ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு: காத்தான்குடியில் ஒருவர் கைது

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,
இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர்
காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய ஒருவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில்,
திங்கட்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமுடன்
தொடர்பில் இருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில்,  ஜ.எஸ். அமைப்பைச்
சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

2022 ஓக்டோபர் மாதத்தில் இந்தியா கோயம் புத்தூரில் இடம்பெற்ற
குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும்
ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை
நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரே
டிசெம்பர் 29 ஆம் திகதி இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்..

இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்
வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின்
உட்பகுதியில் சதித்திட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கையில் 2019 ஏப்ரல்
இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான்
ஹசீமுடன் தொடர்பில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவருடன் காத்தான்குடியைச்
சேர்ந்த 30 வயதுடையவர் முகநூலில் தொடர்புகளை பேணிவந்துள்ளதாக  இந்திய
உளவுத்துறை விசாரணையின் தெரியவந்ததையடுத்து  இலங்கை உளவுத்துறைக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச்
செல்லப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்