
ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு
இன்று(சனிக்கிழமை) விசேட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று நாம் வரலாற்றில் ஒருபோதும்
கண்டிராத பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். அண்மைக்கால
வரலாற்றில் இவ்வாறானதொரு பாரதூரமான நிலையை நாம் எதிர்கொண்டதில்லை.
நமக்கு ஏன் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது? இந்த நிலைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?
நாம் உண்மையைப் பேசுவோம். இந்த நிலைக்கு நாம் அனைவரும் குறைவாகவோ
அதிகமாகவோ பொறுப்புக் கூற வேண்டும். நாம் யாரும் விரல் நீட்டி ஒருவரை
ஒருவர் குற்றம் சொல்ல முடியாது.
நாம் ஆரம்பத்திலிருந்தே தவறு செய்தோம். அந்த தவறை சரி செய்ய முயற்சிகள்
எடுக்கப்பட்டன. பாடுபட்டோம். ஆனால் நூறு சதவீதம் சரி செய்ய முடியவில்லை.
சுதந்திரம் பெறுவதற்கு டி.எஸ். பின்பற்றிய வழிமுறை, இலங்கையர்
அனைவரையும் ஒன்றிணைப்பதாகும். சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர்
என யாராக இருந்தாலும் இலங்கையர்களாக நாம் முன்னோக்கிச் செயற்பட வேண்டும்
என அவர் அன்று தெரிவித்தார்.
ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு நாங்கள் பிளவுபட்டோம். இனம், மதம்,
பிரதேச ரீதியாக பிரிந்தோம். ஒருவரையொருவர் குறித்து சந்தேகம், வெறுப்பு
ஏற்படும் வரை பிரிந்தோம்.
பல்வேறு குழுக்கள், அதிகாரத்தைப் பெறவதற்கு இந்தப் பிரிவைப்
பயன்படுத்தின. அதிகாரத்திற்காக மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்தினர்.
நாம் அவர்களை நிராகரிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு அதிகாரம் அளித்தோம்.
அரசியலில் உண்மையைச் சொல்லாமல் பொய் சொன்னார்கள். உண்மையைச் சொன்ன
அரசியல்வாதிகளை மக்கள் நிராகரித்தனர். நாட்டின் உண்மை நிலையைச்
சுட்டிக்காட்டி அதற்கான பரிகாரம் தேடுபவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை
எனத் தெரிவித்தார்