
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா மார்பர்க் வைரஸின் முதல் இரு தொற்றாளர்களை பதிவு செய்துள்ளது. கானாவில் தெற்கு அஷாந்தி பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலையில் இரு நோயாளிகள் மார்பர்க் வைரஸால் உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான 98 பேர் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக மேற்கு ஆபிரிக்காவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்பர்க் வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது நோயாளியின் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது என்று வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பரவக்கூடிய எபோலா மற்றும் கொரோனா வைரஸைப் போலவே மார்பர்க் வைரஸ் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸைப் போலவே, மார்பர்க் வைரஸ் வௌவால்கள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. இந்த கொடிய வைரஸால் இறப்பு ஆபத்து 24 முதல் 88 சதவீதம் வரை இருக்கும்.
இந்த ஆபத்தான வைரஸ் இதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா, அங்கோலா, கென்யா, உகாண்டா மற்றும் காங்கோ குடியரசு ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டது.
மார்பர்க் வைரஸ் தொற்று பாதிப்புகள் ஆப்பிரிக்காவுக்கு வெளியே உள்ள நாடுகளுக்கு இது வரை பரவவில்லை என்பது நிம்மதி அளிக்கும் விஷயம்.