கிண்ணியாவில் எரிபொருள் கோரி மக்கள் போராட்டம்!

கிண்ணியா பிரதேச சுகாதார ஊழியர்கள் தங்களுக்கான எரிபொருளை கேட்டு, இன்று (12) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிண்ணியா தள  வைத்தியசாலை வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, அலுவலக  ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவர்கள் கிண்ணியா தள  வைத்தியசாலையில் இருந்து பேரணியாகச் சென்று, கிண்ணியா பிரதேச செயலகம் முன்பாக ஒன்று கூடி, தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கும் போது, கிண்ணியா தள  வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற ஊழியர்களில் 90 வீதமானோர்  வெளிப்பிரதேசங்களில் இருந்து வருகை தருகின்றவர்கள். இவர்களுக்கு எரிபொருட்கள் இன்மையால், கடமைக்கு வருவதில் அல்லது இவர்களை நாங்கள் கடமைக்கு அழைப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றோம். இதன் காரணமாக வைத்தியசாலையை  மூட வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

எனவே, கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் எரிபொருளை பெறுவதற்கு வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி இருப்பது போல, சுகாதார ஊழியர்களான எங்களுக்கும் அவ்வாறு கிழமையில் ஒரு நாளை ஒதுக்கி தர வேண்டும்.

எங்களது ஊழியர்கள் வரிசையில் நாள் கணக்கில் காத்திருந்தும்  எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. இந்த நிலையில், நாங்கள் அங்கு பல்வேறு அவமானங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது.

ஆகவே, எங்களுக்கு எரிபொருளை  பெற்றுக் கொள்வதற்கு உரிய திட்டமொன்று வகுக்கப்படாவிட்டால் வைத்தியசாலை இழுத்து மூட வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்றும் தெரிவித்தனர்.

இறுதியாக, இது தொடர்பாக  கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனியிடம் மகஜர் ஒன்றும் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்