மூழ்கிய படகிலிருந்து கரையொதுங்கும் கஞ்சாப்பொதிகள்

பாக் ஜலசந்தி கடல் பகுதியில் அடுத்தடுத்து கஞ்சா மூட்டைகள் கரை ஒதுங்குகின்றன. இது இலங்கைக்கு கஞ்சா கடத்தி சென்ற படகு நடுக்கடலில் மூழ்கியதாகவும் அப்படகில் இருந்த கஞ்சா மூட்டைகளே கரை ஒதுங்கி வருவதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நேற்று (01) தனுஷ்கோடி அருகே கரை ஒதுங்கிய 96 கிலோ கஞ்சாவை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்து போதை பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இலங்கைக்கு மிக அருகாமையில் தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட கடலோர பகுதிகளில் இருப்பதால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் அட்டை, கடல் குதிரை, திமிங்கல இறகு, ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்டவைகள் சமீபகாலமாக அதிகளவு கடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக இந்திய இலங்கை கடற்படை சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ள நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது மீனவர்கள் வலையில் சுமார் 30 கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது அதை மீனவர்கள் கடலில் விட்டுவிடாமல் எடுத்து வந்து அதனை காய வைத்து விற்பனை செய்ய முற்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதனை தொடர்ந்து கடந்த வாரம் இந்திய கடலோர காவல் படையினர் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல்திட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த சாக்கு மூட்டையை சோதனை செய்ததில் சுமார் 110 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றிய இந்திய கடலோர காவல் படையினர் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதை அடுத்து தொடர்ந்து பாக் ஜலசந்தி கடற்கரைப் பகுதிகளில் பொலிஸார் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை கடற்கரையில் 80 கிலோ கஞ்சா கரை ஒதுங்கிய நிலையில் இன்று மதியம் மேலும் இரண்டு மூட்டைகளில் 80 கிலோ கஞ்சா மற்றும் மர்ம நபர்கள் சிலர் கஞ்சா பொட்டலங்களை எடுத்து கடற்கரை மணலில் புதைத்து வைத்திருந்த 16 கிலோ என மொத்தமாக 96 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் கஞ்சா மூட்டைகள் ஒதுக்குவது குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், நாகை மாவட்ட கடற்கரையில் இருந்து பைப்பர் படகு ஒன்றில் இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கடத்திச் செல்லப்பட்டதாகவும், கடல் சீற்றம் காரணமாக அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் இருந்த கடத்தல்காரர்கள் படகை மீட்டுள்ளனர்.

ஆனால் அந்த படகில் இருந்த கஞ்சா மூட்டைகள் கடல் அலை காரணமாக கடலில் நாலாபுறமும் சிதறி தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கி வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கஞ்சா மூட்டைகள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு யார் கடத்தி சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்கள் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில 15 நாட்களில் தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 800 கிலோவுக்கு அதிகமான கஞ்சா கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்