
தெற்காசியாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்கு ஓடி முடித்த ஒரே ஒருவரான இத்தாலியில் வாழ்ந்துவரும் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன், அமெரிக்காவின் ஒரிகொனில் 15 ஆம் திகதி வெள்ளிக்கிமை ஆரம்பமாகும் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
அத்துடன் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் நிலானி ரட்நாயக்கவும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேரட்னவும் பங்குபற்ற உள்ள மற்றைய இரண்டு இலங்கையர்களாவர்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும் வென்ற சுசன்திகா ஜயசிங்கவுக்குப் பின்னர் உலக மெய்வல்லநர் சம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லக்கூடியவராக யுப்புன் அபேகோன் கருதப்படுகிறார்.
ஒசாக்காவில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பின்ஷிப் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சுசன்திகா வெண்கலப் பதக்கம் வென்றபோது அவர் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் உலகில் 16ஆவது அதிசிறந்த நேரப் பெறுதியைக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர் இருபாலாரிலும் இலங்கை சார்பாக யாரும் உலகில் 20க்குட்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியைக் கொண்டிருக்கவில்லை.
ஆனால், யுப்புன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 9.96 செக்கன்களில் ஓடி தெற்காசிய மற்றும் தேசிய சாதனை நிலைநாட்டியதன் மூலம் உலகில் 15ஆவது அதிசிறந்த நேரப் பெறுதியைக் கொண்டுள்ளார்.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அதிசிறந்த நேரப் பெறுதியைக் கொண்டுள்ள 15 பேரில் ஓரிருவர் உலக மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றமாட்டார்கள் என அறிவிக்கப்படுகிறது.
இந் நிலையில் சுசன்திகாவை போன்று யுப்புன் அபேகோன் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்களுக்கான 100 மீற்றர் முன்னோடி தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் இலங்கை நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அதேவேளை, யுப்புன் அபேகோன் பங்குபற்றும் திறன்காண் போட்டி இலங்கை நேரப்படி சனிக்கிழமை (16) காலை 7.20 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த வருடம் 100 மிற்றர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்குள் ஓடி முடிக்கவேண்டும் என்பதும் உலக மெய்வல்லுநர் போட்டியில் அரை இறுதிவரை முன்னேறவேண்டும் என்பதும் யுப்புன் அபேகோன் மற்றும் அவரது பயிற்றுநர்களின் இலட்சியமாகும். அவற்றில் ஒன்று நிறைவேறியுள்ள நிலையில் இரண்டாவது குறிக்கோளை நிறைவேற்ற யுப்புன் முயற்சிக்கவுள்ளளார்.
திறன்காண் போட்டியில் வெற்றிபெற்றால் 17ஆம் திகதி (இலங்கை நேரப்படி காலை 7.20 மணி) நடைபெறவுள்ள அரை இறுதியில் யுப்புன் பங்பற்ற தகதிபெறுவார்.
இதேவேளை, இலங்கை நேரப்படி சனிக்கிழமை முற்பகல் 11.05 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பெண்களுக்கான 3000 மீற்றர் சட்டவேலி திறன்காண் போட்டியில் நிலானி ரட்நாயக்க பங்குபற்றவுள்ளார்.
பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் 9 நிமிடங்கள், 40.24 செக்கன்களுடன் உலக தரவரிசையில் 72ஆவது இடத்தில் உள்ள நிலானி ரட்நாயக்க, அதிசயம் நிகழ்த்தினாலன்றி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது இலகுவல்ல.
உலக மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றும் மூன்றாவது இலங்கையரான கயன்திகா அபேரட்ன 22ஆம் திகதி நடைபெறவுள்ள பெண்களுக்கான 800 மீற்றர் திறன்காண் போட்டியில் சாதிக்க முயற்சிக்கவுள்ளார்.
உலக தரவரிசையில் 90 ஆவது இடத்திலுள்ள கயன்திக்காவின் அதிசிறந்த நேரப்பெறுதி 2 நிமிடங்கள் 01.44 செக்கன்களாகும்.


