
நெருக்கடி காலத்தை சமாளிக்கும் விதமாக இடைக்கால கடன்களை பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கைகளை முன்னெடுப்பது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடனும் , உணவு மற்றும் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக ஐ.நாவின் ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்து இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டியிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் கலந்துரையாடியுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருந்த தொழிநுட்ப மட்ட கலந்துரையாடலின் பின்னர் முதற்கட்ட ஒப்பந்தங்களை இம்மாத இறுதிக்குள் செய்துகொள்வது குறித்தும் பணியாளர்கள் மட்டத்தில் உடன்படிக்கையை நிறைவு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவை விரைவில் நாட்டிற்கு அனுப்புமாறும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க இடைக்கால கடன் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார். இலங்கை மக்களுக்கு போதுமான உணவு மற்றும் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.