கல்லாறு சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க காவல்துறை வேண்டாம் இராணுவமே வேண்டும்! கோரிக்கையை ஏற்றது இராணுவம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க காவல்துறை வேண்டாம்  இராணுவமே வேண்டும் என கல்லாறு கிராம பெண்கள் விடுத்தக் கோரிக்கையினை இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று 10-01-2020 கல்லாறு கிராமத்தில் பெண்கள் ஒன்றுகூடி ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். தங்களின் கிராமத்தில் இரவு பகலாக  சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இதனால் தங்களின் கிராமம் மிகப்பெரும் ஆபத்திற்குள் சிக்குண்டுள்ளது.  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படும்  உழவு இயந்திரங்கள், ரிப்பர்கள்   அதிக வேகத்துடனான போக்குவரத்தால் குழந்தைகள் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.பாடசாலைகளுக்கு பிள்ளைகளை  இவ்வீதியால் அனுப்புவது என்பதே மிகப்பெரும் ஆபத்தான விடயமாக மாறியுள்ளது.

எனவே கடந்த ஐந்து வருடங்களாக இவ்வாறு சட்டவிரோத  மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.இதனால் நாங்கள்  பல நெருக்கடிகளை சந்திதுள்ளோம் சந்தித்தும் வருகின்றோம். சட்டவிரோத மணல் அகழ்வால் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளான கஞ்சா, கசிப்பு என்பனவும் அதிகரித்துள்ளது. எனத் தெரிவித்த  மக்கள்

 கடந்த காலங்களில் மாதக் கணக்கில்  மழை பெய்தாலும் சில குடும்பங்களை தவிர ஏனையவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில்லை ஆனால் தற்போது இரண்டு நாள் பெய்த மழைக்கே நாம் அனைவரும் பாடசாலைக்கு சென்றுவிட்டோம். வெள்ளம் இரண்டு அடிக்கு மேல் தேங்கி நின்றது. காரணம் இந்த சட்டவிரோத மணல் அகழ்வே.

எனவே இந்த சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்காது விட்டால் எதிர்காலத்தில் கல்லாறு என்ற கிராமமே இல்லாமல் போய்விடும். ஆகவே கல்லாறு கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த காவல்துறை தேவையில்லை இராணுவமே தேவை இராணுவத்தினர் இந்த பிள்ளையார் கோவிலடியில் ஒரு சோதனைச்  நிலையத்தை அமைத்து இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது  மக்கள் தெரிவித்தனர்.

பொது மக்களின் இக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட இராணுவம் உடனடியாக தாங்கள் குறித்த இடத்தில் இராணுவ சோதனை சாவடி ஒன்றை அமைக்க இணக்கம் தெரிவித்தனர். இதன் பின்னரே பொது மக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

முகநூலில் நாம்