களைகட்டப் போகும் பிரீமியர் லீக்!

துவண்டு போயிருந்த இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள லங்கன் பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 தொடரில் விளையாடும் வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

பல்வேறு தடங்கலுக்கு பிறகு அடுத்த மாதம் நடைபெறவுள்ள லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின், வீரர்களின் தேர்வு திங்கட்கிழமை ஒன்லைனில் நடைபெற்றது.

இந்த தேர்வின் போது ஐபிஜி தலைமை நிர்வாக அதிகாரி அனில் மோகன், இலங்கை கிரிக்கெட் சபையின் துணைத் தலைவர் ரவின் விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா, உரிமையாளர்கள் மற்றும் ஒவ்வொரு அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு உரிமையாளரும் ஆறு சர்வதேச வீரர்களை வாங்க முடியும். அதாவது லங்கன் பிரீமியர் லீக் தொடரில் 30 சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் 65 உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கும் வாய்ப்புள்ளது, ஒவ்வொரு அணியிலும் 19 உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தத்தில், ஐந்து உரிமையாளர்களுக்கு ஏலம் எடுக்க சுமார் 150 வீரர்களின் தேர்வு இருந்தது. இவ்வாறு பல்வே கட்டுப்பாடுகளுடன் வீரர்களின் தேர்வு இடம்பெற்றது.

இந்த வீரர்களின் தேர்வின் போது ஐந்து அணிகளுக்கான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முக்கிய வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் கெய்ல், சயிட் அப்ரிடி, டு பிளெஸிஸ், ஆந்ரே ரஸ்ஸல் ஆகிய வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டனர்.
தற்போது ஒவ்வொரு அணிகளாலும் வாங்கப்பட்ட முக்கிய வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்.

கொழும்பு கிங்ஸ் அணியில், அஞ்சலோ மத்தியூஸ், ஆந்ரே ரஸ்ஸல், டு பிளெஸிஸ், ஃகோனி, மன்விந்தர் பிஸ்லா, இசுரு உதான, தினேஸ் சந்திமால் அமில அபோன்ச, அஷான் பிரியன்ஜன, ரவிந்தர்பல் சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளராக டேவ் வட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தம்புள்ளை ஹவ்க்ஸ் அணியில், தசுன் சானக, டேவிட் மில்லர், கார்லோஸ் பிரத்வெயிட், சமித் பட்டேல், நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு குமார, ஒசேத பெர்னான்டோ, கசுன் ராஜித உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.பயிற்சியாளராக ஜோன் லீவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

காலி கிளேடியேட்டர்ஸ் அணியில், லசித் மாலிங்க, சயிட் அப்ரிடி, கொலின் இங்ரம், ஹஸ்ரதுல்லா சஷாய், மொஹமட் ஆமிர், தசுன் குணதிலக்க, பானுக ராஜபக்ஷ, அகில தனஞ்சய, மிலிந்த சிறிவர்தன, சப்ராஸ் அஹமட் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளராக மொய்ன் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியில், திசர பெரேரா, டாவிட் மாலன், வனிந்து ஹசரங்க, சொயிப் மாலிக், உஸ்மான் ஷின்hவரி, அவிஷ்க பெனார்டோ, தனஞ்சய டி சில்வா, சுரங்க லக்மால், பினுர பெனார்டோ அஷிப் அலி உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கண்டி டஸ்கர்ஸ் அணியில், குசல் பெரேரா, கிறிஸ் கெய்ல், லியாம் பிளெங்கட், வஹாப் ரியாஸ், குசல் மென்டிஸ், நுவான் பிரதீப், சிக்குகே பிரசன்ன, அசேல குணரத்ன, நவினுல் ஹக் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளராக அசான் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிக்கு பிறகு இன்னும் சில வெளிநாட்டு வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போட்டியின்போது நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஓர் அணியில் அனுமதிக்கப்படுவார்கள்.

முன்னதாக லங்கன் பிரீமியர் லீக், ஒகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், இலங்கைக்கு வரும் வெளிநாட்டு வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என இலங்கை அரசு உத்தரவிட்டதால், தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தமுறை வெளிநாட்டு வீரர்கள் ஏழு நாட்களுக்கு மட்டும் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் இலங்கை கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு அரசாங்கமும் அனுமதி வழங்கியது.

இதனைத்தொடர்ந்து தற்போது நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் உள்ள பல்லேகேல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்