
சீனாவை உலுக்கி அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பீதியை உண்டாக்கி கொண்டிருக்கிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் அங்கு தினமும் உயிரிழப்பு குறைந்து வருகிறது. அதே வேளையில் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஈரானில் வேகமாக பரவி உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இத்தாலி கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
அங்கு சில நாட்களாக தினமும் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள்.
உலகம் முழுவதும் 162 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
நேற்று ஒரே நாளில் 486 பேர் இறந்துள்ளார்கள். இதனால் உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 7 ஆயிரத்து 171 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 82 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தாலியில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 158 ஆக உயர்ந்தது. ஐரோப்பிய ஸ்பெயினிலும் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 342 ஆக உயர்ந்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 942 ஆக உயர்ந்திருக்கிறது.
ஸ்பெயினில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பணிகள் தவிர மற்றவைகளுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரானில் இதுவரை 853 பேர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்து 991 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்கொரியாவில் தொடக்கத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு நேற்று 6 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மொத்தம் 81 பேர் பலியாகியிருக்கிறார்கள். 8 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வாஷிங்டன் உள்பட 11 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடியே உள்ளது. நேற்று 5 பேர் உயிரிழந்ததையொட்டி அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 91 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 4 ஆயிரத்து 708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பிரான்சிலும் பலி எண்ணிக்கை 148 ஆக உயர்ந்திருக்கிறது. அங்கு 6 ஆயிரத்து 630 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல் இங்கிலாந்தில் 55 பேரும் நெதர்லாந்தில் 24 பேரும் சுவிட்சர்லாந்தில் 19 பேரும், ஜெர்மனியில் 17 பேரும், பெல்ஜியத்தில் 10 பேரும், ஜப்பானில் 35 பேரும், டென்மார்க்கில் 4 பேரும், சுவீடனில் 7 பேரும், நார்வே, ஆஸ்திரியாவில், தலா 3 பேரும், கனடா, கிரீஸ், எகிப்து, போலந்து, ஹாங்காங், அல்ஜிரியாவில் தலா 4 பேரும், ஆஸ்திரேலியாவில் 5 பேரும், பிலிப்பைன்ஸில் 12 பேரும், ஈராக்கில் 10 பேரும், இந்தோனேஷியாவில் 5 பேரும், பலியாகியிருக்கிறார்கள்.
சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ஆறு கண்டங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்திருக்கின்றனர்.