கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய வீரராக ஹிருஷ ஹஷேன் தெரிவு

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நிறைவுக்கு வந்த நான்கு நாள் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் அதிசிறந்த ஆற்றல் வெளிப்பாட்டாளர் வெற்றிக் கிண்ணத்தை பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியின் ஹிருஷ ஹஷேன் வென்றெடுத்தார்.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 7.76 மீற்றர் தூரம் பாய்ந்ததன் மூலம் அதகபட்ச சர்வதேச தர புள்ளிகளைப் பெற்று அதிசிறந்த ஆற்றல் வெளிப்பாட்டாளராக  ஹஷேன்   தெரிவானார். அவர் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் வென்றெடுத்தார்.

இவ் வயதுக்கான பெண்கள் பிரிவில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 54.34 செக்கன்களில் ஓடி முடித்து புதிய சாதனை நிலைநாட்டிய வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியின் டி. கருணாரட்ன அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை தனதாக்கிக்கொண்டார்.

15 புதிய கனிஷ்ட தேசிய சாதனைகள் நிலைநாட்டப்பட்ட இப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் நீளம் பாய்தலில் 5.53 மீற்றர் தூரம் பாய்ந்த நீர்கொழும்பு புனித லோரன்ஸ் கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலையின் ஓஷினி காவிந்தியா கொடிகார அதிசிறந்த மெய்வல்லுநரானார். இதே வயதுக்கான ஆண்கள் பிரிவில் குண்டு எறிதலில் 15.50 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த அநுராதபுரம் மத்திய கல்லூரி வீரர் எச்.யூ. ஜயசிங்க அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார்.

ஹிருஷ ஹஷேன் – பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரி 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் நீளம் பாய்தலில் 5.98 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய சாதனை நிலைநாட்டிய பிபிலே நன்னபுராவ மகா வித்தியாலயத்தின் மதுஷானி ஹேரத் அதிசிறந்த மெய்வல்லுநரானார். ஆண்கள் பிரிவில் குண்டு எறிதலில் 16.98 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்த பாணந்துறை றோயல் வீரர் ஜயவி ரன்ஹிந்து அல்விஸ் அதிசிறந்த மெய்வல்லுநரானார்.

23 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 08.44 செக்கன்களில் ஓடிமுடித்து புதிய சாதனை நிலைநாட்டிய இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஷானிக்கா லக்ஷானி அதிசிறந்த மெய்வல்லுநர் ஆனார். ஆண்கள் பிரிவில் நீளம் பாய்தலில் 7.78 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த கே. பியசிறி அதிசிறந்த மெய்வல்லுநராகத் தெரிவானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்