கபடி வீரர் திடீர் மரணம்

கடலூர் மாவட்டம் காடாம்புலியூரை அடுத்த புரங்கணி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர், கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த களத்திலேயே மயங்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு விளையாட்டு வீரர்கள் என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

என்ன நடந்தது?

கபடி வீரர் விமல், கபடி போட்டியின்போது ஒருவரைப் பிடிக்க முயன்று அப்படியே கீழே மயங்கி விழும் காட்சி அவருடைய நண்பர்கள் அவர் விளையாடுவதைப் பதிவு செய்த காணொளியில் பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் விமலை மீட்டு பண்ருட்டி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், விமல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். அதைத் தொடர்ந்து, அவருடைய உடல் விழுப்புரம் முண்டியம்பாக்க மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

‘இது முதல் முறையல்ல’

விளையாட்டு வீரர் ஒருவர் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும்போதே உயிரிழப்பது இது முதல்முறையல்ல. உலகளவில் இதுபோல் பலமுறை நிகழ்ந்துள்ளது.

1993-ஆம் ஆண்டு, அமெரிக்க கூடைப் பந்து வீரர் ரெஜ்ஜி லூவிஸ், மாசாசூஸட்ஸில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

2007-ஆம் ஆண்டில், ஸ்பானிய கால்பந்து வீரர் ஆன்டோனியோ புவெர்டா, ஆக்ஸ்ட் 25-ஆம் தேதியன்று லா லிகா ஆட்டத்தின்போது மைதானத்தின் பெனால்டி பகுதியில் மாரடைப்புக்கு உள்ளாகி, 28-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

இந்தியாவிலும் கூட 2019-ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த கால்பந்து போட்டியின்போது ராதாகிருஷ்ணன் தனராஜன் என்ற கால்பந்து வீரர் ஆட்டத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

விளையாட்டின்போது ஏற்படும் இத்தகைய உயிரிழப்புகளுக்கு என்ன காரணம், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன மாதிரியான ஆரோக்கியம் சார்ந்த கவனிப்புகள் தேவை என்பதைத் தெரிந்துகொள்ள விளையாட்டு மருத்துவ நிபுணரான மருத்துவர்.சத்ய விக்னேஷிடம் பேசினோம்.

“இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம்”

“இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம். பொதுவாக, ஓடும்போதோ அதீத ஆற்றலைச் செலவழித்து விளையாடும்போதோ, அவர்களுடைய இதயம் அதற்கு ஏற்றாற்போல் ஈடுகொடுக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகளின்போது இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். இதயத்துடிப்பு தொடர்ச்சியாக வேகமாக இருக்கையில், ஒருவேளை இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருந்து கவனிக்காமல் விடப்பட்டிருந்தால் இப்படியான உயிரிழப்பு நிகழ வாய்ப்புண்டு.

விளையாட்டின் போது ஒருவர் மயங்கி விழுகிறார் என்றால் அதற்கு குறைசர்க்கரைத்தன்மை (hypoglycemia) தான் பெரும்பாலும் காரணமாக இருக்கும். விளையாடும்போது அதீதமாக வியர்ப்பது, நீர்ச்சத்து குறைவாக இருப்பது, மின்பகுபொருள் (Electrolytes) குறைவாக இருப்பது, குளுகோஸ் முற்றிலுமாகக் குறைவது போன்ற சூழல்களின்போது மயக்கம் வரும்.

சில நேரங்களில், வெறும் வயிற்றில் சாப்பிடாமல், ஆற்றல் குறைவாக இருக்கும்போது இப்படி நிகழலாம். ஆகையால், உடற்பயிற்சி, விளையாட்டு, சைக்கிளிங் போன்ற எந்தச் செயல்பாட்டிற்கு முன்பும், கார்போஹைட்ரேட் உள்ள செவ்வாழைப் பழம் போன்ற சிற்றுண்டியை எடுத்துக் கொள்வது நல்லது. அதன்மூலம், தொடக்கத்திலேயே ஊட்டச்சத்துகளை எரித்து ஆற்றலை உருவாக்காமல், உடலும் கார்போஹைட்ரேட்டில் இருந்து ஆற்றலை எடுக்கும்,” என்று கூறுகிறார்.

உடல் பரிசோதனை

பொதுவாக, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்படும். அத்தகைய பரிசோதனைகளில், “இதய ஆரோக்கியம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றைக் கண்காணிப்பார்கள். அதுபோக, குறிப்பிட்டு ஏதேனும் பிரச்னை யாருக்காவது அதுகுறித்த பரிசோதனையும் செய்யப்படும். இத்தகைய பொதுவான ஆரோக்கியத்தைத் தான் பார்ப்பார்களே தவிர, இளைஞர்களாக இருப்பதால் மிகவும் ஆழமான பரிசோதனை வழக்கமாக நடக்காது,” என்கிறார் மருத்துவர் சத்ய விக்னேஷ்.

அவரிடம் உடல்ரீதியான குறிப்பிட்ட பிரச்னை இருப்பவர்கள் விளையாட்டில் பங்கெடுக்கக்கூடாது என்று ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா என்பது குறித்துக் கேட்டபோது, “தசைநார் காயங்கள் இருந்தால், அதில் அறுவை சிகிச்சை செய்திருந்தால், குறிப்பிட்ட கால அளவுக்கு பங்கெடுக்கக்கூடாது என்று கூறப்படும்.

தசைநார் முழுமையாகக் குணமடைய எடுத்துக் கொள்ளும் கால அளவு வரை விளையாட்டுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என வலியுறுத்தப்படுவார்கள்.

சிலநேரங்களில், போட்டிகளுக்கு இடையில் இருக்கும்போது இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டிருக்கும். அந்த நேரத்தில் அவர்கள் முழு போட்டிகளையும் முடிக்க வேண்டியிருக்கும். அப்படியான சூழல்களில், அதற்கான உடனடி சிகிச்சைகளை வழங்குவது, பிசியோதெரபி, பிரேசிங் போன்ற நடவடிக்கைகள் கையாளப்படும். அவற்றின் மூலம், பங்கெடுத்தாக வேண்டிய குறிப்பிட்ட போட்டிகளை மட்டும் முடித்துவிட்டு வரவைத்து, பிறகு முழுமையான சிகிச்சை அளிக்கப்படும்.

ஆனால், இதயத்தில் ஏதும் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளைக் கொண்டிருப்பவர்கள் அதிகமாக உடலை வருத்தக்கூடிய விளையாட்டுகளில் பங்கெடுப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை,” என்று கூறினார்.

திடீர் விளையாட்டு/உடற்பயிற்சிகள் ஆபத்து

அதிகமாக உடலை வருத்தி விளையாடும்போது, சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதிக நீர் அருந்த வேண்டியது அவசியம். உடலில் நீர்ச்சத்து அளவை சமநிலையில் வைக்க வேண்டியது முக்கியம் என்கிறார் மருத்துவர் சத்ய விக்னேஷ்.

“அதோடு, எப்போதும் விளையாட்டையோ உடற்பயிற்சியையோ தொடங்கும்போது, வார்ம் அப் செய்வதும் இறுதியில் முடிக்கும்போது கூல் டன் பயிற்சிகளைச் செய்வதும் அவசியம். அதைச் செய்வதன் மூலம் சதைகள் காயமடைவது தசைநார் பாதிக்கப்படுவது குறையும்,” என்பவர், இதில் ஸ்டிரெச்சஸ் எனப்படும் உடற்பயிற்சிகளைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

மேலும், “சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அவ்வப்போது திடீரென ஒன்றாகச் சென்று விளையாடுவார்கள். அப்படி விளையாடும் போதெல்லாம் இத்தகைய பாதிப்புகளைப் பலரும் சந்திக்கிறார்கள். சிலர் மாதக்கணக்கில் விளையாடாமல் இருப்பார்கள். அப்படியிருக்கும் சூழலில், திடீரென ஒரு நாள் அதிகமாக உடலை வருத்தி விளையாடும்போது இத்தகைய பிரச்னைகள் எழும். அதைத் தவிர்ப்பதற்கு இது அவசியம்.

நம்முடைய வாழ்க்கை முறை, அலுவலகப் பணிகளில் பெருமளவு உட்கார்ந்தே இருக்க வேண்டிய, ஓடியாடிச் செயலாற்றாத நிலைக்கு மாறிவிட்டது. இந்த மாதிரியான வாழ்க்கை முறையில், தசைகள் மிகவும் சுருங்கியிருக்கும். ஒரு விளையாட்டோ அல்லது உடற்பயிற்சியோ செய்யும்போதும் அப்படியே இருப்பதால், நரம்புப் பிடிப்புகள், தசைப் பிடிப்புகள் ஆகியவை ஏற்படும். சிலருக்கு நீண்ட காலத்திற்கு அந்தப் பிடிப்போ வலியோ இருந்து கொண்டேயிருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஸ்டிரெச்சஸ் என்ற உடற்பயிற்சிகளைச் செய்யும்போது, அவற்றைத் தவிர்க்க முடியும்,” என்றார்.

அதோடு, விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து சமநிலையிலான ஊட்டச்சத்துகளைப் பெறும் வகையில் உணவு முறையைப் பின்பற்றுவது மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் சக்தி விக்னேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்