கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

‘அம்பன்’ (Amphan) சூறாவளியின் தாக்கம் இன்று (21) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிப்பதால் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் அவதானத்துடன் செயற்படுமாறு கடல்சார் ஊழியர்களுக்கும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் எனவும் வானிலை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அதிக மழை வீழ்ச்சியினால் களு, கிங் மற்றும் நில்வளா கங்கைகளில் அதிகரித்த நீர் மட்டம் தற்போது குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஆறுகளின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, இரத்தினபுரி, எலபாத, கலவான, கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த பகுதிகளில் வாழ்வோரை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.

முகநூலில் நாம்