கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது

இந்தியாவில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாடசாலை விடுதியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரின் வீட்டை சென்றடைந்துள்ளது. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள பாடாசாலை விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

இதனிடையே, கடந்த 13 ஆம் திகதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பாடசாலை நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17 ஆம் திகதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரத்தில் முடிந்தது.

மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால் கடந்த 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது. அதேவேளை, மாணவியின் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று நடந்த விசாரணையின் போது மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, 10 நாட்களாக கள்ளக்குறிச்சி அரசு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் இன்று காலை 6.45 மணியளவில் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரின் சொந்த கிராமமான பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டிற்கு தற்போது கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அவரின் பெற்றோர், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்கு பின் மாணவி ஸ்ரீமதியின் உடல் கிராமத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

மாணவியின் சடலத்தோடு அவருக்கு பிடித்த உயிரியல் பாடப்புத்தகமும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்