உக்ரைன் சென்றுள்ள 4 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள்

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவா்கள் உக்ரைனுக்கு சென்றுள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோன், ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz), இத்தாலிய பிரதமா் மரியோ டிராகி (Mario Draghi), ருமேனியா அதிபா் க்ளாஸ் லொஹானிஸ் (Klaus Iohannis)ஆகியோா் நேற்று உக்ரைனுக்கு சென்றுள்ளனர்.

போலந்திலிருந்து சாலை வழியாக தலைநகா் கீவுக்கு சென்ற அவா்கள், ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து, பின்னா் அவா்கள் பின்வாங்கிச் சென்ற புகா் பகுதியை பாா்வையிட்டுள்ளனா். மிக மோசமான போா்க்குற்றங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் புச்சா நகருக்கும் சென்றுள்ளனா்.

ரஷ்யா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் அவர்கள் நடத்திய படுகொலைகள் கண்டனத்திற்குரியவை எனவும் பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

இவா்களது பயணத்தின்போது உக்ரைன் அதிபா் வொலோடிமீா் ஸெலென்ஸ்கியும் உடனிருந்தாா்.

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு போதிய உதவிகளை வழங்கவில்லை என்று ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது. மேலும், போா் தொடங்கிய பிறகும் ரஷ்ய அதிபா் விளாடிமிர் புதினுடன் குறித்த நாடுகளின் தலைவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தமை விமா்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில், அவா்கள் அனைவரும் தற்போது உக்ரைன் சென்று, அந்நாட்டிற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்