என்றும் தீராத போரபிமானம்

“பால்ராஜ் பெரிய தளபதியா? நல்ல சண்டைக்காரரா? அவருக்கு போர் என்றால் பிடிக்குமா? போர் செய்யப் பயமில்லையா?” என்று கேட்டான் எங்களோடிருக்கும் பானு.

பானுவுக்கு இப்பொழுது பதினேழு வயது. யுத்த காலத்தில், யுத்தச் சூழலில் பிறந்து வளர்ந்தவன். தந்தை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருபது ஆண்டுகளுக்கு மேல் போராளியாக இருந்தவர். பெரியதொரு போர் வீரர். போரில் வலது கால் சிதைந்து மூன்று அங்குலம் குறைந்து விட்டது. நடக்கும்போது ஒரு பெரியதொரு கெந்தல். எப்போதும் ஒரு காலை இழுத்திழுத்துத்தான் நடப்பார்.

போர் முடிந்த பிறகு எல்லாமே தலை கீழாகி விட்டன. புனர்வாழ்வளிக்கப்பட்டு இப்பொழுது அந்தக் கெந்தற் காலுடன் தினச் சம்பளத்துக்கு வீதிப் புனரமைப்புப் பகுதியில் வேலை செய்கிறார். வேறு வழியில்லை. இப்ப போய் அந்தப் போர்க் கதைகளையும் போர்த்திறனையும் யாரிடம் சொல்ல முடியும்? அதற்கு என்னதான் மதிப்புண்டு?

புலிகள் இயக்கத்தில் உறுப்பினர் என்றால் 99 வீதமும் போர் வீரர்களாகத்தான் இருப்பார்கள். விலக்குகள் உண்டு. அது அபூர்வம். அன்ரன் பாலசிங்கம், பொன் தியாகம், அன்பரசு போன்ற சிலர் மட்டுமே இந்த அபூர்வ விலக்குகளில் சேர்த்தி. மற்றும்படி மற்றவர்களெல்லாம் களம் கண்டவர்களே. காயப்பட்டவர்களே. அதாவது விழுப்புண் ஏற்றவர்களே!

யுத்தச் சூழலில், விடுதலைப் புலிப் போராளி (போர் வீரர்) ஒருவரின் மகனாகப் பானு பிறந்திருந்தாலும் இன்று  அவனுக்குப் புலிகளைப் பற்றிய செய்திகளும் போர் பற்றிய கதைகளும் புதியவையே. யுத்தம் நடந்த காலத்தில் அவன் ஐந்து வயதுப் பையன். எதையும் சரியாக நினைவில் வைத்துக்கொள்ளவோ ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்துப் புரிந்து கொள்ளவோ கூடிய வயதில்லை அது. ஆனால் இப்பொழுது மங்கிய பழைய ஓவியத்தை அல்லது மங்கிய புகைப்படத்தைப் பார்ப்பதைப்போல அந்த நினைவுகள் அவனிடம் மேலெழுந்து வருகின்றன.  அவை கேள்விகளை எழுப்புகின்றன.

உண்மைதான். புலிகளின் போர்க் கதைகளும் அவர்களுடைய போர்க்கலையும்  வியப்பூட்டுவன. பானுவுக்கு மட்டுமல்ல, பலருக்குமே. புலிகளை எதிர்ப்போருக்கும் அவர்களைக் கடுமையாக விமர்சிப்போருக்கும் கூட ஆச்சரியமான இந்த உள் விருப்புண்டு.

இதற்குக் காரணம் புலிகளைத் தவிர, பல நூற்றாண்டுகளுக்கு மேல் ஒழுங்கமைக்கப்பட்ட போரியல் வரலாறும் போரை நடத்திய போராளுமைகளும் நம்மிடம் இல்லை என்பதேயாகும். இலங்கை, இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்ப்பரப்பின் உண்மை நிலை இதுவே. இதற்குள் வீரபாண்டிய கட்டப்பொம்மன், பண்டார வன்னியன் போன்ற சில போர் வீரர்களும் சிறிய அளவிலான அவர்களுடைய எதிர்ப்பு முனைப்புகளும் இருந்தாலும் அவை எதுவும் முழு அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட போராகவும் போர்க்கலையாகவும் இருக்கவில்லை. அதற்கு முன்னர் சோழப் பேரசு உள்ளிட்ட மன்னராட்சிக் காலப்  படைநடவடிக்கைகளும் புனைவில் விபரிக்கப்பட்டுள்ளனவே தவிர, போரியல் நூல்களாகவோ ஆய்வுகளாகவோ இல்லை.

விலக்காக 400  ஆண்டுகளுக்குப் பின்னர் ஈழப்போராளிகளே ஆயுதம் ஏந்தியிருக்கிறார்கள். லெபான், இந்தியா, இலங்கை எனப் பல இடங்களிலும்  முறையான  இராணுவப் பயற்சியைப் பெற்றவர்கள். அவர்களே போரையும் நடத்தியிருக்கிறார்கள். அதிலும் கிட்டிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நவீன போர் அது. ஆகவே நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஈழப்போராளிகளே போர் வீரர்களாகவும் நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்யக் கூடிய அதிவல்லமை உடையோராகவும் சாகஸக்காரராகவும் இருந்துள்ளனர்.

போர் என்பதே அதிவல்லமையும் சாகஸமும் இணைந்த ஒன்றுதான். இதனால்தான்  அதற்கு எப்போதுமே பெரியளவிலான ஈர்ப்புண்டு. அது இதிகாசங்களில் கூறப்படும் போராக இருந்தாலும் சரி, வரலாற்றுப்  போர்களாக, உலகப் போர்களாக, விடுதலைப் போர்களாக இருந்தாலும் சரி அவற்றின் மீது பலருக்கும் ஈர்ப்பு ஏற்படுவதற்குக் காரணமே இதுதான். போர் வெறுப்பாளர்கள், எதிர்ப்பாளர்களைக் கூட ஒரு கணம் தடுமாற வைத்து விடும் இந்த அதிவல்லமைகளும் சாகஸத்தன்மைகளும்.

இந்த அடிப்படையில்தான் ஈழப்போருக்கும் அதைப் பெருமெடுப்பில் நடத்திய புலிகளுக்கும் தமிழ்ப்பரப்பில் பெரும் மதிப்பும் ஈர்ப்பும் உள்ளது. ஈழப் போராட்டமும் போரும் புலிகளும் தோல்வியைக் கண்டாலும் அதை மீறியும் பலரிடத்திலும் இந்த ஈர்ப்பிருப்பதைக் காணலாம். இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேணுமென்றால், வீரபாண்டிய கட்டப்பொம்மன், பண்டாரவன்னியன்,  சங்கிலியன் போன்றோர் தங்களுடைய எதிர்ப்பிலே – போரிலே வெற்றியடையவில்லை. ஆனாலும் இவர்களைத் தமிழுலகம் அளவுக்கதிகமாகக் கொண்டாடுகிறது. வீரர்களாகப் போற்றுகிறது. இலக்கியப் பிரதிகள், நாடகம், சினிமா என்ற பிற கலை வெளிப்பாடுகள் மற்றும் சிலைகளை வைத்துப் போற்றுதல் எனப் பல வகையில் இந்தக் கொண்டாட்டத்தைப் பார்க்கலாம். இதற்குக் காரணம், தோற்றுப் போனாலும் ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைக்கும் எதிர்ப்பாளர்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள். சிறிய அளவிலேனும் போரிட்டிருக்கிறார்கள் என்பதே. முக்கியமாகப் போரிட்டிருக்கிறார்கள் என்பதாகும்.

இவ்வாறுதான் புலிகளின் தோல்வியையும் ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சியையும் விட அந்தப் போரும் அதில் அவ்வப்போது ஈட்டப்பட்ட  (ஓயாத அலைகள், தீச்சுவாலை, நடவடிக்கைகள், ஆனையிறவு மீட்பு, அனுராதபுரம்,  கட்டுநாயக்க விமானத்தளத் தாக்குதல்கள் போன்ற பெரும்) வெற்றிகளும்  உண்டாக்கிய பெருமிதங்கள் ஈர்ப்புக்குரியனவாக உள்ளன.

இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்ல முடியும். புலிகள் இருந்த காலத்தில் எழுதப்பட்ட ஆக்கங்கள், (நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் அரசியல்) பிரதிகளை விடவும் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எழுதப்பட்ட ஆக்கங்களும் பிரதிகளும் அதிகளவாக இருக்கின்றன. இப்பொழுதுதான் அவர்களைப் பற்றிப் பேசப்படுவதும் அதிகமாக உள்ளது.  அந்தளவுக்கு உலகெங்கும் உள்ள தமிழர்களிற் பெரும்பாலானோர் இன்னும் புலிகளின் மீது பேரபிமானமும் (போரபிமானமும்) உள்ளோராகவே உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை புலிகள் தோற்கவில்லை. பதிலாகத் தோற்கடிக்கப்பட்டனர் என்பதேயாகும்.

தோற்றதும் தோற்கடிக்கப்பட்டதும் என்ற இந்த இரண்டும் ஒன்றுதானே என நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த இரண்டு சொற்களுக்கும் இடையில் நுட்பமான வேறுபாடுண்டு என இவர்கள் எண்ணுகிறார்கள். தோற்கவில்லை என்பது, புலிகளிடத்தில் உள்ள தவறுகள், பலவீனங்களால் தோற்றுப்போனதாகக் கொள்ளப்படும். மாறாகத் தோற்கடிக்கப்பட்டது என்பது என்னதான் திறமையும் ஆற்றலும் வலுவும் வல்லமையும் இருந்தாலும் அதை மிஞ்சிய சக்திகளாலும் பலத்தினாலும் தோற்கடிக்கப்பட்டது எனக் கொள்ளப்படுகிறது. இதனால்தான் “40 நாடுகள் சேர்ந்து தொடுத்த யுத்தம் அது. வல்லரசுகள் திரைமறைவில் நடத்திய சதி. இலங்கை அரசு மட்டும் அந்த யுத்தத்தை நடத்தியிருக்குமானால் அது நிச்சயமாகத் தோல்வியைத் தழுவியிருக்கும்” என்று இவர்கள் சொல்கிறார்கள்.  

உண்மைதான், புலிகளின் போர் மிக நூதனமான பல உள்ளடக்கங்களைக் கொண்டது. கெரில்லாத் தாக்குதல் என்ற மறைந்திருந்து தாக்கும் நடவடிக்கையிலிருந்து மரபுப் படையாக நேருக்கு நேர் நின்று போரிடுவது வரை இது பல வடிவங்களைக்கொண்டது. இதற்கான பயிற்சியையும் படைக் கட்டமைப்புகளையும் தகுதியான ஆயுதங்கள் மற்றும் ஆளணியையும் அவர்கள் கொண்டிருந்தனர். தேவைப்படுமிடங்களில் பொருத்தமான முறையில் மிக உச்சமாகப் போரிடும் நுட்பத்தையும் பெற்றிருந்தனர். இது அவர்களிடம் சிறப்பானதொரு இராணுவத் தன்மையையும் இராணுவத் தந்திரோபாயத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டதாக அமைந்தது. முக்கியமாக இராணுவப் புலனாய்வு, வேவு போன்றவற்றுக்கான கட்டமைப்புகள் சிறப்பான முறையில் இயங்கின. மேலும் கண்ணி வெடிகள், மிதி வெடிகள், பொறி வெடிகள், கிளேமோர் தாக்குதல்கள் என எதிரியைத் திணறடிக்க வைக்கும் தாக்குதல்களும் ஏராளமாக இருந்தன. இதற்கப்பால் தரைப்படை, கடற்படை, விமானப் படை என்று போரியல் அடிப்படைக்குத் தேவையான மூன்று படைக் கட்டமைப்புகளையும் புலிகள் கொண்டிருந்தனர்.

நவீனத்தமிழ்ப்பரப்பில் இத்தகைய இராணுவக் கட்டமைப்பையும் போரிடும் ஆற்றலையும் தனியாகக் கொண்ட வேறு அடையாளங்கள், கட்டமைப்புகள் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் விட எல்லோரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் கரும்புலிகள் என்ற தற்கொலைத் தாக்குதல்களும் அதற்கான கட்டமைப்பும் தனியாக – சிறப்பாக இருந்தது.

இவை அனைத்தும் இணைந்து திரட்சியடைந்த போர் வடிவத்தையே புலிகள் மேற்கொண்டனர். அல்லது தமது இலக்கை அடைவதற்காக இவற்றை அவர்கள் பயன்படுத்தினர். அல்லது ஆக்கிரமிப்புக்கு எதிரான தமது எதிர்ப்புக்கு இவற்றைக் கையாண்டனர். இவற்றின் மூலம் முப்பது ஆண்டுகளாக முன்னேற்றகரமான வெற்றிகளைப் பெற்றும் வந்தனர். இது தமிழரின் வரலாற்றில் புலிகளை மிகப் பிரமாண்டமானதொரு இராணுவ வல்லமைச் சக்தியென அடையாளப்படுத்தியது. இதைப்பற்றிய பல்வேறு ஆய்வுகளும் பார்வைகளும் இராணுவவியல் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுசன ஊடகப் பரப்பில் இராணுவத்துறை ஆய்வாளர்களான இக்பால் அத்தாஸ், தராகி சிவராம், கேணல் ஹரிகரன் உள்ளிட்ட பலர் இதைச் செய்தனர்.

ஈழப்போராட்டத்தின் தொடக்கத்திலேயே புலிகளிடம் இருந்த இந்த இராணுவத்தன்மையும் முதன்மைப்பாடுமே அவர்களை ஏனைய இயக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது. முக்கியமாக 1983 யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் மேற்கொள்ளப்பட்ட கண்ணி வெடித் தாக்குதல். இதனால் அரசியற் செயற்பாடுகளையும் விட ஆயுத நடவடிக்கைகளே ஈழப்போராட்டத்தில் முதன்மை பெற்றன. மக்களிடத்திற்  காணப்பட்ட எதிர்பார்ப்பும் ஈடுபாடும் கூட ஆயுதம் மற்றும் தாக்குதல் போன்றவற்றிலேயே குவிந்திருந்தது.

இது உண்டாக்கிய பெருமிதமும் கவர்ச்சியும் ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் பிரதிபலித்தது. ஏனைய அரசியல் வழி இயக்கங்களையும் விட விடுதலைப் புலிகளின் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் பலருக்கும் ஈர்ப்பு உண்டாக்கியது. புலிகளையும் பிரபாகரனையும் போற்றிப் பாடத் தொடங்கினர். இது வளர்ந்து பின்னாளில் போரியல் ரீதியாக புலிகளின் இராணுவத் தந்திரோபாயமும் இராணுவப் பொறிமுறையும் தனியாக ஆய்வுப்  பொருளாகியது.

ஆகவே எல்லாவற்றுக்கும் அப்பால், போரின் ஈடுபாடே பலரிடத்திலும் உள்ளுறைந்திருப்பதைக் காணமுடிகிறது. அவர்கள் அறிந்தும் அறியாமலும் இது சங்க காலத்திலிருந்து இன்றுவரையில் தொடரும் ஒரு உளவியல் அம்சமாகும். புறநானுற்று வீரத்தைப் போற்றுவதும் வீரர்களுக்கான நடுகல் வழிபாட்டைச் சிறப்பாக உணர்வதும் அதை இன்றைய மாவீரர்களாக மீளுருவாக்கம் செய்வதும் இந்த உளவியலின் தொடர்ச்சியே. சோழப் பேரரசைத் தமிழர்கள் பெருமையோடு நினைவிற் கொள்வதன் அடியில் உள்ளதும் இந்தப் போர் வெற்றியின் விளைவுகளே.

போரின் ஒரு பக்கம் இழப்புகளையும் மிகப் பெரிய அவலத்தையும் துயரையும் தருவதாக இருந்தாலும் அதன் மறுபக்கம் களிப்பூட்டுவதே.

இதுவே பானுவிற்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. தன் தந்தையின் கால் பற்றிய அக்கறையையும் விட, அவருடைய இன்றைய கடினமான வாழ்க்கைப்பாடுகளையும் விட அவனுக்கு ஈர்ப்பாக இருப்பது பால்ராஜ் போன்ற தளபதிகளைப் பற்றி அறிவதும் புலிகளின் போர்த்திறன் பற்றித் தேடுவதுமாகும்.

வேட்டையாடும் உயிரியல்பின் ஈர்ப்பு விதி இது எனலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்