உலக உணவுத் திட்டத்திற்கு 2020 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு

2020 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) வழங்கப்பட்டுள்ளது. 
உலகளாவிய பசியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காக உலக உணவுத் திட்டத்திற்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்துக்கு பரிசுத் தொகையை 10 மில்லியன் சுவீட்டிஸ் குரோனும் வழங்கப்பட்டுள்ளது.
பெளதீகவியல், இரசாயனவியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டுக்கு பெளதீகவியல், மருத்துவம், இரசாயனவியல், இலக்கியம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு வெற்றி பெற்றவர்கள் யார் என்பது கடந்த சில தினங்களாக அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், உலக உணவுத் திட்டத்திற்கு (World Food Programme – WFP) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


பசியை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காகவும், மோதல்கள் நிறைந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட பங்களித்ததற்காகவும், பசியை ஆயுதமாக பயன்படுத்தி போர்களையும், மோதல்களையும் உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தடுக்க முக்கிய சக்தியாக செயல்பட்டதற்காகவும் உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் அமைதிக்கான நோபல் பரிசு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான பராக் ஒபாமா மற்றும் ஜிம்மி கார்ட்டர், மலாலா யூசுப்சாய், கோபி அனன், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்