இலங்கை, 3ஆவது அணியாக சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதி

பங்களாதேஷிற்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (01) கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய தீர்மானம் மிக்க பி குழு ஆசிய கிண்ண முதல் சுற்றுப் போட்டியில் 4 பந்துகள் மீதமிருக்க 2 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, 3ஆவது அணியாக சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் ஏற்கனவே சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதி பெற்றிருந்தன.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இலங்கை இன்னிங்ஸில் 7ஆவது ஓவரில் மெஹெதி ஹசனின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் முஷ்பிக்குர் ரஹிமிடம் பிடிகொடுத்த குசல் மெண்டிஸ், சற்று நேரத்தில் அப் பந்து நோபோல் என அறிவிக்கப்பட்டதால் துடுப்பாட்டத்தை தொடரும் வாய்ப்பை பெற்றார். அது இலங்கைக்கு திருப்புமுனையாகவும் அதிர்ஷ்டமாகவும்    அமைந்தது.

29 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த குசல் மெண்டிஸ் 60 ஒட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார்.

அத்துடன் பங்களாதேஷ் அணி அநாவசியமாக நோ-போல்கள் (4) மற்றும் வைட்களை (8) விசியமை, பிடிக்கான மீளாய்வு ஒன்றைத் தவறவிட்டமை, கடைசி ஓவர்களை வீச அனுபம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் போனமை,  என்பன அவ்வணியின் தோல்விக்கு மற்றைய காரணிகளாக அமைந்தன.

முதல் 3 ஓவர்களில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 13 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை, அடுத்த 2 ஓவர்களில் ஓட்ட வெகத்தை அதிகரித்து 21 ஓட்டங்களை விளாசியது.

ஆனால், ஈபாடொட் ஹொசெய்னின் அடுத்த ஓவரில் பெத்தும் நிஸ்ஸன்க (20), சரித் அசலன்க (1) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க இலங்கை அணி அழுத்தத்தை எதிர்கொண்டது.

மொத்த எண்ணிக்கை 59 ஓட்டங்களாக இருந்தபோது மெஹெதி ஹசனின் பந்துவீச்சில் குசல் மெண்டிஸ் விக்கெட் காப்பாளர் முஷ்பிக்குர் ரஹிமிடம் பிடிகொடுத்து ஆடுகளத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தார்.

ஆனால் அந்தப் பந்து நோபோல் என அறிவிக்கப்பட்டதால் குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்தார்.

எவ்வாறாயினும் அடுத்த ஓவரில் தனுஷ்க குணதிலக்க 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 67 ஓட்டங்களாக இருந்தது.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 10 ஓட்டங்கள் செர்ந்தபோது பானுக்க ராஜபக்ஷ வெறும் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஆனால், அதன் பின்னர் குசல் மெண்டிஸ், அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர். ஆனால்,குசல் மெண்டிஸ் தவறான அடி தெரிவின் மூலம் ஆட்டமிழந்தார். (131 – 5 விக்.)

அவர் 37 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைக் குவித்தார்.

அடுத்து களம் நுழைந்த வனிந்து ஹசரங்க டி சில்வா வந்த வேகத்திலேயே 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த தசுன் ஷானக்க 33 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததும் இலங்கை பெரும் நெருக்கடிக்குள்ளானது. (159 – 7 விக்.)

சாமிக்க கருணாரட்ன திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் அதிகப்பிரசங்கித்தனம் காரணமாக இல்லாத ஒரு ஓட்டத்துக்கு ஆசைப்பட்டு 10 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.

எனினும் அடுத்து களம் நுழைந்த அசித்த பெர்னாண்டோ என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்ற நோக்கில் துடுப்பை விசுக்கி அடித்து 3 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்ளைப் பெற்று இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் ஈபாதொத் ஹொசெய்ன் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் மிகவும் திறமையாகவும் சாதுரியமாகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களைக் குவித்தது.

எவ்வாறாயினும் பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஆரம்ப வீரர்களில் ஒருவரான சபிர் ரஹ்மான் 3ஆவது ஓவரில் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 19 ஓட்டங்களாக இருந்தது.

தொடர்ந்து மற்றைய ஆரம்ப விரர் மெஹிதி ஹசன் மிராஸுடன் 2ஆவது விக்கெட்டில் இணைந்த அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மெஹிதி ஹசன் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து அனுபவசாலியான முஷ்பிக்குர் ரஹிம் 4 ஓட்டங்களுடன் வெளியேற பங்களாதேஷ் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (63 – 3 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 24 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஷக்கிப் அல் ஹசன் 24 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (10.3 ஓவர்களில் 87 – 4 விக்.)

ஆனால், அதன் பின்னர் இலங்கை பந்துவிச்சாளர்களை பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் இலகுவாக பதம் பார்த்தனர்.

குறிப்பாக அபிப் ஹொசெய்னும் முன்னாள் அணித் தலைவர் மஹ்முதுல்லாவும் 5ஆவது விக்கெட்டில் 37 பந்தகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்திககொண்டிருந்தபோது அபிப் ஹொசெய்ன் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (144 – 5 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 3 ஓட்டங்கள் மாத்திரம் செர்ந்தபோது மஹ்முதுல்லா 24 ஓட்டங்களுடனும் மொத்த எண்ணக்கை 159 ஓடட்டங்களாக இருந்தபோது மெஹெதி ஹசன் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

ஆனால், மொசாடெக் ஹொசெய்ன், தஸ்கின் அஹ்மத் ஆகிய இருவரும் கடைசி 11 பந்துகளில் 24 ஓட்டங்களை விளாசி மொத்த எண்ணிக்கையை 183 ஓட்டங்களாக உயர்த்தினர். கடைசி ஓவரில் மாத்திரம் 17 ஓட்டங்கள் பெறப்பட்டது.

மொசாடெக் ஹொசெய்ன் 9 பந்துகளில் 4 பவுண்ட்றிகள் அடங்கலாக 24 ஓட்டங்களுடனும் தமிம் இக்பால் 6 பந்துகளில் ஒரு சிக்ஸ் அடங்கலாக 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவர்களை விட கட்டுப்பாட்டுடன் பந்துவீசிய மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் டில்ஷான் மதுஷன்க 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்