இஸ்லாமிய மதகுருவின் போராட்டங்களை சித்தரிக்கும் படத்துக்கு பாகிஸ்தானில் தடை

மதகுரு ஒருவரின் போராட்டங்களை சித்தரிக்கும் விருது பெற்ற திரைப்படம் ஒன்றுக்கு இஸ்லாமியவாத கட்சி ஒன்று எதிர்ப்பு தெரிவித்ததால் பாகிஸ்தான் அரசு அந்த திரைப்படத்தை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த திரைப்படத்தால் மக்கள் இஸ்லாம் மற்றும் முகமது நபிகளின் பாதையிலிருந்து விலகிப் போகலாம் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

‘ஜின்தகி டமாஷா’ (வாழ்க்கையின் நகைச்சுவைகள்) என்னும் அந்த திரைப்படம் திருமணம் ஒன்றில் நடனம் ஆடும் வீடியோ வைரல் ஆனதால் ஒதுக்கப்பட்ட மனிதரின் கதை.

அந்த திரைப்படத்தின் இயக்குநர் யாரையும் புண்படுத்துவது தனது நோக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற பாகிஸ்தான் இயக்குநர் சர்மத் கூசத்தான் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தால் அவருக்கும், அவரது குடும்பம் மற்றும் குழுவிற்கும் பல அச்சுறுத்தல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.

“மதத்தின் பெயரால் வெறுப்பு, அச்சம் மற்றும் கோபத்தை பரப்பாதீர்கள்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹெஹ்ரீர்-இ-லபைக் கட்சியின் செய்தி தொடர்பாளர் இந்த திரைப்படத்தின் கதை ‘தெய்வநிந்தனை’ செய்வதுபோல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

புசான் சர்வதேச திரைப்பட விழாவில், ‘ஜின்தகி டமாஷா’ திரைப்படம் திரையிடப்பட்டு, சிறந்த கற்பனை திரைப்பட பிரிவில் விருது வாங்கியது.

செவ்வாயன்று, பிரதமரின் தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆலோசகர் ஃபிடஸ் ஆஷிக் அவான், இஸ்லாமிய கருத்தியல் கவுன்சிலுடன் சென்சார் போர்ட் ஆலோசனை செய்யும்வரை படத்தை நிறுத்தி வைக்குமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்