உக்ரைனிய அணுமின் நிலையத்தில் ஐ.நாவின் செயற்பாட்டுக்கு உக்ரைன் ஜனாதிபதி இணக்கம்

சபோரிசியா அணுமின் நிலையத்தில் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் சாத்தியமான நடவடிக்கை ஒன்றுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி இணங்கியுள்ளார்.

இந்த அணுமின் நிலையம் உள்ள வளாகத்தின் மீது தொடர்ச்சியாக இடம்பெறும் ஷெல் தாக்குதல்களால் அணுசக்தி பேரழிவு ஒன்று பற்றிய அச்சம் அதிகரித்த நிலையிலேயே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான், ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதிக்கு இடையே லிவிவ் நகரில் கடந்த வியாழக்கிழமை முத்தரப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசிய செலன்ஸ்கி, “ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி நிறுவனம், ஏனைய நிறுவனங்களினால் நிலைமையை கட்டுப்படுத்துவது மற்றும் முழுமையான வெளிபடைத்தன்மை ஒன்றினால் மாத்திரமே அணு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

எனினும் இந்தத் திட்டத்திற்கு ரஷ்யா இணங்கியுள்ளது பற்றி உறுதி செய்யப்படவில்லை.

தெற்கு உக்ரைனில் இருக்கும் அணு மின் நிலையத்தில் இருந்து ரஷ்யா தமது படைகளை உடன் வாபஸ் பெற வேண்டும் என்றும் அந்தப் பகுதியில் முன்னெடுக்கும் அனைத்து இராணுவ செயற்பாடுகளையும் உடன் நிறுத்த வேண்டும் என்றும் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

இந்த அணு மின் நிலையத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாக உள்ள சபோரிசியா அணுமின் நிலையத்தை ரஷ்ய துருப்புகள் உக்ரைன் போரின் ஆரம்பத்திலேயே கைப்பற்றி இருந்தன.

அணுமின் நிலையத்தை சூழ தொடரும் இராணுவ செயற்பாடுகள் பற்றி துருக்கி ஜனாதிபதி கவலை வெளியிட்டார். “மற்றொரு செர்னோபில் எமக்குத் தேவையில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

அணுமின் நிலையத்தை சூழவுள்ள பகுதியை இராணுவமயமற்ற பகுதியாக மாற்ற வேண்டும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். “சபோரிசியாவில் ஏற்படு எந்த ஒரு சேதமும் தற்கொலையாகும்” என்று எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்