எங்களிடம் பேசுங்கள் துருக்கியிடம் அல்ல… ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடும் சிரியா

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 


கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது.

இட்லிப் மாகாணத்தில் ரஷியாவின் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள தனது படைகளுக்கு வலு சேர்க்க தனது கூட்டணியான ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பிடம் துருக்கி அதிபர் எர்டோகன் ராணுவ உதவி கேட்டார். ஆனால், துருக்கி படைகள்  சிரியாவின் எல்லைக்குள் இருப்பதால் நேட்டோ படைகள் உதவி செய்ய மறுத்துவிட்டன.


இதனால் ஆத்திரமடைந்த அதிபர் தாயிப் எர்டோகன் தனது நாட்டில் அகதிகள் சுமார் 35 லட்சம் பேரும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல எல்லைகளை திறந்துவைத்துள்ளார். 


இதனால் சிரியா, ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் தினமும் கிரீஸ் வழியாக ஐரோப்பாவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சி செய்துவருகின்றனர். 

இந்த அகதிகள் சட்டவிரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க கிரீஸ் நாடு தனது எல்லையில் ராணுவத்தை குவித்துவைத்துள்ளது. 


ஆனாலும், வேலிகளை தாண்டியும், இரவு நேரங்களில் ஆறுகளை கடந்தும் கிரீஸ் எல்லைக்குள் அகதிகள் நுழைந்துவருகின்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் துருக்கி-கிரீஸ் எல்லையில் கடந்த சில வாரங்களாக பதற்றமான சூழல் நிலவிவருகிறது.


இதற்கிடையில், இட்லிப் விவகாரத்தில் தங்களுக்கு உதவவாவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளை அனுப்புவதை நிறுத்தமாட்டோம் என துருக்கி எச்சரிக்கை விடுத்தது. 


இந்த நடவடிக்கையால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனுடன் ஐரோப்பிய யூனியனின் தலைவரும் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.


இந்நிலையில், சிரியாவில் அமைதியை நிலைநாட்ட விரும்பினால் எங்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துங்கள் என அதிபர் பஷர் அல் அசாதின் ஆலோசகர் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அதிபரின் ஆலோசகர் போதனியா ஷாபேன் கூறியதாவது:-


சிரியாவில் அமைதியை நிலைநாட்டவும், இந்த விவகாரத்தில் பங்குபெறவேண்டும் என பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் விரும்பினால் அவர்கள் சிரிய அரசிடம் தான் பேசவேண்டுமே தவிர துருக்கி அதிபர் எர்டோகனிடம் அல்ல என்ற உண்மையை புரிந்துகொள்ளவேண்டும்.


சிரிய அரசு சிரியா மக்களுக்காக பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகிறது. ஆனால், இதில் ஐரோப்பியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகிற்கும் நன்மை கிடைக்கும். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உண்மையை புரிந்துகொண்டு சிரியாவுக்கான தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளவேண்டும்’’ என்றார்.

முகநூலில் நாம்