ஒருவர் கொரோனாவை உணர்வதற்கு முன் குடும்பத்தினருக்கு பரப்பி விடுகிறார்கள்- லேன்செட் ஆய்வு தகவலில் அம்பலம்!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள் அது அந்தக்காலம். தனித்திருந்தால் உயிர்வாழலாம் என்பது இந்தக் காலம். இந்தப் பாடத்தை நமக்கு உணர்த்தி இருப்பது, கண்ணுக்குத் தெரியாத எதிரி என்று நாம் சொல்கிற கொரோனா வைரஸ்.

கொரோனா வைரஸ் தொற்று என்றைக்கு இந்த பூமிப்பந்தில் பரவத்தொடங்கியது அன்று முதல் நமது விஞ்ஞானிகளுக்கு தூக்கம் கெட்டது. இரவு பகல் பாராமல் இதுபற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். அப்படி ஒரு ஆராய்ச்சிதான் இதுவும்.

இந்த ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள், சீனாவின் குவாங்சோவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான 349 நோயாளிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்த 1964 பேர் பற்றிய தரவுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று யாருக்கு எளிதாக பரவும் என்பது பற்றி விஞ்ஞானிகள் முதன்முதலாக ஆராய்ச்சி செய்து அதுபற்றிய தங்கள் முடிவை ‘தி லேன்செட் தொற்று நோய்கள்’ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் இருந்து ஒரு அலசல்தான் இது.

 • இந்த ஆய்வில் வெளிவந்துள்ள மிக முக்கியமான உண்மை, ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்து இருக்கிறது என்பதை அவர் உணர்வதற்கு முன்பாகவே, அவர் தன்னோடு ஒன்றாக வாழ்கிறவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் பரப்பி விடுகிறார்கள்.
 • சார்ஸ், மெர்ஸ் வைரஸ் தொற்றுகளைப்போல அல்லாமல், இந்த கொரோனாவை பரப்புகிற சார்ஸ் கோவ்-2 வைரஸ், வீடுகளில் எளிதாக பரப்பி விடுகிறது.
 • அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரஸ் தொற்று நோயை ஏற்படுத்துகிற சார்ஸ் கோவ்-2 வைரஸ் குடும்பங்களில் உள்ள 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகளவில் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்கிறார்கள்.
 • இந்த ஆய்வு, உரிய நேரத்தில் தொடர்பு தடம் அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை சரியான நேரத்தில் தனிமைப்படுத்தி விட்டாலே கொரோனா பரவலை குறைப்பதில் நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்று சொல்கிறது.
 • தொடர்ச்சியான ஊகங்களின் அடிப்படையிலான இந்த ஆய்வு, கொரோனா வைரஸ் தொற்று அடைகாக்கும் காலம் எவ்வளவு தூரம் நீளும், எவ்வளவு காலத்துக்கு அறிகுறிகளுடன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு தொற்றை பரப்புவார்கள் என்பதையெல்லாம் இனிதான் உறுதி செய்ய வேண்டும் என்கிறது. இது ஏற்கனவே செய்துள்ள மதிப்பீடுகளின் துல்லியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் சொல்வது கவனிக்கத்தக்கது.
 • கொரோனா வைரஸ் தொற்று உள்ள நபர்கள், அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னர் தொற்றுநோயை மற்றவர்களுக்கு பரப்பும் தன்மை அதிகமாக உள்ளது, இது இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்துவதை மேலும் கடினமாக்கும் என்பது எங்கள் பகுப்பாய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது என்கிறார், இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி யாங் யாங்.
 • கொரோனா வைரஸ் தொற்று அடைகாக்கும் காலத்தில், பாதிப்புக்குள்ளான நபர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தொடர்பு தடங்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவது, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் முக்கிய அம்சமாக இருக்கும்.
 • கொரோனா வைரஸ் பரவலில் தனிநபர் நிலை வெளிப்பாடு, மூன்றாம் நிலை பரவுதல், கண்டறியப்படாத நோய்த்தொற்று ஆதாரம், அறிகுறிகள் இன்றி தொற்று பாதித்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு பரவல் மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி ஆராய்ந்துள்ளனர்.
 • கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நபர், தொற்றை பாதிக்கப்படக்கூடிய நபருக்கு பரப்புவதற்கான சூழல், ஒன்றாக வாழ்கிற குடும்பங்களில், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருக்கிறது. வீட்டுடன் தொடர்பு இல்லாதவர்களுடன் பரப்பும் வாய்ப்பும் உள்ளது.
 • நெருங்கிய தொடர்புகள், அதாவது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நபர்களுடன் ஒரு மீட்டர் தொலைவுக்குள் இருக்கிறபோதும், அறிகுறிகள் தென்படுவதற்கு 2 நாட்களுக்குள்ளும் தொற்று பரவலுக்கு ஆளான நபர்கள் கண்டறியப்பட்டு, சோதிக்கப்பட்டு, 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டனர்.

தொற்று பாதித்த நபர்கள், வீட்டுடன் தொடர்பு இல்லாதவர்களுடன் (இரண்டாம் நிலை) தொற்று பரப்புவதற்கு 2.4 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.

ஒன்றாக வாழ்கிறவர்கள், குடும்ப உறுப்பினர்களிடையே தொற்று பரப்புவதற்கான வாய்ப்பு 17.1 சதவீதமாக இருக்கிறது. அதாவது 6-ல் ஒருவருக்கு பரப்புகிற வாய்ப்பு உள்ளது.

குடும்ப உறுப்பினர்களிடையே பரப்புகிற வாய்ப்பு 12.4 சதவீதம் ஆகும்.

 • பெற்றோர், பெரிய குழந்தைகள் ஒரே முகவரியில் வசிக்காமல் இருக்கலாம். இவர்களுக்கு கொரோனாவின் இரண்டாம் நிலை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. வீடுகளில் கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு குறைவாக தோன்றலாம். ஆனாலும் இது சார்ஸ் வைரஸ் தொற்றுக்கு (4.6-8 சதவீதம்) மதிப்பிட்டதை விட கிட்டத்தட்ட இரு மடங்கும், மெர்ஸ் வைரஸ் தொற்றுக்கு (4-5 சதவீதம்) மதிப்பிட்டதைவிட 3 மடங்கும் அதிகம்.
 • 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரிடையே வீட்டு தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. 20 வயது அல்லது அதற்கு குறைவான வயதினருக்கு இப்படி தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. இதனால் இந்த வயது பிரிவினர் கொரோனாவுக்கு தப்பலாம்.
 • கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான காலத்தை விட, தொற்று அடைகாக்கும் காலத்தில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இவ்வாறு ‘லேன்செட்’ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவுகள் உணர்த்தும் யதார்த்தம் ஒன்று உண்டு. யாருடனும் சேர்ந்து வாழாதீர்கள்; தனித்திருங்கள் என்பதுதான் அது!

முகநூலில் நாம்