ஊடகவியலாளர்களை விசாரணைக்கு அழைத்து தொடர்பாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை!

ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமைக்கு கவலை வெளியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தன்மைக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பொறுப்பற்ற வகையிலும் செயற்பட்ட அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் ஒத்துழைப்பிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து இன்று வியாழக்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வெவ்வேறு ஊடக நிறுவனங்களிலுள்ள பிரதம ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த முறைமையானது வழமையானதொரு நடைமுறை அல்ல என்பதுடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ஏதேனுமொரு விசாரணையை மையப்படுத்தி ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த ஊடக நிறுவனத்தினால் ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும். ஆனால் குறித்த ஊடக நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் அல்லது ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பதில்லை.

இந்த சம்பவத்தின் காரணமாக பிரதம ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளமைக்கு கவலை தெரிவிக்கின்றோம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தன்மைக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பொறுப்பற்ற வகையிலும் செயற்பட்ட குறித்த அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் ஒத்துழைப்பிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்கள் உட்பட பொது மக்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான உரிமைக்கு இலங்கை பொலிஸ் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மதிப்பளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்