கிளிநொச்சியின் சமூக கட்டமைப்பு சிதைந்து செல்கிறதா?! – மு.தமிழ்ச்செல்வன்

Network of interconnected people. Interactions between employees and working groups. Social business connections. Networking communication. Decentralized hierarchical system of company. Organization

உலக்கை போகும் இடத்தை விட்டுவிட்டு ஊசி போகும் இடத்தை தேடும் கிளிநொச்சியின் சிவில் சமூகம்

13.08.2022 தென்னிலங்கையிலிருந்து வெளியாகும் செய்திகளில் கிளிநொச்சி தொடர்பிலான சுகாதார அமைச்சின் தகவல் ஒன்று அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதாவது ‘பாடசாலை செல்லும் சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் வீதமும் பாடசாலை செல்லும் சிறுமிகள் தற்கொலை செய்துகொள்ளும் வீதமும் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது’ என்பதே அந்த அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் ‘பொது அமைப்புகளும்’ ‘சமூக அக்கறை கொண்ட சிவில் சமூகக் கண்ணியவான்களும்’ பத்திரிகை அறிக்கை வெளியிட்ட அதே காலப்பகுதியில் மத்திய சுகாதார அமைச்சு மாவட்டத்தின் மிக முக்கிய சமூக பொதுச் சுகாதார அவலத்தினை வெளிப்படுத்தியிருந்து.

இது குறித்துத்  தேடிப் பார்த்தபோது மேலும் சில முக்கிய விபரங்கள் கிடைத்தன.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான உயரதிகாரிகள் குழுவினர் ஆவணி மாத ஆரம்பத்தில் வடக்கிற்கு வந்து -நான்கு நாட்கள் தங்கி- சகல மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

இந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட ஆய்வின் போது மாவட்ட சுகாதாரதுறை உயரதிகாரிகள் காண்பித்த தரவுகளில் இருந்துதான் மத்திய சுகாதார அமைச்சானது மாவட்டத்தில் நிலவும் சமூக மற்றும் பொதுச் சுகாதார அவலங்களை இனங்கண்டு கேள்வி எழுப்பியிருக்கிறது.

13வது திருத்தச் சட்டத்தின்படி சுகாதாரம் மாகாண அதிகாரங்களின் கீழ் வருகிறது. வடக்கில் யாழ் போதனா வைத்தியசாலை தவிர்ந்த சகல சுகாதார கட்டமைப்புகளும் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் வருகின்றன.

மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் உட்பட சகல விடயதானங்களும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரது ஆளுகைக்கே உட்பட்டன. மாவட்டத்தின் சுகாதார நிலை தொடர்பில் கிரமமாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரது கடமை. மாகாணத்தின் சகல பிராந்தியங்களினது சுகாதார நிலைமைகள் குறித்து கண்காணித்து வழிப்படுத்தவேண்டியது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரது கடமை.

அப்படி இருக்கையில், மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அவரது குழுவினருடன் வருகை தந்து மாவட்டத்தின் சுகாதார நிலை குறித்து மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் அறிவுரை சொல்லிச் சென்றிருக்கிறார் என்றால் அதன் கருத்து என்ன?

மாவட்டத்திலோ அல்லது மாகாணத்திலோ சுகாதார நிலை சம்பந்தமாக கிரமமான ஆய்வுகள் நடக்கவில்லை அல்லது நடந்தாலும் அவை ‘கூடிக் கதைத்துக் கலைந்து போவதாக’ இருந்திருக்க வேண்டும் அல்லவா?

இது பற்றி கிளிநொச்சியில் பல ஆண்டுகளாக கடமையாற்றும் மூத்த சுகாதார உத்தியோகத்தர் ஒருவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் “இது பெரிய இடத்து விசயங்கள். நாங்கள் கதைக்கேலாது. ஆனாலும் நீங்கள் கேட்டதில உண்மை இருக்கு. முந்தி எல்லாம் மாதம் மாதம் ‘பப்ளிக் ஹெல்த் றிவியூ மீற்றிங்’ (பொதுச் சுகாதார கலந்துரையாடல்) எண்டு பிராந்திய சுகாதாரப் பணிமனையில நடக்கிறது. அதில வச்சே புள்ளி விபரங்கள் தரவுகள் எல்லாம் அக்கு வேற ஆணி வேறயாய் ஆராய்ஞ்சு உரியவைள் உடனடியா நடவடிக்கையள் எடுப்பினம். ஆனால் இடையில் எல்லாம் மாறிப்போச்சு”.

“ஏன் மாறியது. யார் மாற்றினார்கள்?” என்று விடாமல் கேட்டபோது தயக்கத்துடன்  “யாழ்ப்பாணத்தில ஒவ்வொரு மாதமும் இப்பிடி செய்யிறேலயாம். காலாண்டுக்கு ஒருக்கா செய்தால் போதுமாம் எண்டு 2018 ஆம் ஆண்டில இருந்து மாத்திப்போட்டினம்” என்றார்.

“அதை விட முந்தி எல்லாம் நிறைய பொதுச் சுகாதார கிளினிக்குகள் மாவட்டத்தில செய்தனாங்கள். உதாரணமா கரைச்சியில மாதத்துக்கு 40 தாய்சேய் கிளினிக்குகளுக்கு மேல செய்தனாங்கள். யாழ்ப்பாணத்தில அப்பிடி செய்யிறேலயாம். அதுபடியால அதுகளையும் 2018 இல இருந்து குறைக்க சொல்லிப்போட்டினம். அதால இப்ப கன கிளினிக்குகளை மூடியாச்சு. யாழ்ப்பாணத்தில அனேகம் மத்திய தர வர்க்கம். அங்கை பிறைவேற்றுகள் (தனியார் வைத்திய நிலையங்கள்)” கூட. சனமும் பிறைவேற்றுக்குத்தான் போகும். இங்கை அப்பிடியே. சனம் அரசாங்க வைத்தியத்தைத்தானே நம்பி இருக்குது. அதுகளை விளங்காமல் எல்லாத்தையும் தலைகீழாக்கிப் போட்டினம்” என்று அடுத்த குண்டையும் போட்டார்.

“சரி. அதை விடுவோம். சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல் சரியா? என்று கேட்டபோது “அது சரியான தகவல்தான். 2019 இல் இருந்து 2021 வரையான காலப்பகுதிக்குள்ள பாடசாலைச் சிறுமிகள் கர்ப்பமடையிறது 1.2 வீதத்தால கிளிநொச்சில கூடியிருக்கு. 2021 ஆம் ஆண்டு மொத்த கர்ப்பவதியள்ல 7.2 வீதம் பாடசாலைச் சிறுமியள். அதாவது   2379 கர்ப்பவதியள்ல 171 பாடசாலைச் சிறுமிகள். இதில 6 சிறுமியள் 16 வயதை விட குறைஞ்ச வயதுடைய ஆக்கள். கண்டாவளை, பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில தான் இப்பிடி கர்ப்பம் தரிக்கிறது கூடவாயிருக்கு’ என்றார் அவர்.

“கனகாலமா ‘மிஸியாக்கள்’ (பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள்) இல்லாமல் இருந்த கிராமங்களில வேற கிராமத்தில இருந்த மிஸியாக்களின்ர மேற்பார்வையில கிராம சுகாதார உதவியாளர்கள் (கள அனுபவமும் பயிற்சியும் பெற்ற சுகாதாரப் பணி உதவியாளர்கள்) தாய் சேய் நலன் சேவையளை வழங்கிக் கொண்டிருந்தவை. 2018 இல இவையளை பழையபடி ஆஸ்பத்திரியளுக்கு போகச் சொல்லிப் போட்டினம். அதுகும் கள வேலையள் தொய்ஞ்சு போக ஒரு காரணம்” என்றார் நீண்டகாலமாக மாவட்டத்தில் கடமையாற்றும் அலுவலர் ஒருவர்.

“ஏன் அந்த கிராமங்களுக்கு மருத்துவ மாதுக்களை நியமனம் செய்துவிட்டார்களா?” என்ற கேள்விக்கு “ இல்லை. இப்பிடி கிராம சுகாதர உதவியாளர்கள் (RHA) வேலை செய்தால் அந்த இடங்களில மருத்துவ மாது வெற்றிடங்கள் இல்லை எண்டு சொல்லி புதுசா மருத்துவ மாதுக்களை நியமனம் செய்ய மாட்டினமாம் எண்டு காரணம் சொன்னவை. இது எப்பிடி எண்டால் ஒரு ஆசுப்பத்திரியில டாக்குத்தர் இல்லை எண்டு சொல்லி அட்டென்டர் மருந்து குடுத்தாராம். திடீரெண்டு அட்டண்டரை தூக்கியாச்சாம். ஏனென்டால் அட்டெண்டர் மருந்து குடுக்குறதால டாக்குத்தர் ஆளணி நிரப்புப்பட்டு போகுதாம். கடைசியா டாக்குத்தரும் வந்தபாடில்லை. அட்டெண்டரையும் மாத்தியாச்சு. ஆதால சனம் மருந்துக்கு அலைஞ்சதாம் எண்ட கதை மாதிரித்தான். ரண்டும் வெவ்வேற ஆளணி எண்ட அடிப்படை விளங்காத பெரியவை செய்த வேலை. அதால இப்ப ஊரில சனத்துக்கு மிசியும் இல்லை. கிராம சுகாதார உதவியாளரும் இல்லை. உப்பிடியான பொதுச் சுகாதாரப் பிரச்சினையள் இஞ்சாலை கூடுறதுக்கு இதுகும் ஒரு காரணம்” என்ற பதில் கிடைத்தது.

இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த கள உத்தியோகத்தர் ஒருவர் சொன்னார் “நாங்கள் இதுகளை சொல்லக்கூடாது. சொன்னால் எங்களை எதிரியளா கணிப்பினம். எல்லா அரச உத்தியோகத்தருக்கும் நாலு வருசத்துக்கு ஒருக்கா இடமாற்றம் கட்டாயம் எண்டு சொல்லி மிஸியாக்களையும் (களச் சுகாதார மருத்துவ மாதுக்களை) மாத்திச்சினம். அப்பிடி மாத்தேக்க அவையளை தலைக்கு தலை மாத்திச்சினமே தவிர அந்த உத்தியோகத்தின்ர அடிப்படையை ஒருத்தரும் கணக்கில எடுக்ககேல. முகமாலையில நிண்ட மிஸியை எடுத்து கரைச்சியில போட்டிச்சினம். கரைச்சியில நிண்ட ஆளைத்தூக்கி கண்டாவளையில போட்டிச்சினம். கடைசியில மிஸிமாரின்ர வேலைநேரம் முடிய சனம் அவயளை சந்திக்கேலாம ஆக்கியாச்சு. முந்தி எண்டா மிஸி ஊருக்குள்ள அல்லது பக்கத்து ஊரில இருப்பா. எந்த நேரமும் ஆபத்து அந்தரத்துககு கூப்பிடலாம். அவையும் ஊரில இருக்கிறதால எல்லற்ற பிரச்சினையும் அவைக்கு தெரியும். அதால சனத்துக்கு நல்ல உதவி. இப்ப அதெல்லாம் இலாமப் போச்சுது. உப்பிடி அடிப்படை விளக்கம் இல்லாமல் இடமாற்றம் செய்யிறதெண்டால் கிளாக்கர் மாரே நிர்வாகத்தை நடத்தலாமே. ஏன் டாக்குத்தர் மாரை வச்சு அரசாங்கம் நிர்வாகம் நடத்துது எண்டு விளங்கேல”

“இந்த மாதிரியான இடமாற்றம் எல்லாம் எப்போதிருந்து செய்யப்பட்டது?” என்று கேட்டதற்கு “2018 க்கு பிறகு” என்று பதில் வந்தது.

2010ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையிலான புள்ளிவிபரங்களை நோக்கும் போது ஒரு விடயம் தெளிவாகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைச் சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் வீதமானது 2010ஆம் ஆண்டில் 12 வீதமாகக் காணப்பட்டுள்ளது. இது படிப்படியாகக் குறைந்து 2018ஆம் ஆண்டில் 5.3 வீதமாகியுள்ளது. பின்னர் 2019 தொடக்கம் இந்த வீதமானது ஏறு முகத்தில் சென்று 2021இல் 7.2 வீதத்தினை எட்டியுள்ளது.

எனவே சுகாதார உத்தியோகத்தர்கள் கூறியவாறு,  2010 இல் 12 வீதமாக காணப்பட்டதிலிருந்து 2018 ஆம் ஆண்டில் 5.3 வீதமாக  பாடசாலைச் சிறுமிகள் கர்ப்பமடைதல் குறைந்ததற்கு 2010 தொடக்கம் 2017 வரை நடைமுறையில் இருந்த பொறிமுறைகளே காரணமாக இருக்க வேண்டும். பின்னர் அது 2019 இலிருந்து ஏறுமுகமாகச் செல்வதற்கு 2018 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் “சிஸ்டம்’ காரணமாதல் வேண்டும்.

இதன் கருத்து கிளிநொச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட “சிஸ்டம்” தவறான “சிஸ்டம்”என்பதல்ல. மாறாக, அது வேறொரு பிரதேசத்தில் வெற்றிகரமாக செயற்படும் சிஸ்டமாகவே இருக்க வேண்டும் என்பது புள்ளிவிபரங்கள் வழியாக தெரிய வருகிறது.

2010 இலிருந்து 2021 வரையாக காலப்பகுதியில் யாழில் பாடசாலைச் சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் வீதமானது 4.4 வீதத்திற்கும் 3.3 வீதத்திற்கும் இடையிலேயே உள்ளது. அதாவது யாழ் மாவட்டம் இலங்கையிலேயே பாடசாலைச் சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் வீதம் குறைந்த ஒரு மாவட்டமாக தொடர்ந்து சாதனை நிலைநாட்டி வருகிறது.

விஞ்ஞானபூர்வமாக நோக்கும்போது கிளிநொச்சியில் 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட “சிஸ்டம்” கிளிநொச்சிக்குப் பொருந்தாது என்பதும், அது யாழ்ப்பாணத்திற்கே பொருத்தமானது என்பதும் இவற்றின் மூலம் தௌளத் தெளிவாகிறது.

இதேவேளை சுகாதார அமைச்சின் செய்திக் குறிப்பின் படி பாடசாலை செல்லும் சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் வீதம் 2019 இலிருந்து 2021 ஆண்டு வரையான காலப்பகுதியில்  தேசிய மட்டத்தில் 0.5 வீதத்தினால் குறைவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேறு என்ன விடயங்கள் சுகாதார அமைச்சு உயரதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டன என்று அறிய மேலும் சில சுகாதார உத்தியோகத்தர்களது வாய்களை கிளறினோம்.

“என்னத்தைச் சொல்ல தம்பி. இப்ப எங்கட கருத்துகளை ஆர் கேக்கப் போகினம். கொழும்பில இருந்து வந்து சொல்லுற நிலைக்கு வந்திட்டம். கிளிநொச்சியில காசநோய், தொழுநோய் எல்லாம் பரவிக் கொண்டிருக்கு. 2021ஆம் ஆண்டு 53 தற்கொலை மரணங்கள். இந்த வருசம் இன்னும் ஆறுமாதம் முடியேல அதுக்குள்ள 25க்கு மேல தற்கொலையள். இதில பள்ளிக்கூடம்போற பிள்ளையளும் அதிகம். ஆரும் அதில அக்கறைப்படுகிற மாதிரி தெரியேல. கொழும்புக்காரர் கவனியுங்கோ எண்டு சொல்லிப்போட்டுப் போட்டினம். இங்கை உள்ளவை செய்ய வேணுமே?. இவையள் ஆளாளுக்குள்ள அடிபட்டு அரசியல் செய்யினமே தவிர சனத்தைப் பற்றி சதத்துக்கும் சிந்தனை இல்லை” என்று அங்கலாய்த்தார் ஒரு உத்தியோகத்தர். 

“அது உண்மைதான். கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரா இப்ப இருக்கிற ஐயா பொதுச் சுகாதாரத்துறையில பெரிய படிப்பு படிச்சவராம். தகுதியானவராம். ஆனால் அவரால கூட உதுகளை நேர காலத்தில கண்டுபிடிக்க முடியாம போச்சுதே” என்றார் இன்னொருவர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் ‘பொது அமைப்புகளும்’ ‘சமூக அக்கறை கொண்ட சிவில் சமூகக் கண்ணியவான்களும்’ இது சமர்ப்பணம்!

”கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான தகுதி வாய்ந்த பொறுப்பு வைத்திய அதிகாரி நியமிக்கப்படவில்லை எனவும் மாகாண சுகாதார அமைச்சினால் இதுவரை காலமும் வெற்றிடமாக காட்டப்பட்டு வந்த குறித்த பதவியின் வெற்றிடம் மத்திய அமைச்சினால் எவ்வாறு நீக்கப்பட்டுள்ளது” என்றும் “சிரேஷ்ட மருத்துவ நிர்வாக உத்தியோகத்தர் தரத்திலுள்ள ஒருவரை நியமிக்க வேண்டிய இடத்தில் தற்போது மருத்துவ உத்தியோகத்தர் தரத்திலுள்ள ஒருவரே  நியமிக்கப்பட்டுள்ளார்.” எனவும் கிளிநொச்சி சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் கேள்வி எழுப்பிக் கலந்துரையாடினர் என்ற செய்தி சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. அத்துடன் “வட மாகாணத்தின் தொடர் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக காணப்படுகின்றமையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட பொது வைத்தியசாலைக்கான தேவைகளை நிறைவு செய்வதிலும் ஆளனி வெற்றிடங்களை நிரப்புவதிலும் மாகாண அரசுகள் பின்னடைந்து வருகின்றன” என்ற குற்றச்சாட்டும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“இது உண்மையா?” என அத்துறைசாரந்த மூத்த வைத்தியர்களிடம் வினவியபோது “கேட்பவன் கேள்விச் செவியன் என்றால் எருமை மாடும் விமானம் (ஏரோப்பிளேன்) ஓட்டும்” என்று ஒரு வைத்தியர் சிரித்தபடி சொன்னார்.

“கிளிநொச்சி மட்டுமல்ல இலங்கையில் உள்ள 17 மாவட்டப் பொது வைத்தியசாலைகளிலும், ஒரு மாகாணப் பொது வைத்தியசாலையிலும் பணிப்பாளர் பதவியானது வெற்றிடமாகவே காணப்படுகிறது. அவை தவிர தேசிய பல் வைத்தியசாலை, குருநாகல மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைகள், அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலை ஆகியவற்றிற்கான பணிப்பாளர் பதவிகளும் வெற்றிடமாகவே உள்ளன. இவ்வாறான வெற்றிடங்களுக்குத் மருத்துவ நிர்வாகத்துறைப் பயிற்சி நெறியின் கட்டங்களைப் பூர்த்தி செய்தவர்களை (அவர்கள் அப்பயிற்சி நெறியின் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றிய உடன், அதற்கான பெறுபேறுகள் வெளியாக முன்னரே) அல்லது பிரதி மருத்துவ நிர்வாக உத்தியோகத்தர் தர அதிகாரிகளை சுகாதார அமைச்சு பதில் கடமையாற்றுவதற்கு தற்காலிகமாக நியமனம் செய்து வருவது வழமையாகும்” என்றார் அந்த வைத்தியர்.

“அவ்வாறானால், கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவி தற்போது வெற்றிடமாக காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையா?” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினோம்.

அதற்கு அவர் “குறித்த சகல வெற்றிடங்களையும் தகுதிவாய்ந்தவர்கள் மூலம் நிரப்புவதற்கான விண்ணப்பங்களை சுகாதார அமைச்சானது 09.08.2022 அன்று கோரியிருந்தது. குறித்த விண்ணப்பத்துடன் தற்போது வெற்றிடமாக உள்ள வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிநிலைகள் இணைப்பு 1 இல் காட்டப்பட்டிருந்தன. அதில் கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவியும் வெற்றிடமாகவே காட்டப்பட்டிருந்தது. எனினும் 19.08.2022 அன்று சுகாதார அமைச்சு குறித்த விண்ணப்பங்கோரலை தற்காலிகமாக  நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மட்டுமானது அல்ல. சுகல வைத்தியசாலைகளுக்குமான விண்ணப்பம் கோரலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று விளக்கினார்.

இந்த விபரங்களை எவரும் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தினை அணுகிப் பார்வையிடலாம் என்றும் அவர் கூறினார். அதன்படி அந்த இணையத்தளத்தில் இந்த விடயங்கள் இருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது (http://www.health.gov.lk/moh_final/english/others.php?pid=182).

இதனிடையே கிளிநொச்சியில் இன்னொரு கருத்துத்தும் சமகாலப்பகுதியில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அதாவது “வடக்கில் இருந்து மருத்துவ நிர்வாகத்துறை பயிற்சிக்குத் தெரிவாகி அப்பயிற்சியில் சித்தியடைந்தவர்களை வடக்கிற்கு வராமல் தடுக்கும் முயற்சியில் சில தரப்புகள் ஈடுபட்டுள்ளன. அத்தரப்புகள் சிங்களவர் ஒருவரை நியமிக்க எத்தனிக்கின்றன. தமிழர்களை அழுத்தம் கொடுத்து துரத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இதில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் உடந்தை” என்பதே அந்தக் கருத்தாகும்.

இதுகுறித்து ஊடகத் தொடர்புகள் ஊடாக சுகாதார அமைச்சிடம் விபரம் அறிய முற்பட்டபோது பின்வரும் தகவல்கள் கிடைத்தன.

“மருத்துவ நிர்வாகத்தில் தெரிவானவர்கள் மட்டுமல்ல எவரும் நாட்டும் எப்பகுதிக்கும் செல்வதற்கு சுகாதார அமைச்சு தடையாக இருந்ததில்லை. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு அப்பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் தாமாக முன்வந்து கடமை ஏற்பதையே சுகாதார அமைச்சு எப்போதும் ஊக்குவித்து வந்துள்ளது. தற்போது தமது மருத்துவ நிர்வாகப் பயிற்சியினை நிறைவு செய்து இறுதிப் பரீட்சை எழுதிய மருத்துவர்கள் அணியில் அறுவர் தமிழர்கள். குறித்த மருத்துவர்கள் அணி இன்னமும் தமது பரீட்சைப் பெறுபேறுகளுக்காக காத்திருப்பதால் இவர்களுக்கு மூப்புரிமை (ளுநnழைசவைல) அடிப்படையிலேயே நியமனத் தெரிவு இடம்பெறும். இவர்களுக்கான நியமன நிலையங்களுக்கான பட்டியலில் கிளிநொச்சி முழங்காவில் ஆதார வைத்தியசாலை, முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை மற்றும் மல்லாவி ஆதார வைத்தியசாலைகள் உள்ளன. வடக்கில் உள்ள இந்த வைத்தியசாலைகளை உச்ச நிலைக்கு கொண்டுவரும் முயற்சியாகவே சுகாதார அமைச்சு இதனை செய்கிறது. அதன்படி காட்டப்பட்ட வெற்றிடங்களில் இவர்களில் ஐவர் வடக்கிலுள்ள சுகாதார நிறுவனங்களையும் ஒருவர் வடமேல் மாகாணத்திலுள்ள சுகாதார நிறுவனம் ஒன்றினையும் தமது விருப்பத்தெரிவில் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களது தெரிவுகளுக்கு நியமன அதிகாரியின் ஒப்புதல் கிடைத்ததும் இவ்வாரமே அவர்களுக்கான தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுவிடும்” என்பதுதான் அத்தகவல்.

குறித்த நியமனங்களிற்கான பட்டியலில் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவி வெற்றிடமாகக் காட்டப்பட்டு பி;;ன்னர் வைத்தியர் சங்கத்தின் அழுத்தத்தினால் அகற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வினவியபோது “கிளிநொச்சி மட்டும் அல்ல வவுனியா, மற்றும் மன்னார் பொது வைத்தியசாலைகளின் பிரதிப் பணிப்பாளர் பதவிகளும், மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியும் அலுவலகத் தவறினால் வெற்றிடமாகக் காட்டப்பட்டுவிட்டன. அதற்கும் வைத்தியர் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த வைத்தியசாலைகளில் தற்போது கடமையில் உள்ளவர்கள் பதில் பிரதிப் பணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு மேலதிகமாக இன்னொரு பதில் பிரதிப் பணிப்பாளர் நியமனம் அவ் வைத்தியசாலைகளுக்கு மேற்கொள்ளப்பட முடியாது. இந்தத் தவறு சுட்டிக்காட்டப்பட்டதும், பட்டியலில் இருந்து இ;ந்த வைத்தியசாலைகளது பிரதிப் பணிப்பாளர் வெற்றிடங்கள் அகற்றப்பட்டன. இருப்பினும் கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் பதவி இப்போதும் வெற்றிடமாகவே உள்ளது. நியமனம் பெறக் காத்திருக்கும் மருத்தவர்கள் எவராவது அங்கு செல்ல விரும்பினால் சுகாதார அமைச்சு உடனடியாகவே அந்த நியமனத்தை வழங்கும்” எனப் பதில் வழங்கப்பட்டிருக்கிறது.

அப்படியானால், பொதுசனங்களைத் தவறாக வழிநடத்தும் இவ்வாறான இவ்வாறான செய்தியையும் கருத்துகளையும்  வெளியிட்டவர்கள் யார்? எந்த உள்நோக்கத்துடன் அவர்கள் அச்செய்தியை வெளியிட்டார்கள்? கிளிநொச்சியைச் சேர்ந்த எந்தப் பொது அமைப்புகள் அல்லது சிவில் சமூக அமைப்புகள் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்?? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது.

இவ்வாறான ‘பொது அமைப்புகளும்’ ‘சமூக அக்கறை கொண்ட சிவில் சமூகக் கண்ணியவான்களும்’ கிளிநொச்சியின் சுகாதாரக் கட்டமைப்புக் குறித்தும் பொதுமக்களது சுகாதார மேம்பாடு குறித்தும் உண்மையிலேயே கரிசனை கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய பல விடயங்கள் உள்ளன.

தகுதியானவர்கள் என்று சிவில் நிர்வாகத்தில் குறிப்பிடப்படுபவர்கள் திறமையானவர்களாகவோ அல்லது பொருத்தமானவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. தகுதியானது பதவி மூப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்கள் மூலமாகவே பெரிதும் தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறான ‘தகுதியானவர்கள்’ யுத்த காலத்தில் வன்னிக்குள் வருவதற்கு விரும்பாத காரணத்தால் தான் அப்போது ‘திறமையானவர்கள்’ பதவி அமர்த்தப்பட்டார்கள். அதற்கு சுகாதாரத்துறையும் விலக்கானது அல்ல. திறமையானவர்களால் வழிநடத்தப்பட்ட சுகாதாரத்துறையானது அப்போது செயற்பட்ட விதம் குறித்து எமது சனங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை.

2009 இன் பின்னர் நியமனத்திற்கு வந்த ‘தகுதியானவர்கள்’ இங்கு ’சிஸ்டமே இல்லை’ என்று ‘சிஸ்டம்’ உருவாக்கினர். அதன் விளைவுகள் என்ன என்று ‘பொது அமைப்புகளும்’ ‘சமூக அக்கறை கொண்ட சிவில் சமூகக் கண்ணியவான்களும்’ கவனித்தார்களா?

இல்லை என்றால் இனியாவது அவர்கள் தயவுசெய்து அதனைக் கவனிக்க வேண்டும். மாவட்டத்தில்  பல இடங்களில் உலக்கை போவதனை அவதானிக்காதவர்கள் ஊசி போகும் இடத்தினை மட்டும் தேடுகின்றனர்.எனவே இந்த நிலைமையினை இவ்வாறே விட்டுவிட்டால் சிதைந்து போன உக்கி போன ஒரு சமூகத்தை கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி மாறிவிடும்.

விழித்துக்கொண்டால் மாவட்டம் பிழைத்துக்கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்