
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில்,
இலங்கைக்காக கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்கும் இரண்டாம் கட்ட
பேச்சுவார்த்தைகள் நேற்று (03) சூம் தொழிநுட்பத்தின் ஊடாக
முன்னெடுக்கப்பட்டது. இலங்கைக்கான இருதரப்பு கடன் வழங்குநர்கள், லஸாட்
மற்றும் கிளிஃபோர்ட் நிதி நிறுவன பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியத்தின்
அதிகாரிகள், இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் பிரதிநிதிகள்
ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுவரும் நிதி நெருக்கடி நிலைமைகள், மற்றும்
இலங்கைக்கு உடனடியாக தேவைப்படுகின்ற நிவாரணங்கள் குறித்து நிதி அமைச்சு
தெளிவுபடுத்தியுள்ளதுடன், பொருளாதார மேம்பாட்டுக்கான புதிய
வேலைத்திட்டங்கள் குறித்து மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு அதிகாரிகள்
தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்களை
பொது இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக இந்த கலந்துரையாடல்கள்
முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், இதன் பெறுபேறுகள் மூலமாக மட்டுமே
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை
கருத்தில் கொண்டு, இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள்
முன்னெடுக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க
தெரிவித்தார்.