”ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பேட் வாங்கக்கூட பணம் இல்லையா?”

சர்ச்சையைக் கிளப்பிய விளையாட்டுப் போட்டி

– கே.ஜி.பி

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசுப் பணி அதிகாரிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 4-ம் தேதி காலை தொடங்கிவைத்தார். ‘‘இந்த விளையாட்டுப் போட்டிக்கான செலவை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கட்டிவிட்டனர். எதற்கும் உபயோகமில்லாத இந்தப் போட்டியை மக்களின் வரிப்பணத்தில் நடத்துவது அவசியம்தானா?’’ என்று விளையாட்டுத் துறை அதிகாரிகள் பொருமுகின்றனர்.

சென்னை மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்து கிரிக்கெட் போட்டியைத் தொடக்கிவைத்தார். ‘‘விளையாடுவதால் மன இறுக்கம் தளர்ந்து, புத்துணர்ச்சி கிடைக்கிறது. உயர் அதிகாரிகளுக்கு உள்ள கடுமையான பணிச்சுமைகளால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் மன இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்துக்கு, இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

வெள்ளை பேன்ட், டி-ஷர்ட்டுடன் கிரிக்கெட் விளையாட ஆர்வமுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். போட்டியைத் தொடங்கிவைத்து சில நிமிடங்கள் விளையாடினார் முதல்வர். ஆனால், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் இறந்துவிட்ட தகவல் கிடைக்கவே, முதல்வரும் மூத்த அதிகாரிகளும் கிளம்பிவிட்டனர். மீதம் இருந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளைவைத்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. கூடுதல் தலைமைச் செயலாளர் ஒருவரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியால்தான் சர்ச்சை வெடித்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத் துறை அதிகாரிகள் சிலர், ‘‘இந்த கிரிக்கெட் போட்டிக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஐந்து லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இடையே மாநில, தேசிய அளவிலான போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. இதற்கென தனியாகச் செலவழிக்கிறோம். இதுபோதாதென, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பொழுதைக் கழிக்கும் வகையில் விளையாடுவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து இந்தப் போட்டியை நடத்துகின்றனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு டென்னிஸ் விளையாட்டு அரங்குக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் விளையாட வரும்போது, வாழைப்பழம், தண்ணீர் பாட்டில் முதற்கொண்டு எல்லாமே கீழ்நிலை அதிகாரிகள் தங்கள் செலவில் வாங்கி வைத்திருக்க வேண்டும். மற்றவர்களின் பணத்தில் இவர்கள் மஞ்சள் குளிப்பதால்தான், செலவுகளைச் சமாளிக்க கீழ்மட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்கவும் ஊழல் செய்யவும் முற்படுகின்றனர்.

மாவட்ட ஆட்சியர்களாக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடிப்படை ஊதியமாக 1.18 லட்சம் ரூபாய் வாங்குகின்றனர். முதன்மைச் செயலாளர் அந்தஸ்த்தில் இருப்பவர்கள் அடிப்படை ஊதியமாக 1.82 லட்சம் ரூபாய் பெறுகின்றனர். இவர்களால் ஒரு கிரிக்கெட் பேட்கூட வாங்க முடியாதா? இதற்கெல்லாம் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் செலவுசெய்ய வேண்டுமா? இந்த கிரிக்கெட் போட்டிக்கான செலவை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் சங்கங்களே ஏற்று நடத்தியிருந்தால் பிரச்னையே இல்லை. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கியதால்தான் விமர்சனங்கள் எழுகின்றன’’ என்றனர்.

இதுகுறித்து ஐ.ஏ.எஸ் சங்கத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். பெயர் வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பேசியவர், ‘‘இன்றுள்ள கடுமையான பணிச்சுமையால் உயர் அதிகாரிகளுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதைத் தளர்த்த வேண்டியதும் அரசின் பணிதான். தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் நலன் காக்க அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகள், சுற்றுலாக்களை ஏற்பாடு செய்கின்றனர். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளும் அவ்வப்போது தங்கள் பணியாளர்களுக்காக வங்கிகள் செலவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துகின்றன. அந்த வகையில்தான், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

மக்களின் நலனுக்காக இரவும் பகலும் அயராது உழைக்கும் அரசு ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இதுபோன்ற போட்டிகளை கீழ்நிலை அதிகாரிகள் வரையில் நடத்த வேண்டுமேயொழிய, இதற்கு ஏன் அரசுப் பணத்தைச் செலவழிக்கிறீர்கள் எனக் கேட்பது நியாயமல்ல” என்று விளக்கமளித்தார்.

முகநூலில் நாம்