இலங்கை பணிப்பெண்கள் விற்கப்பட்ட விவகாரம் தேசிய பிரச்சினை.

இலங்கை பணிப் பெண்கள் ஓமானில் விற்கப்பட்ட விவகாரம் தேசிய பிரச்சினையாக
கருதப்படும். இவ்விவகாரம் தொடர்பில் ஆராய விசேட குழு ஓமான் நாட்டுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாரபட்சமின்றிய வகையில் முறையான விசாரணைகள் எடுக்கப்படும் என பிரதமர்
தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இலங்கை பணிப்பெண்கள் ஓமான் நாட்டில் பகிரங்க
ஏலத்திற்கு விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின்
உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை பணிப்பெண்கள் ஓமான் நாட்டில் நெருக்கடிக்குள்ளான விவகாரம்
தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
பணிப்புரை விடுத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் ஆராய விசேட குழுவினர்
ஓமான் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் ஒருசிலர் தற்போது கைது
செய்யப்பட்டுள்ளார்கள். இலங்கை பணிப்பெண்கள் இவ்வாறான நெருக்கடிகளை
எதிர்க்கொண்டுள்ளமை தேசிய பிரச்சினையாக கருதப்படும்.

இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான விசாரணை பாரபட்சமின்றிய வகையில்
முன்னெடுக்கப்படும் என்றார்.

சுமார் ஒன்பதரை இலட்சம்  இலங்கை பணிப் பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு
பணியகத்தில் பதிவு செய்து முறையாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்
வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஆனால் 16 இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு
பணியகத்தில் பதிவு செய்யாமல் முறையற்ற வகையில் மத்திய கிழக்கு
நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் தொடர்பில் அந்த நாடுகளில்
உள்ள இலங்கை தூதரகங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இலங்கையர்கள்
எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பில் ஆராயவும். முறையற்ற வகையில்
வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கவும் புதிய சட்டம் உருவாக்கப்படும்
என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்