக்கும் மக்கள்
பிரதிநிதிகளிடம் அதனை காணமுடியவில்லை.  அதிகாரிகளை, மக்கள் அமைப்பு
பிரதிநிதிதிகளை ஒருமுகப்படுத்தி சிஸ்டத்தை உருவாக்கி
நடைமுறைப்படுத்துவதற்கும் மக்கள் பிரநிதிகள் அல்லது மாவட்டத்தில்
அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகப் ‘படங்காட்டுபவர்கள்’
பங்களிப்புச் செய்ய வேண்டும். ஆனால் இங்கு அது எதுவும் நடப்பதாக இல்லை.
இதன் ஒட்டுமொத்த விளைவே மாவட்டத்தில் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு
சிஸ்டத்தை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கே பொது மக்கள் தங்களின் எதிர்ப்புக்களை காட்டவேண்டியது அல்லது
எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தவேண்டியது  சிஸ்டத்தை குழப்புகின்ற
சட்டவிரோதிகளுக்கு எதிராகவே அன்றி மக்களுக்கு உதவ முற்படும்
அதிகாரிகளுக்கு எதிராக அல்ல. அதுவே மாவட்டத்தினை உய்வின் வழி கொண்டு
செல்லும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்