இலங்கை சீன கப்பல் விவகாரத்தில் ஒரு நாட்டை நிச்சயம் பகைத்துக்கொள்ள நேரிடும் – ஹர்ஷ டி சில்வா

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இலங்கைக்கு முக்கியமானவை. சீன கப்பல் விவகாரத்தில் ஒரு நாட்டை நிச்சயம் பகைத்துக்கொள்ள நேரிடும். நாட்டின் வெளிவிவகார கொள்கை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமை சீன கப்பல் விவகாரத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார மீட்சிக்கான குறுகிய காலத்திட்டத்தை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நடைமுறைக்கு சாத்தியமான திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றிற்கு முன்வைக்கவில்லை.ஜனாதிபதி கொள்கை உரையில் பல சிறந்த விடயங்களை குறிப்பிட்டார்.இருப்பினும் அதனை செயற்படுத்தும் விதம் குறித்து தெளிவற்ற தன்மையே காணப்படுகிறது.

அதன் காரணமாகவே எதிர்க்கட்சியில் இருந்துக்கொண்டு பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளோம்.பொருளாதார மேம்பாடு,அரச கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட 10 பிரதான விடயங்களை உள்ளடக்கிய வகையில் பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தவறான பொருளாதார கொள்கை திட்டத்தை செயற்படுத்துகிறது என்பதை 2021ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிட்டோம். எமது கருத்திற்கு மதிப்பளித்திருந்தால் நாடு இன்று வங்குரோத்து நிலையினை அடைந்திருக்காது.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை உரிய காலத்தில் பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைளை 2021ஆம் ஆண்டே முன்னெடுத்திருக்க வேண்டும்.

எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு;ள்ளது,ஆகவே பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது என ஒருசிலர் குறிப்பிடுவது நகைப்பிற்குரியது.கி.யு.ஆர் முறைமை ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் சிறந்ததாக காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.சிறந்த விடயங்களை வரவேற்பது அவசியமானது.

சர்வக்கட்சி அரசாங்கத்தின் ஊடக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.யார் அமைச்சு பதவிகளை பெறுகிறார்கள் என்பது மக்களின் எதிர்பார்ப்பல்ல.பொருளாதார மீட்சிக்கான குறுகிய கால திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாவிடின் எதிர்வரும் மார்ச் மாதமளவில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தல் நடத்தினால் 225 உறுப்பினர்களில் 150இற்கும் அதிகமானோர் படுதோல்வியடைவார்கள்.போராட்டத்தில் ஈடுப்பட்ட சிறந்த தரப்பினர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகுவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தவறான நிர்வாகத்தில் வெளிவிவகார கொள்கையும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.யுவான் வான்-05 சீன கண்காணிப்பு கப்பல் விவகாரம் இலங்கைக்கும் சீனாவிற்கும்,இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவை பாதித்துள்ளது.

சீன கண்காணிப்பு கப்பல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் ஆரம்பத்தில் இராஜதந்திர மட்டத்தில் அவதானம் செலுத்தியிருக்க வேண்டும்.வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரியை நியமித்ததை தொடர்ந்து நாட்டின் வெளிவிவகார கொள்கை எந்தளவிற்கு சிறந்ததாக பேணப்படும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.இலங்கைக்கு சீனாவும் முக்கியம் அதேபோல் இந்தியாவும் முக்கியம் இந்த கப்பல் விவகாரத்தில் இரு நாடுகள் ஒரு நாட்டை நிச்சயம் பகைத்துக்கொள்ள நேரிடும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்