
இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார
ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக
மற்றும் அலுவலக கட்டிடத் தொகுதி (Mireka Tower) திறப்பு விழாவில் கலந்து
கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டுக்காக பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவினால்
அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட கட்டமைப்புகளை மீண்டும் செயற்படுத்தி
தற்போதைய மெதுவான செயற்பாடுகளுக்குப் பதிலாக செயற்திறன்மிக்க சட்ட
கட்டமைப்பை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதற்காக ஆணைக்குழுவொன்றை தான் நியமித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி,
அதன் கீழ் முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை
ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம் என்பவற்றை இணைக்கும் முதலீட்டு
ஊக்குவிப்பு நிறுவனமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம், இலங்கைக்கு புதிய வெளிநாட்டு முதலீடுகள் வர
ஆரம்பிக்கும் எனவும் இதன் மூலம் கிடைக்கும் அதிக வருமானத்துடன்,
வெளிநாட்டுக் கடன் பெறும் தீய சுழற்சியில் இருந்து இலங்கை வெளியேற
முடியும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.