
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்களிடமிருந்து
மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.
தேர்தல் நடவடிக்கைக்காக அரச அதிகாரம் மற்றும் வளங்கள் பயன்படுத்தப்படுவதை
தடுப்பது அரச அதிகாரிகள் பொறுப்பாகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று
அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிடைக்கப்பெறும்
தேர்தல் சட்ட மீறல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில்
குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி இடம்பெறுவதாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சிலர் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அதிகாரம் மற்றும் அரச
வளங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக பல முறைப்பாடுகள் எமக்கு
கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கைகளை தடுப்பதற்காக அரச அதிகாரிகள், குறிப்பாக உள்ளூராட்சி
மன்ற செயலாளர்கள், நகர ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேபோன்று வேட்பாளர்களும் மக்கள் பிரதிநிதியாவதற்கு தகுதியானவர்கள் என்ற
வகையில் செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், மக்கள் பொருளாதார கஷ்டத்தில்
இருக்கின்றனர். அதனால் உணவுப் பொதிகள், வேறு உதவிகள் அல்லது 5 ஆயிரம்
ரூபா பணம் போன்ற விடயங்களுக்காக மக்கள் தங்களதும் தங்கள் பிள்ளைகளினதும்
எதிர்காலத்தை அழித்துக்கொள்ளக்கூடாது.
இதுதொடர்பாக மக்கள் மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டும். ஏனெனில்,
வேட்பாளர்கள் இன்று வழங்கும் 5 ஆயிரம் ரூபாவுக்கு பதிலாக தேர்தலுக்கு
பின்னர் 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகம் பெற்றுக்கொள்ள முடியும்.
பணம், உதவிகளை வழங்கும் வேட்பாளர்கள் மக்களின் உண்மையான வேட்பாளர்களாகப்
போவதில்லை. அதனால் அவதானமாக இருக்கவேண்டும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எமது தேர்தல்
கண்காணிப்பு நடவடிக்கைகளின் முதற்கட்ட நடவடிக்கைகளை தற்போது நாங்கள்
ஆரம்பித்திருக்கிறோம். அதனால் தேர்தல் சட்டம் மீறப்படுகின்றமை தொடர்பான
முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு தேவையான தொலைபேசி இலக்கங்களை எதிர்வரும்
தினங்களில் அறிவிக்கவுள்ளோம் என்றார்.