கிளிநொச்சியில் ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ள பெறுமதிவாய்ந்த நோயாளர் காவு வண்டிகள்

மத்திய சுகாதார அமைச்சினால் அவரச நோயாளர் காவு சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 46 பென்ஸ் மற்றும் போட் ரக நோயாளர்
காவு வண்டிகள் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்டிருந்தன.

இவற்றிற்கு உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் படி சுப்பர் டீசல் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இவற்றிற்கான சுப்பர் டீசலைப் பெறுவதில் கடுமையான சிரமங்களை சுகாதார திணைக்களம் எதிர்கொண்டுள்ளது. இதனால் சில மாவட்டங்களில் குறித்த நோயாளர் காவுவண்டிகள் தற்காலிகமாக
பாவனையில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பாராட்டத்தகுந்த விதமாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார பணிப்பாளர் தமது மாவட்ட அரச அதிபர் ஊடாக சுப்பர் டீசலினைப் பெறுவதற்கு விசேட பொறிமுறையினை ஏற்படுத்தியுள்ளார். அதனால் முல்லைத்தீவில் சுப்பர் டீசலில்
இயங்கும் நோயாளர் காவு வண்டிகள் தொடர்ந்து பாவனையில் உள்ளன.

இருப்பினும் கிளிநொச்சி மாவட்டத்தில் பிராந்திய சுகாதாரப் பிரிவினர் சுப்பர் டீசலில் இயக்க வேண்டிய நோயாளர் காவு வண்டிகளை சாதாரண டீசலில் இயக்கும் முடிவினை தன்னிச்சையாக எடுத்துள்ளனர் இதனால் குறித்த நோயாளர்
காவு வண்டிகளின் நீடித்த இயங்கு நிலை பாதிக்கப்படும் சூழ் நிலைமை உருவாகியுள்ளது. சாதாரன டீசல் பாவனைக்கு குறித்த நோயாளர் காவு வண்டிகளை மாற்ற வேண்டாம் எனவும் மாற்றினால் அதன் பின்னர் ஏற்படுகின்ற பழுதுகள் மற்றும் ஏனைய உத்தரவாத சேவைகளுக்கு தாம் பொறுப்பு கூற முடியாது எனத்
தெரிவித்துள்ளனர். அத்தோடு சுகாதார திணைக்களத்தின் வாகனங்களுக்கு பொறுப்பான பகுதியினரின் அனுமதியும் இன்றி கிளிநொச்சியில் குறித்த நோயாளர் காவு வண்டிகள் சாதாரன டீசலுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதனால் பெறுமதிவாய்ந்த நோயாளர் காவுவண்டிகள் செயலிழக்கும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதாரப் பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்