இலங்கையில் 3 வாரங்களில் 9000 டெங்கு நோயாளர்கள்

நாட்டில் டெங்கு நோய் பரவும் வீதம் சடுதியாக அதிகரித்து வருகிறது. கடந்த 3 வாரங்களுக்குள் சுமார் 9000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலைமை அதிதீவிர நிலையை அடைவதற்கு முன்னர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த 3 வாரங்களில் சுமார் 9000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நிலைமையை உடனடியாக கட்டுப்படுத்தி , டெங்கு நோய் பாரதூர நோய் நிலைமையாக பரவுவதைத் தடுக்க வேண்டும்.

இதற்காக டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களை இனங்கண்டு அவற்றை தூய்மையாக வைத்திருப்பதோடு , வீடு மற்றும் தொழில் புரியும் இடங்கள் அமைந்துள்ள சுற்றுப்புறச் சூழலையும் தூய்மையாக வைத்திருப்பது அத்தியாவசியமானதாகும்.

(25) திங்கட்கிழமை தேசிய டெங்கு ஒழிப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கமைய சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒரு மணித்தியாலம் ஒதுக்கப்பட்டு டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதே போன்று பல்கலைக்கழகங்கள் , பாடசாலைகள் உள்ளிட்டவற்றிலும் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாண்டுடில் இதுவரையான காலப்பகுதியில் , அதாவது சுமார் 7 மாதங்களில் 44 000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரித்து வருவதால் , டெங்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவற்றை உதாசீனப்படுத்தாது , உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்