
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர் கோரிய தகவலை இம்
மாதம் 25 ஆம் திகதிக்குள் வழங்கவேண்டும் தவறின் நீதி மன்றில் வழக்குத்
தாக்கல் செய்யப்படும் என இலங்கை தகவல் அறியும் ஆணைக்குழு கிளிநொச்சி
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வன் கடந்த மார்ச் மாதம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்ட
வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு வருகின்ற மாகாண விசேட பெண் நோயியல்
மருத்துவ மனை தொடர்பில் தகவல்களை கோரியிருந்தார்.
ஆனால் குறித்த தகவல்களை வழங்குவதனை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் பணிமனை தவிர்த்திருந்தது எனவே இது தொடர்பில்
குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு ஊடகவியலாளரால் 29.03.2022 அன்று முறையீடு
செய்யப்பட்டிருந்தது எனவே அதற்கும் தகவல்கள் வழங்கப்படவில்லை. இந்த
நிலையில் தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் 30.06.2022 அன்று ஊடகவியலாளரால்
முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு அமைய இன்றைய தினம் (03) குறித்த விடயம் தொடர்பில் சூம் இணைய
வழியில் தகவல் அறியும் ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டது. இதன் போது
குறித்த தகவல்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் விசேட வெளிநாட்டு நிதி
ஒதுக்கீடு மூலம் பணிகள் இடம்பெற்று வருகின்றது ஆகவே இதன் தகவல்கள் மாகாண
சுகாதார சேவைகள் திணைக்களம் அல்லது மத்திய சுகாதார
அமைச்சிடம்தான் உள்ளன என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் ந. சரவணபவன் தகவல் அறியும் ஆணைக்குழுவின் முன் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் ஊடகவியலாளர் கோரிய
தகவல்களை ஐனவரி 25 ஆம் திகதிக்குள் உரிய இடத்தில் பெற்று வழங்குவதோடு
தங்களுக்கும் பிரதியிட வேண்டும் என உத்தரவிட்டதோடு தவறின் நீதி மன்றில்
வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் எச்சரித்தது.
இதன் போது கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆணைக்குழுவிடம்,
ஊடகவியலாளர் ஆணைக்குழு அனுப்பிய கடிதங்கள் உள்ளிட்ட விடயங்களை முகநூலில்
பதிவிடுகின்றார் இதனை கட்டுப்படுத்த வேண்டும் எனக் தெரிவித்தார். இதற்கு
பதிலளித்த ஆணைக்குழு முகநூலில் பதிவிடுவதற்கு எதிராக ஆணைக்குழு எதுவும்
செய்யமுடியாது அது ஆணைக்குழுவின் பொறுப்பல்ல என தெரிவித்துள்ளது.