
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
திருகோணமலை துறைமுகத்துக்கு சொந்தமான 100 ஹேக்கர் நிலப்பரப்பினை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் இரகசியமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என அகில இலங்கை துறைமுக பொதுஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்துடன் கூட்டிணைந்து அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அவர் மேலும் குறிப்பிடுகையில்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்த போது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.
துறைமுக அபிவிருத்தி பணியில் இந்தியாவை பங்குதாரராக இணைத்துக் கொள்ள அரசாங்கம் அப்போது குறிப்பிட்ட காரணத்தை தற்போது மேற்கு முனைய அபிவிருத்தி விவகாரத்திலும் குறிப்பிடுகிறது.
இலங்கையின் துறைமுகங்களில் இந்திய நிறுவனங்களை பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ளாவிட்டால் அவர்களுடன் கூட்டிணைந்த துறைமுக சேவைகள் நிறுத்தப்படும் என்று குறிப்பிடுவது பொய்யான வாதமாகும்.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 82.1 சதவீதமான மீள்ஏற்றுமதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதில் 66 சதவீதமான மீள்ஏற்றுமதி நடவடிக்கைகள் இந்தியாவுடன் முன்னெடுக்கப்படுகிறது.
துறைமுக சேவையில் இந்தியா இலங்கையை ஒருபோதும் பகைத்துக் கொள்ளாது. அவர்களுக்கு கொழும்பு துறைமுகம் அத்தியாவசியமானதாக காணப்படுகிறது.
இதனாலேயே இந்தியா கிழக்கு முனையத்தை கைப்பற்ற அதிக அக்கறை காட்டியது. அரசாங்கமும் அவர்களுக்கு ஏற்றாட் போல் செயற்பட்டது.அனைத்து தரப்பினரது எதிர்ப்புக்களையும் ஒன்றினைந்து கிழக்கு முனையத்தை பாதுகாத்துள்ளோம்.
மேற்கு முனையத்தின் அபிவிருத்தியில் இந்திய நிறுவனத்தை பங்காளராக்கியுள்ளமைக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.
தேசிய வளங்களை பாதுகாப்பதாக குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கொள்கைக்கு முரணாக செயற்படுகிறது. மேற்கு முனையத்தை துறைமுக அதிகார சபை தேசிய மட்டத்திலான நிறுவனங்களுடன் கூட்டிணைந்து அபிவிருத்தி செய்ய முடியும்..அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
திருகோணமலை துறைமுகத்துக்கு சொந்தமான 100 ஹேக்கர் நிலப்பரப்பை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்க இரகசியமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்போம். தேசிய வளஙகளை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்படுவது அவசியமாகும் என்றார்.