காணிப் பிரச்சினைக்கு புதிய சட்டத்திருத்தம் வேண்டும் – கருணாகரன்

காணிப்  பிணக்குகள் பல விதம். அதில் உறுதிக்காணிப் பிணக்குகள் ஒரு வகை. அரசாங்கத்தினால் வழங்கப்படும் (Permit) காணிகளின் பிணக்குகள் இன்னொரு வகை. இதற்குள்ளும் ஏகப்பட்ட வகைப்பாடுகள் உண்டு.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் இடையில் எப்படி வேறுபாடுகள் உண்டோ, அதைப்போல ஒவ்வொரு காணிப் பிரச்சினையும் தனித்தனியான வேறுபாடுகளைக் கொண்டது. உறுதிக் காணிகள் என்பவை தேச வழமைச்சட்டத்தின்படியும் அரச காணிகள், அரச சட்டத்தின்படியும் கையாளப்படுகின்றன. இந்தத் தேச வழமை கூட இடத்துக்கிடம் வேறுபடுகிறது. கண்டியில் ஒரு மாதிரியும் யாழ்ப்பாணம் – வடக்கில் இன்னொரு மாதிரியும் கிழக்கில் வேற மாதிரியும் உண்டு.

காணப்பிரச்சினை  அல்லது காணிப் பிணக்குகளில் உரித்துப் பிரச்சினைகள் ஒருவகை. எல்லைப் பிரச்சினை இன்னொரு வகை. இதில் ஆவண மோசடிகள் (கள்ள உறுதிப் பிரச்சினை) தனிக்கதையாகும்.

பலே கில்லாடிகளாக இருக்கின்றவர்கள் இதில் பெரிய விளையாட்டையெல்லாம் காட்டுவார்கள். எந்தப் பிரச்சினை என்றாலும் காணிப் பிணக்கு என்று நீதி மன்றத்துக்குப் போனால் கதை அவ்வளவுதான். இன்னொரு காணியை விற்றோ வீட்டை விற்றோதான் வழக்காட வேண்டும். இதனால்தான் “ஓலை வீட்டுக் காசு ஓட்டு (சட்டத்தரணி) வீட்டுக்குப் போகிற வேலை” என்று இதைச் சொல்லுவார்கள்.  

அது மட்டுமல்ல, ஆகக்குறைந்தது பத்து ஆண்டுகளாவது செல்லும் ஒரு வழக்கு முடிவதற்கு. சில வழக்குகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் செல்லும். இதனால்தான் காணிப் பிணக்குகளுகளை முடிந்த அளவில் சமாதானமாகத் தீர்த்துக் கொள்வதற்குப் பெரும்பாலானவர்கள் விரும்புவது. ஆனாலும் சில சனீஸ்வரன்களால் நீதி மன்றத்துக்குப் போகத்தான் வேணும் என்றும் வந்து விடுவதுண்டு.

இந்தப் பிரச்சினை இலங்கையில் மட்டும்தான் என்றில்லை. இந்தியாவிலும் இதே கேஸ்தான். அங்கும் பெரும்பாலான சட்டங்கள் பிரித்தானிய நிழலை விட்டு இன்னும் நீங்கவில்லை. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை பிரித்தானியர் ஆட்சி செய்ததால் வந்த வினை இது.

ஆயிரக்கணக்கான வழக்குகள் இழுபட்டு இழுபட்டு ஆண்டுக்கணக்கில், தலைமுறைகணக்கில் நீள்வது (நீள்துயில் கொள்வது) இதனால்தான். அதாவது பிரித்தானியப் பாரம்பரியச் சட்ட முறையினால்.

இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுவதுண்டு. இப்படி வழக்குகளை நீண்ட காலம் நடத்தினால்தான் சட்டத்தரணிகளின் பிழைப்பு நன்றாக நடக்கும் என. இதில் உண்மையும் உண்டு. இரண்டு தரப்புச் சட்டத்தரணிகளும் இணைந்தே இந்த மாதிரி வழக்குகளை இழுத்தடிப்பதுண்டு.

இதை விட இன்னொரு காரணத்தையும் சொல்வார்கள், “வழக்குகளுக்கான தீர்ப்பை உடனடியாகச் சொல்லாமல் இழுத்தடித்தால் இதைப்பார்த்து விட்டு வேறு ஆட்கள் நீதி மன்றப்பக்கத்துக்கு – வழக்குக்கு என்று – வரமாட்டார்கள் என்று.

எது எப்படியோ பாதிக்கப்படுவது எப்போதும் மக்கள்தான். என்னதான் நீதி, சட்டம் என்று பேசினாலும்  மக்களுடைய பாதிப்பு குறைவதில்லை. ஆனால், இந்தியாவில் – குறிப்பாகத் தமிழ் நாட்டில் இப்பொழுது காணிப் பிணக்குக்கு – குறிப்பாக மோசடி ஆவணம் (போலி உறுதி) தயாரிக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு நீதி மன்றத்தை விட பதிவாளர் அலுவலகமே தீர்வைக் காணக் கூடிய ஒரு புதிய ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அமையக்கூடியவாறு சட்ட ஏற்பாட்டையும் நடைமுறையையும் தமிழ் நாடு அரசாங்கம் உருவாக்கி இந்திய ஜனாதிபதியின் அனுமதியையும் பெற்றுள்ளது. இதற்கு வழியை ஏற்படுத்தியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சி பாராட்டப்பட வேண்டியது. இந்தப் புதிய சட்ட ஏற்பாட்டின் மூலம் நன்மையைப் பெற்றிருப்பவர்களில் ஒருவர் நடிகை வாணிஸ்ரீயாகும். இவர் வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன் உள்பட பல முன்னணிப்படங்களில் 1970 களில் நடித்துப் பேரெடுத்தவர்.

இந்த வாணிஸ்ரீ எப்படிக் காணிப் பிணக்கில் சிக்குண்டார் என்பதையும் தமிழ்நாடு அரசாங்கம் அமுல்படுத்துகின்ற புதிய காணிச்சட்டம் எப்படி என்பதைப்பற்றியும் எழுத்தாளர் ஜெயமோகன் பதிவு செய்திருக்கிறார். அதனை இங்கே நம்முடைய சூழலில் பகிர்வது அவசியமானது.

உண்மையில் தமிழ் நாட்டு அரசின் இந்த நடவடிக்கையானது, பல ஆயிரக்கணக்கான – லட்சக்கணக்கான நீண்ட வழக்குகளுக்கு முடிவைக் காணக் கூடிய ஏற்பாடாகும். இத்தகையை ஏற்பாடு நிச்சயமாக இலங்கையிலும் வர வேண்டும். ஏனென்றால் காணிப் பிணக்கு என்பது பல சந்தர்ப்பங்களிலும் வாழ்க்கைப் பிரச்சினையாகவே இருப்பதுண்டு. இதனால் பல கொலைகள், மரணங்கள் நடந்துள்ளன. இன்னும் அதற்கான சாத்தியங்கள் நிறையவே உண்டு.  இதைப்போல பல உறவுகள் பிரிந்து நிரந்தரப் பகைக்குள்ளாகியுள்ளன. மட்டுமல்ல, பெரும் பொருட்செலவும் பொலிஸ் கேஸ், வழககு என்று ஏகப்பட்ட பிரச்சினைகளும் இதனால் உருவாகியுள்ளன. இப்பொழுதும் பொலிஸ் நிலையத்துக்கு வருகின்ற முறைப்பாடுகளில் 50 சதவீதமானவை காணிப் பிணக்குகளோடு தொடர்பானவையாகவே இருக்கும்.

என்பதால் தமிழ்நாடு அரசாங்கத்தின் முன்மாதிரியை இலங்கையும் பின்பற்றினால் பல பிரச்சினைகள் தீர்வதுடன் புதிய நிலை ஒன்றும் உருவாகும்.

பாருங்கள், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட காணிச்சட்டத்திருத்தம் எப்படியான விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அதற்கு முன்னிருந்த நிலையையும்.

நடிகை வாணிஸ்ரீக்கு சட்டப்படிச் சொந்தமான நிலம். அவர் பெயரில்தான் பட்டா (ஆவணம்) உள்ளது. அதை வாடகைக்கு எடுத்தவரிடமிருந்து ஒரு கும்பல் வல்லடியாக அதைக் கைப்பற்றிக்கொண்டது. போலிப்பத்திரம் தயாரித்து அதை விற்றது. அந்தப் பத்திரம் முழுக்கமுழுக்க போலி என பத்திரப்பதிவுத் துறை சொல்லிவிட்டது. போலிப்பத்திரம் தயாரித்தவர்கள் கைதாயினர். உடனே ஜாமீனில் வந்து வழக்கை நடத்துகின்றனர்.

இதில் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் வாணிஸ்ரீக்கு அந்நிலத்தை திரும்ப அளிக்கும் ஆணையை நீதிமன்றம்தான் போடமுடியும். தன் நிலம் போலிப்பத்திரம் வழியாக விற்கப்பட்டது, அதை கைவசம் வைத்திருப்பவர்களிடம் இருப்பது போலிப் பத்திரம், அவர்கள் சட்டப்படி குற்றவாளிகள் எனக் கருதப்பட்டு இன்னொரு நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நடைபெறுகிறது என வாணிஸ்ரீ சிவில் நீதிமன்றத்தில் திரும்ப ‘நிரூபித்து’ அங்கிருந்து நீதிமன்ற ஆணை பெறவேண்டும்.

எளியவிஷயம். ஆனால் நம் சிவில்நீதிமன்றத்துக்கு அது ஒரு சிவில் வழக்கு. எந்த சிவில் வழக்கையும்போல அதற்கும் ஆண்டுகள் மேலும் ஆண்டுகள் ஆகியது. சாதாரண ஆண்டுகள் அல்ல. இருபதாண்டுகளுக்கும் மேல். போலிப்பத்திரம் வழியாக நிலத்தை கைப்பற்றியவர்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கே பற்பல ஆண்டுகள் வாய்தா வாங்கினார்கள் எனப்படுகிறது. இன்னமும்கூட அந்த வழக்கு முடிவடையவில்லை எனப்படுகிறது.

(சரி, நீதிமன்ற ஆணை வந்துவிட்டால்? அந்த ஆணையை காவல்துறைக்கு அளிக்கவேண்டும். காவல்துறை அதை நிறைவேற்றவேண்டும். நிறைவேற்றாவிட்டால்? மீண்டும் சிவில்நீதிமன்றத்தையே நாடவேண்டும்.)

ஓர் இதழியல் பேட்டியில் வாணிஸ்ரீ மேலும் மேலும் பணத்தைச் செலவுசெய்ய மனமில்லாமல், பற்பல ஆண்டுகள் நீடிக்கும் வழக்கின் அலைச்சலால் மனம் உடைந்ததைச் சொல்கிறார். அந்த மனச்சோர்வே தன் மகன் தற்கொலை செய்துகொள்ளக் காரணம் என்கிறார். போலிப்பத்திரம் வழியாக நிலத்தை கைப்பற்றியவர்கள் மிகமிகக்குறைந்த விலைக்கு அதை தங்களிடம் விற்றுவிடும்படி கட்டாயப்படுத்தினார்கள் என்கிறார். உண்மையிலேயே ஒரு திகைப்பூட்டும் திரைக்கதைக்கான பின்னணி.

(இன்னொரு வேடிக்கையும் உண்டு. இவ்வளவு களேபேரங்களுக்கு நடுவே இன்னொரு புது ஆள் மீண்டும் ஒரு போலி பத்திரம் தயாரித்து வாணிஸ்ரீயின் நிலத்தை விற்றுவிட்டார். பிடிபட்டார், ஜாமீனில் வந்துவிட்டார். இன்னொரு வழக்கு நடக்கிறது)

சில ஆண்டுகளுக்கு முன் என் தயாரிப்பாளர் ஒருவர் சொன்னார், அவருக்கு அப்படி பெரிய ஒரு கட்டிடம் விலைக்கு வந்தது. விற்றவர் தெளிவாகவே தன்னிடம் இருப்பது தானே தயாரித்த போலிப்பத்திரம் என்றாராம். ஆனால் அக்கட்டிடம் அந்த போலிப்பத்திர ஆளின் கைவச உரிமையாக உள்ளது. உரிமையாளர் அதை ‘மீட்க’ இருபது முப்பது ஆண்டுகளாகும். மாதவாடகை ஐந்து லட்சம் என்றாலும் பன்னிரண்டுகோடி வாடகையாகவே மிஞ்சும். இவர் ஐந்துகோடிக்கு அதை வாங்கினால் போதும்.

வழக்கை இழுக்க இழுக்க லாபம் என்றார் விற்பனையாளர். தயாரிப்பாளர் அனைத்து ரதகஜதுரகபதாதிகளும் உள்ளவர். ஆனால் மறவர். அவருக்கு ஓர் அரசகுலப் பாரம்பரியம் உண்டு. அதன் காரணமாக ஓர் அடிப்படை அறத்தயக்கம். ஆகவே அவர் அதில் மேலே செல்லவில்லை.

இதுதான் சூழல். இந்நிலையில் ஒரு புதுக் கிளைமாக்ஸ். தமிழக அரசு ஒரு புதுச் சட்டம் கொண்டுவந்திருக்கிறது. அதாவது பத்திரப்பதிவுத் துறையால் ஒரு பத்திரம் போலியானது என்று கண்டுகொள்ளப்பட்டால் உடனே அந்தப் பத்திரத்தை தானே ரத்துசெய்துவிடலாம். போலிப்பத்திரம் வைத்திருப்பவரின் ‘கைவச உரிமை’ தானாகவே ரத்தாகிவிடும். போலிப் பத்திரம் பதிவுச்செய்யப்பட்டிருந்தது என்றால், அதைப் பதிவுசெய்த பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மிகமிக எளிமையான ஒரு சட்டம். மிக அடிப்படையான சட்டம். ஆனால் இன்றுவரை இது இல்லாமல் இருந்தது. போலிப் பத்திரம் என பத்திரப்பதிவுத் துறை சொன்னாலும்கூட நீதிமன்றம்தான் அதை ரத்துசெய்ய முடியும். அதை நீதிமன்றம் ரத்துசெய்ய ஒரு தலைமுறைக்காலம் ஆகும். சாமர்த்தியம் இருந்தால் வழக்கை நாலைந்து தலைமுறைக்காலம்கூட இழுக்கலாம்.

இந்தச் சட்டம் உண்மையில் தமிழகத்தில் ஒரு பெரிய புரட்சியைக் கொண்டுவரவிருக்கிறது. பல ஆண்டுகளாக சட்டப்போர் நடத்திவரும் வாணிஸ்ரீக்கு அவர் நிலம் முதல்வரால் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. அரசு நினைத்தால் அரைமணிநேரத்தில் தீரவேண்டிய பிரச்சினைதான் இது. வாணிஸ்ரீயின் கால்நூற்றாண்டை நரகமாக்கியிருக்கிறது.

இவ்வளவு அடிப்படையான ஒரு திருத்தம் ஏன் சுதந்திரம் அடைந்த முக்கால்நூற்றாண்டில் செய்யப்படவில்லை? ஏன் இன்னமும் இந்தியாவில் வேறெங்கும் இல்லை? அதைப் பேசிப்பயனில்லை. இப்போதாவது நடக்கிறதே என ஆறுதல்கொள்ள வேண்டியதுதான். இந்த அரசில் உண்மையிலேயே அக்கறைகொண்ட அதிகாரிகள் இருக்கிறார்கள், அவர்கள் சொல்வதைச் செவிசாய்க்க அரசில் ஆளிருக்கிறது.

தமிழக அரசின் இந்தச் சட்டம் பெரும் முன்னகர்வு. உடனடியாக கேரளம் போன்ற அரசுகளும் இதை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும். இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முன்முயற்சி எடுத்த அதிகாரிகள் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர்கள்.

இந்தச் சட்டம் பற்றிய மேலதிக விவரம் –

மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து வந்தது.

இதுதொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டப்பேரவையில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் 6.8.2022 அன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

திருத்தப்பட்ட இந்தப் பதிவுச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22-பி ஆனது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், பிரிவு 77-எ ஆனது நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து மாவட்டப் பதிவாளர்களிடம் புகார் மனு பெறப்பட்டால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து பதிவு செய்யப்பட்ட ஆவணம் போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணத்தினை ரத்து செய்து ஆணையிட மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஆணையின்மீது பதிவுத்துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம். மேலும், முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கிடவும் சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நில அபகரிப்பு மோசடியாளர்களால் பாதிக்கப்பட்ட, சொத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு அச்சொத்தினை மீட்டெடுத்துக் கொடுக்கும் வகையில், மோசடி ஆவணப்பதிவுகளை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்திட பதிவுச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், போலி ஆவணங்கள் பதிவினை அறவே ஒழிக்க சட்டத்தின் துணையோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின் கீழ் போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு அவர்களின் சொத்துகள் நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை இன்று முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி நிலமும் மீட்கப்பட்டது. இதற்கான ஆணையையும் முதல்–அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை நல்ல நாட்கள் எனக் கருதப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். இந்நாட்களில் அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களில் டோக்கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அன்றே ஆவணம் பதியப்பட வேண்டும் என விரும்புபவர்கள் https://tnreginet.gov.in என்ற இணைய வழியாக ரூ.5 ஆயிரம் செலுத்தி உடனடி (தட்கல்) டோக்கன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவசர ஆவணப் பதிவு தேவைப்படும் நிகழ்வுகளிலும் இவ்வசதியைப் பயன்படுத்தி உடன் டோக்கன் பெறலாம். இந்த உடனடி (தட்கல்) டோக்கன் வசதி, அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. திருமண பதிவிற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கொடுக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் திருமண சான்று வழங்கப்படுகிறது. ஆனால் பின்னாளில் கடவுச்சீட்டு மற்றும் வெளிநாடு செல்ல விசா கோரி விண்ணப்பிக்கும்போது சில சமயங்களில் பெயர்களில் ஏற்படும் பிழைகள், முகவரி போன்றவற்றில் திருத்தம் தேவைப்படுகிறது. அவ்வாறு திருத்தம் செய்திட https://tnreginet.gov.in என்ற இணையவழி விண்ணப்பித்து திருத்தப்பட்ட திருமண பதிவுச் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் விரும்பிய நேரத்தில் எவ்விடத்திலும் இணையவழி விண்ணப்பம் செய்யலாம். உரிய திருத்தம் செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ் பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் பயனாளிக்கு இணையவழி அனுப்பப்படும். பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் கூடிய அச்சான்றிதழை விண்ணப்பதாரர் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பாரதி சொன்னதைப்போல நல்லவை எங்கிருந்தாலும் அவற்றை நாம் பின்பற்ற வேண்டும். அப்படித்தான் நமக்கு ஜனநாயகம் தொடக்கம் நாம் பயன்படுத்துகின்ற தொழில் நுட்பம் வரை வந்தது. இதையும் மக்கள் நன்மை கருதி முன்மாதிரியாகக் கொள்வோம். 

ReplyReply allForward


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்