உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரேநாளில் 337 பேர் உயிரிழப்பு

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 124 நாடுகளுக்கு பரவி இருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா சீனாவில் ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கி உள்ளது. அங்கு தற்போது வைரசின் தாக்கம் குறைந்து வருகிறது.

சீனாவில் நேற்று கொரோனா வைரசுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நேற்று தான் சீனாவில் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 169 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

அதேபோல் நேற்று புதிதாக 18 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 80 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் 4 ஆயிரத்து 257 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இதற்கிடையே எந்த நாட்டில் இருந்தும் சீனாவுக்கு வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது சீனாவில் ஏற்பட்ட கடும் பாதிப்பு போன்று தற்போது ஐரோப்பிய நாடான இத்தாலியில் தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். இத்தாலியில் கொரோனா வைரசுக்கு நேற்று முன்தினம் 168 பேர் உயிரிழந்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்றும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 196 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து நேற்று தான் அதிகம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

அதேபோல் நேற்று 2 ஆயிரத்து 313 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 462 -ஆக உயர்ந்தது.

இத்தாலியில் கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்களிடம் பீதி நிலவுகிறது. சாலைகளில் நடமாட அச்சப்படும் நிலை உள்ளது. குறிப்பாக வடக்கு பிராந்திய பகுதிகள், ரோம், மிலன், வெனீஸ் ஆகிய நகரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அதை கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது.

ஈரானில் நேற்று கொரோனா வைரசுக்கு 63 பேர் பலியானார்கள். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 354-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் 9 ஆயிரமாக உயர்ந்தது.

தென்கொரியாவில் பலி எண்ணிக்கை 66-ஆக உயர்ந்தது. நேற்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 7 ஆயிரத்து 869 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

ஐரோப்பியாவில் உள்ள மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பிரான்சில் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 48-ஆக உயர்ந்தது. புதிதாக 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2 ஆயிரத்து 281 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஸ்பெயினில் கொரோனாவுக்கு பலி 55-ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 277-ஆக (புதிதாக 582 பேர்) அதிகரித்தது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து 11 மாகாணங்களில் அவசர நிலை பிரடகனப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மேலும் 8 பேர் உயிரிழந்ததால் பல எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் நேற்று ஜப்பான் பெல்ஜியத்தில் தலா 3 பேரும், இங்கிலாந்தில் 2 பேரும், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், லெபனான், பிலிப்பைன்ஸ், அயர்லாந்து, இந்தோனேஷியா, அல்பெனியா, பனாமா, பல்கேரியாவில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 337 பேர் பலியாகி இருக்கிறார்கள். 7 ஆயிரத்து 352 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 633 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தற்போது 124 நாடுகளுக்கு பரவி உள்ளதால் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

முகநூலில் நாம்