உலகத் தலைவர்கள் ஜோ பைடன் வெற்றிக்கு மௌனம் காக்கும் சீனா, ரஷ்யா!

அமெரிக்காவின் அதிபர் தேர்தல், நெறிமுறைகளின்படி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்பதால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை எவ்விதக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை’ – சீனா.

அமெரிக்காவில் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தியா உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். ஆனால், அமெரிக்காவின் அண்டை நாடான மெக்ஸிகோ உட்பட சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மௌனம் காத்துவருகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அந்நாட்டுச் செய்தி ஊடகங்கள் கடந்த 7-ம் தேதி அறிவித்தன. பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய ட்ரம்ப் ஆட்சியை வீழ்த்தி, வெற்றி வாகை சூடிய ஜோ பைடனின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். உள்ளூர் தலைவர்கள் தொடங்கி உலக நாடுகளின் தலைவர்கள் வரை பலர் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

ஆனால், சீனா, ரஷ்யா, மெக்ஸிகோ போன்ற நாடுகள் இதுவரை எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காதவண்ணமே இருந்துவருகின்றன. ட்ரம்ப் ஆட்சிக்காலத்திலல் சீன இறக்குமதிப் பொருள்களுக்கு அதிக வரி விதித்தது, கொரோனா பரவலின் தொடக்கத்தில், அவர் சீனாவைக் குறிவைத்து பல்வேறு சர்சைகளை ஏற்படுத்தியது போன்ற நிகழ்வுகளால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நட்புரீதியிலும், வர்த்தகரீதியிலும் பனிப்போரே நிலவிவந்தது. இருப்பினும், சீனா தரப்பிலிருந்து ட்ரம்ப் தோல்விக்குப் பின்னர் அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இது குறித்து அந்நாட்டு ஊடகங்களுக்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றிருப்பதாக செய்திகள் வெளியானதை கவனித்துவந்தோம். ஆனால், இவை அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நெறிமுறைகளின்படி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்பதால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. சீனா சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றும்” என்று தெரிவித்தார்.

`ட்ரம்ப தொழில்ரீதியாக சீன நிறுவனங்களுடன் நெருக்கம் காட்டிவந்தார். அதனால், ஜோ பைடன் வெற்றிக்கு உடனடியாக கருத்து தெரிவித்தால், அது ட்ரம்ப்பை அவமதிக்கும்விதமாக மாறிவிடும்’’ என்று சீனா எண்ணுவதாக ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

அமெரிக்காவில் தேர்தல் பணி அதிகாரபூர்வமாக இன்னும் முடிவடையாத நிலையில், குடியரசுக் கட்சி ஆதரவாளர்களும் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்ற ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணிக்கு முன்னுரிமை அளித்து, ஜோ பைடன் தரப்பு அதற்காகத் தீவிரமாக செயலாற்றத் தொடங்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்