
75 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகின்ற போது ஒரு தாய் மக்களாக, ஒரே
அணியாக சேர முடியும் என நம்புகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு விஜயம் செய்த அவர் ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு
அபிவிருத்திக்கான விசேட அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே
இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி
செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளேன்.
இந்த அலுவலகத்தின் ஊடாக வடக்கு மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச
முடியும். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் அனைத்தும்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு செல்வதாக கூறியதையடுத்து இந்த அலுவலகத்தை நான்
வவுனியாவில் திறந்து வைத்துள்ளேன்.
வடக்கு மக்களுக்கும் ஜனாதிபதி அலுவலகம் ஊடாக தீர்த்துக் கொள்ளக் கூடிய
வாய்ப்பு இருக்க வேண்டும். இதற்காகவே இந்த அலுவலகத் தற்போது வவுனியாவில்
ஸ்தாபிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் இளங்கோபன்
ஊடாக இந்த பணிகள் முன்னெடுக்கப்படும்.
இங்கிருந்து அவர் பணியாற்ற இருக்கின்றார். இன்னும் ஒரு அதிகாரியை நியமனம்
செய்து மேலதிக செயலாளர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இந்த பணிகளை
முன்னெடுக்கவுள்ளார்.
பிரச்சனைகள் குறித்து பேசிக் கொண்டு மட்டும் இருக்காமல் அந்தப்
பிரச்சனைகளை ஆராய்ந்து இங்கு வந்து தீர்வு காணுமாறு அழைக்கின்றேன். இந்த
அதிகாரிகள் மட்டுமன்றி அமைச்சு மட்டத்திலான அதிகாரிகளையும் அழைத்து வந்து
மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
இந்த அலுவலகத்திற்கு இன்னுமொரு மிக முக்கிய பணியும் பொறுப்பும்
இருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து செயற்படும்
பணி இந்த அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்டும்.எனத் தெரிவித்தார்