ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக உயர்மட்ட அதிகாரியிடம் மனித உரிமைகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ள முக்கிய விடயங்கள்

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான ஒரேயொரு பிடிமானமாக இருக்கக்கூடிய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கையின் கட்டமைப்பு ரீதியான தோல்வி மற்றும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு என்பன உள்ளடக்கப்படுவதுடன் அது காத்திரமானதாகவும் அமையவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆசிய – பசுபிக் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் ரொரீ மன்கோவனிடம் வலியுறுத்தியுள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகள், நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் மோசமடைந்துவரும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தொடர்பில் விசேட கண்காணிப்பை மேற்கொள்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் எழுத்துமூல அறிக்கையில் மேலும் உள்ளடக்கப்படக்கூடிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கிலும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராயும் நோக்கிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆசிய – பசுபிக் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் ரொரீ மன்கோவன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் நாட்டை வந்தடைந்தார்.

அந்தவகையில் ரொரீ மன்கோவனுக்கும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்கை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கைதுகள், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் போன்ற விடயங்கள் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்குப் புதிதல்ல என்றும், அவர்கள் அவற்றைப் பல வருடகாலமாக அனுபவித்துவருகின்றனர் என்றும் ரொரீ மன்கோவனிடம் சுட்டிக்காட்டிய சிவில் சமூகப்பிரதிநிதிகள், புதிய அரசாங்கமொன்று பதவியேற்றிருப்பதனால் மாத்திரம் ஆட்சிமுறையும் நியாயாதிக்கத்தின் கீழான கட்டமைப்புக்களும் மாற்றமடைந்திருக்கின்றது என்று கூறமுடியாது எனவும் எடுத்துரைத்தனர்.

அதேபோன்று நாடு முகங்கொடுத்திருக்கும் கட்டமைப்பு ரீதியான தோல்வி மற்றும் ஊழல்மோசடிகள் தொடர்பில் அவரிடம் எடுத்துரைத்த சிவில் சமூகப்பிரதிநிதிகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் உள்ளிட்ட நிலைமாறுகால நீதிப்பொறிமுறை முற்றுமுழுதாகத் தோல்வி கண்டிருப்பதாகவும் எனவே நீதியைப் பெற்றுத்தரக்கூடியதும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் விரும்பப்படுவதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு முக்கியத்துவம் வழங்கி, அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் கடந்தகாலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகளை மேற்கொண்டு, பொறுப்புக்கூறலையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதைத் தடுத்திருக்க முடியும் என்றும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் ரொரீ மன்கோவனிடம் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான ஒரேயொரு பிடிமானமாக இருக்கக்கூடிய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கையின் கட்டமைப்பு ரீதியான தோல்வி மற்றும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு என்பன உள்ளடக்கப்படுவதுடன் அது காத்திரமானதாகவும் அமையவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆசிய – பசுபிக் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் ரொரீ மன்கோவனிடம் வலியுறுத்திய சிவில் சமூகப்பிரதிநிதிகள், நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் மோசமடைந்துவரும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தொடர்பில் விசேட கண்காணிப்பை மேற்கொள்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவரிடம் கேட்டுக்கொண்டதாக அறியமுடிகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்