நல்லூர் அடியார்களுக்கு நகை, பணம் தொடர்பில் பொலிசார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் அடியவர்கள், தங்க நகைகள் அணிவதையும் மற்றும் பணத்தை எடுத்துச் செல்வதையும் தவிர்க்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், வீட்டில் ஒருவராவது தங்கியிருக்குமாறும் அல்லது பாதுகாப்பாக வீட்டைப் பூட்டி ஆலயத்துக்குச் செல்லுமாறும் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 25 நாள்கள் திருவிழா மற்றும் திருக்கல்யாணம், வைரவர் சாந்தி என 27 நாள்கள் ஆலயத்தில் அடியவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பர்.

வழமைபோன்று சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும், திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்கள் தமது தங்க நகைகள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார். 

இயன்றளவு தங்க நகைகளை அணிவதைக் குறைப்பதுடன் பணத்தை எடுத்துவருவதைத் தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்