இலங்கை ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்

இலங்கையில் பாதுகாப்புப் படையினர் தலைநகர் கொழும்புவில் உள்ள முக்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்ட முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி கூடாரங்களை அகற்றத் தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே இருந்த போராட்டக்காரர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்குச் சில மணிநேரத்திற்கு முன்னதாக, நூற்றுக்கணக்கான துருப்புகள் மற்றும் போலீஸ் கமாண்டோக்கள் போராட்டக்காரர்களை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பிறகு இது நிகழ்ந்துள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் 13ஆம் தேதியன்று நாட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர், சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமாவை கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதியன்று ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு, 20ஆம் தேதியன்று நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்க, பொதுமக்களிடம் செல்வாக்கு இல்லாதவராகக் காணப்படுகிறார். மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

நாட்டின் நிதியைத் தவறாகக் கையாண்டமைக்காக ராஜபக்ஷ நிராகத்தின் மீது பலர் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரச்னையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்கள். ஆனால், அவர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மறுநாளே தெருக்களில் சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விக்ரமசிங்க பதவியேற்ற உடனேயே, அரசாங்கத்தைக் கவிழ்க்க அல்லது அரசாங்க கட்டடங்களை ஆக்கிரமிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் ஜனநாயகம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியதோடு, அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ராணுவத்தால் கலைக்கப்பட்ட போராட்டக்காரர்கள்

எதிர்ப்பு இயக்கத்தை விரைவில் அரசாங்கம் படிப்படியாக ஒடுக்கக்கூடும் என்று போராட்டக்காரர்கள் மத்தியில் கவலைகள் இருந்தன. ஜனாதிபதி செயலகத்தின் வளாகம் மாத்திரம் போராட்டக்காரர்களின் வசமிருந்த நிலையில், அதை இன்று மதியம் அரசாங்கத்திடம் கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்திருந்தனர்.

இருப்பினும், இலங்கையில் ஜனாதிபதி செயலகத்தை கடந்த 104 நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த போராட்டகாரர்கள், இன்று (22-07-2022) அதிகாலை ராணுவத்தால் கலைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் உள்ளிட்ட படை வீரர்களை ஈடுபடுத்தி, அரசாங்கம் ஜனாதிபதி செயலகம் மற்றும் அதை அண்மித்த வளாகத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய ராணுவம் மற்றும் போலீஸார் வரழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வீதிகளையும் ராணுவத்தினர், தடுப்பு வேலிகளை அமைத்து மூடியிருந்தனர்.

அதன்பின்னர், திடீரென ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வருகை தந்த ராணுவம், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.

ராணுவத்தின் தடியடி தாக்குதலை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள், ஜனாதிபதி செயலக வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியிலிருந்து இளைஞர், யுவதிகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்